முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசியலில் நட்சத்திரமாக ஜொலித்தது போலவே சினிமா உலகிலும் முடிசூடா ராணியாகக் கொண்டாடப்பட்டவர். டீனேஜிலேயே தொடங்கிய அவரது சினிமா கரியர், அரசியலுக்கு வந்ததால் விரைவிலேயே முடிந்து போனது. அரசியல்வாதியாக நம்மில் பலருக்கு ஜெயலலிதாவைத் தெரிந்திருக்கும். இந்தக் கட்டுரையில் நடிகை ஜெயலலிதா பற்றிய 9 சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
கிருஷ்ணர்
திரையில் நடிகையாகப் பயணத்தைத் தொடங்கும் முன்னரே, 1962-ம் ஆண்டு `Man Mauji’ என்ற பெயரில் மேடை நாடக ஸ்டைலில் நடந்த 3 நிமிட நடன நிகழ்ச்சியில் அவர் கிருஷ்ணராக நடித்திருந்தார்.
கோலிவுட் பயணம்
நடிகையாக கோலிவுட்டில் ஜெயலலிதாவின் திரைப்பயணம் 1965-ல் வெளியான `வெண்ணிற ஆடை’ படத்தில் தொடங்கியது. அந்தப் படத்தில் அருவியின் கீழ் ஸ்லீவ்லெஸ் அணிந்தபடி ஜெயலலிதா ஆடிய ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். இதனால், அந்தப் படத்துக்கு சென்சார் போர்டு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்தது. அப்போது ஜெயலலிதாவின் வயது 16. இதனால், தான் நடித்த படத்தையே அவரால் தியேட்டரில் பார்க்க முடியாமல் போனது.
சக்சஸ்ஃபுல் ஆன் ஸ்க்ரீன் ஜோடி
நடிகையாக அறிமுகமான முதல் ஆண்டிலேயே எம்.ஜி.ஆருடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஆன் ஸ்கிரீன் ஜோடிகளில் ஒன்றாக எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடி மாறியது. இவர்கள் இணைந்து 28 படங்களில் ஒன்றாக நடித்தனர்.
பாலிவுட் அறிமுகம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்த ஜெயலலிதா, பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்தார். 1968ம் ஆண்டு வெளியான இஸாத் படத்தில் தர்மேந்திராவுக்கு ஜோடியாக அவர் நடித்த நிலையில், அதன்பிறகு வந்த பாலிவுட் வாய்ப்புகளை ஏற்கவில்லை. அந்தப் படத்தில் ஜூம்கி என்ற ஆதிவாசிப் பெண் கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.
க்ரஷ்
நடிகையாக ஜெயலலிதா இருந்தபோது, இந்திய கிரிக்கெட் வீரர் நாரி காண்ட்ராக்டர் மீது அவருக்கு க்ரஷ் இருந்திருக்கிறது. அவரது ஆட்டத்தைக் காண்பதற்காகவே இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகளை நேரில் பார்க்கச் சென்றுவிடுவாராம். அதேபோல், 1961-ம் ஆண்டு வெளிவந்த `ஜங்லி’ பாலிவுட் படத்தில் நடித்த ஷம்மி கபூரும் அவருக்கு மிகவும் பிடித்தமான நடிகர். அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த `யாஹூ’ பாடலை அவ்வப்போது முணுமுணுப்பதுண்டு.
பாக்ஸ் ஆபிஸ் குயின்
அவர் முன்னணி வேடமேற்று நடித்த சுமார் 125 படங்களில் 117 படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தவை.
டான்ஸ்
மூன்று வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டவர். பரதநாட்டியம் தவிர, கதக், மோகினியாட்டம், மணிப்பூரி நடனங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
முதல் ஊதியம்
பி.ஆர்.பந்துலு இயக்கிய `சின்னட கொம்பே’ எனும் கன்னட படத்துக்காக ரூ.3,000 ஜெயலலிதாவுக்கு ஊதியமாக அளிக்கப்பட்டது. அதுவே அவர் பெற்ற முதல் ஊதியம். அந்தப் படம் தமிழில் முரடன் மருது என்ற பெயரிலும் ஹிந்தியில் கோபி என்ற பெயரிலும் தெலுங்கில் பல்லெட்டூரி சின்னோடு என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
ஃபிலிம் ஃபேர் விருதுகள்
1973ம் ஆண்டில் பட்டிக்காடா பட்டணமா’, சூர்யகாந்தி’ மற்றும் `ஸ்ரீகிருஷ்ண சத்யா’ என மூன்று படங்களுக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது அவருக்குக் கிடைத்தது. 1980-ம் ஆண்டு அவர் கடைசியாக `தேடிவந்த காதலா’ என்ற படத்தில் நடித்தார்.
Also Read – இந்த 11 ஹீரோயின்களுக்கு ரீல், ரியல் லுக்ல எவ்ளோ வித்தியாசம்..! நீங்களே கண்டுபிடிங்க…