நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதிற்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.
அதாவது, எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதைப் பற்றித்தான் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளப்போகிறோம்.
ஆயில்யம் நட்சத்திரம்
ஆயில்ய நட்சத்திரமானது, ராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்றபோது அண்ணனை பிரியாமல் அவருடனே சென்று, அவருக்குப் பணிவிடைகள் செய்த லட்சுமணன் பிறந்த நட்சத்திரமாகும். பொதுவாக இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதர பாசம் மிக்கவர்களாக விளங்குவார்கள். ஆயில்ய நட்சத்திரம், சந்திரனுக்கு உரிய கடக ராசியில் அமைந்துள்ளது. புதனின் ஆதிக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே இந்நட்சத்திரக்காரர்கள் சந்திரனுக்கு உரிய கிரியேட்டிவிட்டியையும், புதனுக்கு உரிய சாதுர்யத்தையும் கொண்டு விளங்குவார்கள்.
ஆயில்யம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிபதியாக புதனும், ராசி அதிபதியாக சந்திரனும், நவாம்ச அதிபதியாக, முதல் மற்றும் நான்காம் பாதத்தில் குருவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தில் சனியும் வலம் வருகின்றன. ஆதிசேஷன் மற்றும் நாகராஜனை வழிபட்டு வணங்கி வர நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் திருமணத் தடை, நிரந்தர வேலை இன்மை, வாழ்வில் பிரச்னை என அனைத்து துன்பங்களுக்கும் நாகூர் நாகநாதர் ஆலயம் சென்று வர நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக திருமணத் தடை நீங்க, ஆதிஷேசன் மீது சயனித்திருக்கும் மகாவிஷ்ணுவின் ஆலயமான ஸ்ரீரங்கம் உள்ளிட்ட சயன கோயில்களுக்குச் சென்று வர வேண்டும்.
ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குண்டான தோஷங்களை நீக்கிக்கொள்ள சந்திர சாந்தி ஹோமம் மற்றும் புத சாந்தி ஹோமம் ஆகிய பரிகாரங்களை செய்து வர நன்மைகள் உண்டாகும். கோயில்களுக்கு செல்லும் போது செவ்வரளி மலர்களை கொண்டு இறைவனை வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும்.
திருத்தேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர் ஆலயம்
ஸ்ரீ கற்கடேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம்-பூம்புகார் சாலையில் உள்ள திருத்தேவன்குடியில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இங்கு வந்து இறைவனை வழிபட்டு செல்ல வேண்டும். இந்நட்சத்திரகாரர்கள் ஆயில்யம் நட்சத்திர தினத்திலோ அல்லது தேய்பிறை அஷ்டமி நாளிலோ இறைவனுக்கு நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து வர பல நன்மைகள் வந்து சேரும். ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கும் மற்றும் கடக ராசி காரர்களுக்கும் இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத் தலமாகப் பார்க்கப்படுகிறது.
Also Read – நட்சத்திரக் கோயில்கள் – பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்!
ஸ்ரீ கற்கடேஸ்வரர் திருத்தல வரலாறு சுவாரஸ்யமானது. கற்கடம் என்பதற்கு நண்டு என்பது பொருளாகும். நண்டு ஒன்று தாமரை மலர்களை ஏந்தி இத்தல சிவபெருமானை வழிபட்டதன் காரணமாகவே இத்தலம் கற்கடேஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் முனிவரின் தவத்துக்கு நண்டாக மாறி இடையூறு செய்த அம்பிகை முனிவரின் கோபத்துக்கு உள்ளாகி பூலோகத்தில் நண்டாகவே உலாவும் சாபத்தைப் பெற்றாள். சாபத்தை பெற்ற அம்பிகை முனிவரிடம் மன்றாடி சாப விமோட்சனம் கேட்கவே, முனிவரோ சிவபெருமானுக்கு தினமும் ஒரு தாமரை மலரை இட்டு வழிபட்டு வந்தால் சிவபெருமான் உன் கண் முன்தோன்றி உனக்கு சாப விமோட்சனம் கொடுப்பார் என கூறினார். அதன்படி அம்பிகை நண்டு உருவத்தில் சிவபெருமானுக்கு தாமரை மலர் வைத்து வழிபட்டு வர சாப விமோட்சனம் அடைந்தாள்.
இது நண்டாங் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. எந்த சிவபெருமான் திருக்கோயிலிலும் இல்லாத சிறப்பு இத்தலத்தில் உள்ளது. பார்வதி தேவி இந்த தலத்தில் அருமருந்து நாயகி, அபூர்வநாயகி என இரு வேறு தோற்றத்தில் இரண்டு சன்னதிகளுடன் காட்சி அளிக்கிறாள். இத்திருத்தலம் அமாவாசை, செவ்வாய், சனி ஆகிய கிழமைகளில் பிரசித்தி பெற்று தனித்துவமாக விளங்குகிறது. இத்தகைய நாட்களில் இத்தலத்துக்குச் சென்று கற்கடேஸ்வரரையும், அருமருந்து நாயகியையும் வழிபட்டு அவர்களுக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணெயை பெற்று உட்கொண்டு வந்தால் தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, ஆயில்யம் நட்சத்திரகாரர்கள் மட்டுமின்றி அனைத்து நட்சத்திரக்காரர்களும் கடக மாதமான ஆடி மாதத்தில் இத்திருத்தலத்துக்கு சென்று தரிசித்து வந்தால் கற்கடேஸ்வரர் வேண்டியதை மறுக்காமல் அருள்பாலிப்பார் என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இத்திருத்தலத்தின் நடையானது, கலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் திறக்கப்படுகிறது.
எப்படிப் போகலாம்?
ஸ்ரீ கற்கடேஸ்வரர் திருத்தலமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் தாலுகாவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் கும்பகோணம். கும்பகோணம்-பூம்புகார் செல்லும் சாலையில் 4 கி.மீ சென்றால் திருவிசநல்லூர் என்ற பகுதி உள்ளது. அங்கிருந்து 1 கி.மீ தொலைவில் சென்றால் அழகு மிகுந்த இயற்கையின் வயல்வெளிகளுக்கு மத்தியில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது.
தஞ்சாவூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து கும்பகோணத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருத்தலத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் கும்பகோணம் ரயில் நிலையமாகும். அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி.