நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதிற்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.
அதாவது, எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதைப் பற்றிதான் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
பூசம் நட்சத்திரம்
பூசம் நட்சத்திரமானது, தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியான குருபகவான் பிறந்த நட்சத்திரமாகும். இது மட்டுமில்லாமல், ஸ்ரீராமர் வனவாசம் சென்றபோது, ராமரின் பெயரில் அயோத்தியை ஆட்சி செய்த ராமரின் தம்பியாகிய பரதன் பிறந்த நட்சத்திரமும் பூச நட்சத்திரமாகும். குரு மற்றும் பரதன் ஆகிய இருவரின் குணாதிசயங்களை இந்நட்சத்திரக்கார்கள் பெற்று விளங்குவர். பூச நட்சத்திரக்காரர்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல், மற்றவர்கள் பொருட்களுக்கு ஆசைப்படாதவர்களாகவும், தியாகத்தின் மறு உருவமாகவும் விளங்குவார்கள்.
பூச நட்சத்திரத்தின், நட்சத்திர அதிபதியாய், சனி பகவானும், ராசி அதிபதியாய் சந்திரனும், நவாம்ச அதிபதியாய், முதல் பாதத்தில் சூரியனும், இரண்டாம் பாதத்தில் புதனும், மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், நான்காம் பாதத்தில் செவ்வாயும் வலம் வருகின்றன. இந்நட்சத்திரகாரர்களின் அதிர்ஷ்ட தெய்வமாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி பார்க்கப்படுகிறார். பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தினந்தோறும் நினைத்து வணங்கி வர நன்மைகள் பல பிறக்கும். திருவெண்காடு மற்றும் திருநள்ளாரு சென்று வர தீயவைகள் நீங்கும்.
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், கேது ஆகிய காலங்கள் பொதுவாகவே சாதகமற்றவைகளாக இருக்கும். அத்தகைய காலங்களை சுமுகமாக கடந்து வர சந்திர சாந்தி ஹோமம், சனி சாந்தி ஹோமம் ஆகியவற்றை செய்து வர வேண்டும். சனி கிழமைகளில் விரதம் கடைபிடித்து வர நன்மைகள் உண்டாகும். அதே சனி கிழமைகளில் சனி பகவானுக்கு கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி சனி பகவான் மந்திரங்களை துதித்து வழிபட்டு வர வேண்டும்.
இந்த நட்சட்திரக்காரர்களுக்கு நட்சத்திர அதிபதியான சனிபகவான் மூலம் உண்டாகும் சனிதோஷத்தை காலை உணவு சாபிடுவதற்கு முன் அதிலிருந்து எடுத்து காக்கைகளுக்கும் சாப்பிட்டு முடித்த பின் மிச்ச உணவை தெரு நாய்களுக்கும் வைத்து வருவதனால் போக்கிக் கொள்ள முடியும். கடின உழைப்புக்கு பெயர் போன விலங்கான கழுதைகளுக்கு உணவளித்தால் இந்நட்சத்திரகாரர்கள் அனைத்து தோஷங்களும் நீங்கி செல்வ செழிப்புடன் இருப்பார்கள்.
விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம்
பூச நட்சத்திரகாரர்களுக்கு உகந்த திருத்தலமாக விளங்குவது தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அமைந்திருக்கும் விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம். எமதர்மராஜன் ஒருமுறை தன் தந்தையாகிய சனிபகவான் காலில் அடித்ததன் காரணமாக சனிபகவான் கால் ஊனமாகியது. அந்த ஊனத்தைப் போக்க இத்திருத்தலத்துக்கு சனிபகவான் வரவே, அவர் முன் சிவப்பெருமான் அட்சயபுரீஸ்வரராகக் காட்சி அளித்து அருள்பாலித்து ஊனத்தைப் போக்கியதாக புராணங்கள் உள்ளன. இதனால்தான் இத்திருத்தலம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படுகிறது. அதே சமயம் இத்திருத்தலத்தில் விளாமரமும், பூச ஞானவாவி தீர்த்தமும் சுரந்ததால் இவ்வூர் விளங்குளம் என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்தில் சனிபகவான் ஆதிபிருஹத் என்ற பெயரில் அனுகிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திருமணத்தடை உள்ளோர், கால் சம்மந்தமான பிரச்சனைகள் உள்ளோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்தத் தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவானை வணங்கி வர நன்மைகள் பல உண்டாகும். இத்திருத்தலத்தின் நடையானது ஞாயிறு முதல் வெள்ளி கிழமை வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்படுகிறது. ஆனால் சனிக்கிழமை மற்றும் பூச நட்சத்திர நாட்களில் காலை 8 மணி முதலே திறக்கப்படுகிறது. மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை போன்ற நாட்களில் இத்திருத்தலம் பிரசித்தி பெற்று விளங்கிகிறது. இச்சனிபகவானை பூச நட்சத்திரகாரர்கள் தங்களின் நட்சத்திர நாளிலோ அல்லது திரிதியை திதி நாளிலோ நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர், ஆகிய எட்டு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து எட்டு முறை சுற்றி வர தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.
எப்படிப் போகலாம்?
ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம் பேராவூரணி தாலுகாவில் இருக்கும் விளங்குளம் பகுதியில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 49 கி.மீ தூரத்தில் பட்டுக்கோட்டை உள்ளது. அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் 30 கி.மீ. தூரம் பயணித்தால் விளங்குளம் விலக்கு பகுதியை அடையலாம். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்திருக்கிறது.
தஞ்சாவூர், திருச்சி, சென்னை, மன்னார்குடி போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பட்டுக்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்துக்கு செல்லலாம். அருகில் உள்ள ரயில் நிலையம் பட்டுக்கோட்டை ரயில் நிலையமாகும். அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி விமான நிலையம்.
Also Read – நட்சத்திரக் கோயில்கள் – புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் எது?