கோவில்பட்டி அருகே பள்ளி மாதாந்திரக் கட்டணத்தை செலுத்தாத பெற்றோரை தனி அறையில் அடைத்து வைத்து கட்டாயப்படுத்தியதாகப் புகார் எழுந்திருக்கிறது. என்ன நடந்தது?
கோவில்பட்டி ஆழ்வார் தெரு பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி செயிண்ட் பால்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி. கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. மாதந்தோறும் மாணவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு, விடைத்தாள்களை பெற்றோர்கள் பள்ளியில் கொண்டுவந்து கொடுக்குமாறு நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி, பள்ளியில் விடைத்தாள்களைக் கொடுக்கச் சென்ற பெற்றோர்கள் சிலரை தனி அறையில் காத்திருக்கும்படி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. பள்ளி மாதாந்திர கட்டணம் செலுத்தாத பெற்றோரை மட்டுமே பள்ளி நிர்வாகம் இப்படி தனி அறையில் வைத்து கட்டாயப்படுத்தியதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக ஆரோக்கியதாஸ் என்பவர் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஊரடங்கு சூழலில் பள்ளி கட்டணங்களைக் கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கும் சூழலில் விதிகளை பள்ளி நிர்வாகம் மீறியதாக அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்த தகவலின்பேரில் தாசில்தார் அமுதா சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். கட்டாயப்படுத்தி பள்ளி கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என அவர் பள்ளி நிர்வாகத்தை அறிவுறுத்தினார். அவர் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து ஆரோக்கியதாஸ் தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.
Also Read – பிரதமர் மோடியின் ஆலோசகர் ராஜினாமா… யார் இந்த அமர்ஜீத் சின்ஹா?