நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதிற்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.
அதாவது, எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதைப் பற்றிதான் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
புனர்பூசம் நட்சத்திரம்
புனர்பூசம் நட்சத்திரத்தை புனர்வஸீ என்று கூறுவார்கள். புனர் என்பதற்க்கு மீண்டும் என்பதும், வஸீ என்பதற்க்கு சிறப்பு என்பதும் பொருள் ஆகும். இத்தகைய புனர்பூசம் நட்சத்திரத்தில் தான் மகாவிஷ்ணு ராமராக அவதரித்தார் என்பது வரலாறு. இந்நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுன ராசியிலும், கடைசி பாதம் கடக ராசியிலும் வலம் வருகிறது. இந்த நட்சத்திரக்காரர்கள் தந்தை சொல்லைத் தட்டாதவர்களாகவும், பொறுமையுடன் எத்தகைய இன்னல்களையும் கடந்து செல்பவர்களாகவும் இருப்பார்கள். சத்தியத்துக்காகவும், நேர்மைக்காகவும் பாடுபடுபவர்கள்.
புனர்பூசநட்சத்திரத்தின், நட்சத்திர அதிபதியாய் குருவும், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நட்சத்திரத்தின் ராசி அதிபதியாய், புதனும், நான்காம் பாதத்தின் ராசி அதிபதியாய் சுக்கிரனும், நவாம்ச அதிபதியாக முதல் பாதத்தில் செவ்வாயும், இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், மூன்றாம் பாதத்தில் புதனும், நான்காம் பாதத்தில் சந்திரனும் வலம் வருகின்றன. புனர்பூச நட்சத்திரக்காரர்கள் ராமரையும், வெங்கடேசப் பெருமாளையும் வணங்கி வர நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரன் சாந்தி ஹோமம், புதன் சாந்தி ஹோமம் ஆகியவற்றை பரிகாரங்களாக செய்து வர தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.
புனர்பூசம் நட்சத்திரத்தில் முதல் மூன்று பாதத்தில் பிறந்தவர்கள், விநாயகருக்கு புதன்கிழமைகளில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற நன்மைகள் உண்டாகும். அதே புதன்கிழமையன்று பிராமணப் பெண் ஒருவருக்கு, பச்சை நிற புடவையும், பச்சை பயிறும் தானம் செய்து வர பாத தோஷங்கள் நீங்கும். இந்நட்சத்திரத்தின், நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள், பெண் பூனைகளுக்கு பால் வைத்து வருவது நன்மை தரும் பரிகாரமாக நம்பப்படுகிறது.
வாணியம்பாடி அதிதீஸ்வரர் திருக்கோயில்
புனர்பூசம் நட்சத்திரகாரர்களுக்கு உகந்த திருத்தலமாக விளங்கும் அதிதீஸ்வரர் திருக்கோவிலானது, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருக்கிறது. காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் கோயில் நடை திறக்கப்படுகிறது. சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை ஆகிய விஷேச நாட்களில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இத்திருத்தலத்துக்கு ஒரு தனித்துவ சிறப்பு காணப்படுகிறது. மேற்கு நோக்கிய இந்த கோயிலில் வழிப்பட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலில் வழிப்பட்டதன் பலன் கிடைக்கும் என்பதே அந்த தனிச்சிறப்பாகும்.
இத்திருத்தலமானது பல்லவர் காலத்தில் பல்லவ அரசால் கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. இத்திருத்தலத்தில் சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் அமைந்து மூன்று நிலை மேற்கு ராஜ கோபுரமும் ஐந்து நிலை கிழக்கு ராஜ கோபுரமும் படைக்கப்பட்டு சிறப்பாக காட்சி அளிக்கிறது. காச்ய முனிவரின் தர்ம பத்தினி அதிதி புனர்பூச நட்சத்திர நாட்கள் தோறும் விரதம் இருந்து தான் தேவர்களைப்பெற்றார் என வரலாறு உள்ளது. எனவே தான் இத்தலமானது புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இத்திருதலத்துக்கு சென்று வழிபட்டால் நன்மைகள் வந்தடையும் என்பது நம்பிக்கை.
நட்சத்திர நாட்களில், புது வீடு வாங்குதல், வாடகை வீடு பால் காய்ச்சுதல் போன்ற விருத்தியாகக்கூடிய செயல்களை செய்தால் சிறப்பு உண்டாகும். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பும் இத்திருத்தலத்துக்கு வந்து வாணியை வழிபட்டுச் சென்றால் அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம் என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அதே போல் எந்த ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன்பும் வாணியை வழிபட்டு தொடங்கினால் நன்மை உண்டாகும். முக்கியமாக ஹோட்டல் தொழில் செய்வோர் இங்கு வந்து அடிக்கடி ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வர தொழிலில் குறைபாடுகள் நீங்கி நல்வழி பிறக்கும். இத்திருத்தலத்தில் சிவனுக்கு பால், தேன், நதிநீர், அன்னம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செய்து வழிபடலாம். புனர்பூச நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய தோஷங்கள் நீங்க இத்தலத்துக்குச் சென்று வழிபட்டால் தீயவை நீங்கும்.
எப்படிப் போகலாம்?
அதிதீஸ்வரர் திருக்கோயில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி இருக்கிறது. வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் இருக்கும் பழைய வாணியம்பாடி பகுதியில்தான் இந்தத் திருத்தலம் உள்ளது. திருவண்ணாமலை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், தர்மபுரி போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலுருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்திருத்தலத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் வாணியம்பாடி ரயில் நிலையமாகும். அருகிலுள்ள விமானநிலையம் சென்னை விமான நிலையம்.
Also Read – நட்சத்திரக் கோயில்கள் – திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்!