கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் ஆளும்கட்சியே, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட வரலாற்றை எமெர்ஜென்ஸிக்குப் பிறகு நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன். மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள்.
பினராயி விஜயன்
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் பினராயி என்ற கிராமத்தில் கள்ளிறக்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்த விஜயன், 16 வயதாக இருக்கும்போது கர்நாடகாவில் ஒரு பேக்கரியிலும் பின்னர் கைத்தறி நெசவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பள்ளிக்கு வெள்ளை சட்டை மட்டுமே அணிந்து செல்வாராம் விஜயன். அதற்குக் காரணமாக அவர் சொல்வது, `என்னிடம் வேறு சட்டைகள் இல்லை என்பதை மறைப்பதற்காக பள்ளி நாட்களில் வெள்ளை நிற சட்டை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன்’ என்று ஒரு இடத்தில் நினைவுகூர்ந்திருக்கிறார்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பின்போதே கடவுள் மறுப்பாளராக மாறியிருந்த அவர், கேரளாவில் அரசியல்ரீதியாக முடிவெடுப்பதில் வலுவான முதல்வராக அறியப்படுகிறார். ஆனால், சிறுவயதில் எப்போதுமே சமையற்கட்டில் தனது தாய் அருகே அமர்ந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். பேய்கள், பிசாசுகள் மீதான பயத்தால் எங்கும் தனியாகச் செல்வதில்லை என்பதையும் பின்பற்றி வந்திருக்கிறார் அவர்.
அரசியல்ரீதியாக விஜயன் முதன்முதலில் கவனிக்கப்பட்டது 1986ம் ஆண்டில். அப்போது, சி.பி.எம் கண்ணூர் மாவட்டச் செயலாளாராக இருந்த மூத்த தலைவர் எம்.வி. ராகவன் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கினார். அந்த சமயத்தில் எம்.வி.ராகவனோடு சி.பி.எம் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இணைந்துவிடாதபடி சிறப்பாகக் களமாடினார். இதனால், எம்.வி.ராகவன் இருந்த இடத்தில் விஜயனை அமர்த்தி அழகுபார்த்தது கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பினராயி விஜயன், குத்துபரம்பா தொகுதியில் இருந்து முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கு வயது 26. கட்சியின் மாநிலச் செயலாளராக 1998ம் ஆண்டு முதல் இருந்து வரும் விஜயன், 1996-1998 காலகட்டத்தில் கேரள மின்சாரத் துறை அமைச்சாராக இருந்தார். அதேபோல், கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.
Also Read – நான்கு மாநிலத் தேர்தல்கள் சொன்ன 4 செய்திகள்!
தீவிர ரஜினி ரசிகரான விஜயன், வீட்டில் எப்போதுமே அரசியல் பற்றி பேசுவதில்லையாம். குடும்பத்தின் நிலை, உறவினர்கள் குறித்துதான் எப்போதும் அவரது பேச்சு இருக்கும் என்கிறார் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான கமலா விஜயன். தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், `வீட்டுக்குத் தேவையான எதையும் கணவரிடம் கேட்கும் சூழல் எனக்கு வாய்த்ததில்லை. நானும் இதுவரை எதுவும் கேட்டதில்லை’ என்று கூறியிருந்தார். அதேபோல், வீட்டுக்காக அவர் முதன்முதலில் வாங்கிவந்த பொருளான பிரஷர் குக்கரை இப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கமலா நெகிழ்ந்திருந்தார்.