கடலூர்: தொழிலாளி மர்ம மரணம்; கொதிக்கும் பா.ம.க… தி.மு.க எம்.பி மீது வழக்கு – என்ன நடந்தது?
கடலூர் அருகே தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் எம்.பி உள்பட 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பா.ம.க கோரிக்கை விடுத்துள்ளது. என்ன நடந்தது?
தி.மு.க எம்.பி-யின் முந்திரி ஆலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் தி.மு.க-வின் கடலூர் தொகுதி சிட்டிங் எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலை இயங்கி வருகிறது. இந்த முந்திரி ஆலையில் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். தினசரி காலை 8 மணிக்குப் பணிக்குச் செல்லும் கோவிந்தராசு இரவு 8 மணியளவில் வீடு திரும்புவார் என்று தெரிகிறது. இந்தநிலையில், நேற்று இரவு நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கோவிந்தராசுவைக் குடும்பத்தினர் தேடிவந்த நிலையில், அதிகாலை 2.30 மணியளவில் கோவிந்தராசு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக ஆலை தரப்பில் இருந்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் ஆலை தரப்புக்கு எதிராக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். உயிரிழந்த கோவிந்தராசு ஆலையில் முந்திரி திருடியதாகக் கூறி அடித்து, சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அந்தத் தாக்குதலின்போதே உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
பா.ம.க நிர்வாகி
கோவிந்தராசு பா.ம.க-வில் நிர்வாகியாக இருப்பவர். இதனால், அவரது உயிரிழப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர், இரவு 8 மணிக்கே கோவிந்தராசு வீடு திரும்ப வேண்டிய நிலையில், அதிகாலை 2.30 மணியளவில் சென்னையில் இருக்கும் அவரது மகன் செந்தில்வேலைத் தொடர்புகொண்டு ரமேஷின் உதவியாளர் நடராஜன் பேசியிருக்கிறார். அப்போது,உனது தந்தை விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பண்ருட்டி மருத்துவமனையில் இருக்கிறது’ என்று தகவல் சொல்லியிருக்கிறார். கோவிந்தராசுவின் உடல் முழுவதும் காயங்களும், ரத்தக் கறைகளும் இருந்திருக்கின்றன’ என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், `இதுகுறித்து முந்திரி ஆலையில் பணியாற்றும் சிலரிடம் விசாரித்தபோது, எம்.பி டி.ஆர்.வி.ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், ஆலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலபேர் சேர்ந்து கோவிந்தராசுவை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த கோவிந்தராசுவின் வாயில் நஞ்சை ஊற்றி, அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது. அவர் பா.ம.க நிர்வாகி. அவரின் இறப்புக்கி நீதி கிடைக்கும் வரை பா.ம.க ஓயாது’ என்றும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
எம்.பி மீது வழக்கு
இந்த விவகாரம் தொடர்பாக காடாம்புலியூர் காவல்நிலையத்தில் கடலூர் தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. கோவிந்தராசு மரணத்தை சந்தேக மரணமாக போலீஸார் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவதோடு, உயிரிழந்த கோவிந்தராசு குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பா.ம.க சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கோவிந்தராசு சுமார் 7 கிலோ முந்திரியை ஆலையிலிருந்து திருடியதாகவும், சோதனையில் அதைக் கண்டுபிடித்த ஆலைதரப்பினர் அவரைக் கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கடலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தி.மு.க மற்றும் போலீஸாருக்கு எதிராக பா.ம.க-வினர் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.