‘எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த பையன்ங்க நானு’ என்று ஒருவர் சொல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இது முதல் முறை இல்லை. ‘நான் தான் ஜெயலலிதாவின் வாரிசு’ என்று சீசனுக்கு சீசன் யாராவது இப்படி கிளம்புவார்கள். அப்படி கிளம்பியவர்களின் லிஸ்ட் இது. அதைவிட ஹைலைட் என்னென்னா ‘நான் தான் ஜெயலலிதா’ என்று ஒருவர் கெளம்பினார். அந்த ஃப்ளாஷ்பேக் தெரிந்தால் அரண்டு போவீர்கள். அட நம்ம அண்ணன் சீமானே நம்பினார்னா பாருங்களேன்.
பெங்களூரு அம்ருதா
2017-ல பெங்களூரைச் சேர்ந்த அம்ருதாங்குறவங்க உச்ச நீதிமன்றத்துல ஒரு வழக்கு போடுறாங்க. அதுல “நான் ஜெயலலிதாவோட மகள். சின்ன வயசுல என்னை அவங்களோட சகோதரி சைலஜாவுக்கு தத்துக் கொடுத்துட்டாங்க. இந்த விஷயம் எனக்கு இப்போ என்னை வளர்த்த அப்பா சாரதி சொல்லித்தான் எனக்குத் தெரியும். அதனால என்னை ஜெயலலிதாவோட வாரிசா அறிவிக்கணும்.” அப்படினு குறிப்பிடுறாங்க. உங்களுக்கு சந்தேகமா இருந்தா டி.என்.ஏ டெஸ்ட் எடுங்கனு பீதிய கிளப்புறாங்க. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரிச்ச நீதிபதி ‘நீங்க 1980 ஆகஸ்ட் மாசம் பிறந்ததா சொல்றீங்க. ஆனா 1980 ஜூலை மாசம் ஜெயலலிதா ஃபிலிம்ஃபேர் விருதுகள்ல கலந்துகிட்ட வீடியோ இருக்கு. அதுல அவங்க கர்ப்பமா இருக்குற மாதிரியே இல்லையே’ அப்படினு பாயிண்டா பேசி வழக்கை தள்ளுபடி பண்ணிட்டாரு.
மதுரை மீனாட்சி
போன மார்ச் மாதம், மதுரை தாலுகா ஆபிஸ்க்கு ஒரு மனு வருது. அதுல மதுரை திருவள்ளூரைச் சேர்ந்த மீனாட்சிங்குறவங்க ‘எங்க அப்பா பேரு சோபன் பாபு, அம்மா பேரு ஜெயலலிதா. சென்னை போயஸ்கார்டன்ல இருந்த எங்க அம்மா இறந்துட்டாங்க. அதனால எனக்கு வாரிசுச் சான்றிதழ் கொடுங்க’ அப்படினு ஒரு மனு போட்டாங்க. இது என்னடா புது குழப்பமா இருக்குனு விசாரிச்சா, “சின்ன வயசுலயே எங்க அம்மா என்னை விட்டுட்டு போயிட்டாங்க. பாட்டிதான் எடுத்து வளர்த்தாங்க. பழநில தங்கரதம் இழுக்குற உரிமையை எங்கப்பா எனக்கு கொடுத்திருக்காரு. அதற்கான சான்றிதழ்லாம்கூட பழநில வாங்கிட்டேன். நீங்க எனக்கு ஜெயலலிதாவின் வாரிசு நாந்தான்னு சான்றிதழ் கொடுங்க” அப்படினு வாக்குவாதம் பண்ணிருக்காங்க. அதுமட்டுமில்ல, ‘(சசிகலாவின் கணவர்) நடராஜன் மாமாவுக்கு என்னைய நல்லா தெரியும். ஏன் இங்க இருக்குற முன்னாள் அமைச்சர்களுக்கே ஜெயலலிதாவின் மகள் நான்தான்னு தெரியும். நான் கருப்பா இருக்குறதாலதான் நிறைய பேர் நம்பமாட்டேங்குறாங்க’ என்று சொல்லி மெர்சலாக்கினார். ‘யம்மா நீங்க கோர்ட்ல போய் கேட்டுக்கோங்க’னு தாசில்தார் பேசி அனுப்ப, அதற்கு பிறகு சைலண்ட் ஆனார்.
ஈரோடு கிருஷ்ணமூர்த்தி
“நான் 1985-ல ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த மகன். 2016-ல எங்க அம்மாவை போயஸ்கார்டன்ல எங்க அம்மாவை சந்திச்சேன். அவங்க என்னை பொதுவெளில நாந்தான் அவங்க வாரிசுனு அறிவிக்குறேனு சொன்னாங்க. ஆனா சசிகலாதான் தடுத்துட்டாங்க. சோபன்பாபுவும் ஜெயலலிதாவும் பிரிஞ்சப்போ என்னை ஒரு குடும்பத்துக்கு தத்து கொடுத்துட்டாங்க. எம்.ஜி.ஆர் தான் அதுக்கு சாட்சி கையெழுத்துப் போட்டாரு. சசிகலாவால என் உயிருக்கு ஆபத்து இருக்கு” என்று சில ஆவணங்களுடன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார் ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர். ஆனால் அவர் கையெழுத்திட்டதாக சொன்ன தேதியில் எம்.ஜி.ஆர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். அவர் கொடுத்த ஆவணங்கள் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை இக்பால்
“ஜெயலலிதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் பிறந்தவன் நான். சொத்து என் பேர்ல உயில் எழுதிட்டாங்க. ரகசியம் தெரிஞ்சுடும்னு என்னை எங்க வீட்டுல விட்டுட்டு போயிட்டாங்க. இந்த ரகசியத்தை நானே தோண்டித்தோண்டி கண்டுபிடிச்சேன். இப்பவும் கட்சியும் சொத்தும் என் பேர்லதாங்க இருக்கு” என்று கான்ஃபிடண்டாக பேசுகிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த இக்பால். இவர் நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர். இதுமட்டுமல்ல அருண்ராஜா காமராஜா பானிபூரிக்காரன் கெட்டப்ல வந்து நெருப்புடா நெருங்குடா பாட்டை எங்கிட்ட இருந்து திருடிட்டாரு என்பார். சாட்டிலைட் வைத்து ஹாரிஷ் ஜெயராஜ் என் பாட்டை திருடினார் என்பார். காதல் ரோஜாவே பாட்டே என்னதுதாங்க என்று அண்ணனின் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லை.
* இது எல்லாம் அவர்களாகவே சொன்னது. நம்ம ஆட்கள் வாட்ஸப்பில் கிளப்பி விட்ட சில புரளிகளும் உள்ளது. ஜெயலலிதா இறந்த சில நாட்களில் சோசியல் மீடியாவில் ஒருவரின் படம் வைரலானது. அந்தப் படத்தில் இருந்தவர் ஒரு ஜாடைக்கு ஜெயலலிதா மாதிரியே இருந்தார் என்பதற்காக இவர்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று நெட்டிசன்கள் விழுந்தடித்து ஷேர் செய்துகொண்டிருந்தார்கள். ‘அய்யயோ இவங்களை எனக்கு தெரியும்ங்க. இவங்க ஊரு கேரளா இப்போ வெளிநாட்டுல இருக்காங்க. இவங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது’ என்று பாடகி சின்மயி அந்த வதந்திக்கு தீ வைத்தார்.
Also Read – மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே… கட்சிகளின் சொதப்பல் மொமன்ட்ஸ்! #ITWing
* இதுவாச்சும் பரவால்ல ஜெயலலிதாவோட வாரிசு நாந்தான்னு வந்த உருட்டுகள். ஒருத்தர் ஜெயலலிதாவே நான்தான்னு வி.வி.ஐ.பிக்கள் பலரையும் நம்ப வச்சிருக்காரு. 2009-ல சீமானுக்கு ஒரு போன்கால் வருகிறது. ‘ஜெயலலிதா ஸ்பீக்கிங்’ என்று ஆரம்பிக்க, சீமான் அண்ணனும் வெளவெளத்துப்போய் ‘சொல்லுங்கம்மா’ என்று ஆரம்பிக்க, ‘மாயாண்டி குடும்பத்தார்’ படம் பார்த்தேன் நல்லா பண்ணிருந்தீங்க என்று பாராட்டியது அந்தக் குரல். ஜெயலலிதாவே நமக்கு போன் பண்ணி பாராட்டுறாங்களே என்று ஆச்சர்யப்பட்டார் சீமான். ஆனால் இதே போல போன்கால் தொடர்ந்து தா.பாண்டியன், சித்ரா என பலருக்கும் வந்திருக்கிறது. திடீரென்று ஜெயா டிவிக்கு ஒரு போன் வரும், ‘நான் ஜெயலலிதா பேசுறேன். அந்த போட்டில முதல் பரிசு ஏன் அவருக்கு கொடுத்தீங்க’ என்று கேட்கும் திடீர்னு சி.எம் போன் பண்ணி இப்படி கேட்டா என்ன பதில் சொல்வதென்று முழிப்பார்கள். கொஞ்ச நாள் இது தொடர்ந்து கொண்டிருக்க நம்பரை ட்ரேஸ் பண்ணிய பிறகுதான் தெரிந்தது. கோவையைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவர் அச்சு அசலாக ஜெயலலிதாவின் குரலில் மிமிக்ரி செய்வார். அவருடைய எல்லா பேச்சுகளும் மனப்பாடமாக ஒப்பிப்பார். சில பிரபலங்களின் நம்பர் கிடைக்க அதை வைத்து விளையாட்டு காட்டி தான் ஜெயலலிதா என்று எல்லாரையும் நம்ப வைத்திருக்கிறார். ஆனால் விஷயம் தெரிந்து போலீஸ் கப் என்று பிடித்தது. நான் கட்சிக்காரன் சார், அம்மாவை எப்படியாச்சும் பார்க்கணும்னு தான் இப்படி பண்ணேன் என்று அவர் சொன்ன தகவல் ஜெயலலிதாவுக்கு போக, சரி விட்டுடுங்க என்று மன்னிப்பு வழங்கினார்.
ஆயிரம் அதிசயம் அமைந்தது ஜெயலலிதா ஜாதகம்!