சென்னை பீச் ஸ்டேஷன் மின்சார ரயில் விபத்து… ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்கு – என்ன நடந்தது?

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய மின்சார ரயில் 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது. இதுதொடர்பாக ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

மின்சார ரயில் விபத்து

சென்னை பீச் ஸ்டேஷனில் நடைமேடை 1-ல் வந்த மின்சார ரயில், நடைமேடை மீது ஏறி அங்கிருந்த கடை ஒன்றில் மோதி நேற்று விபத்து ஏற்பட்டது. விடுமுறை தினம் என்பதால், நடைமேடையில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ரயிலை இயக்கிய ஓட்டுநர் பவித்ரன், பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை ஒதுங்கிச் செல்லுமாறு சத்தமிட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேபோல், ஓட்டுநரும் ரயிலில் இருந்து குதித்ததால், சின்ன காயத்தோடு விபத்தில் இருந்து தப்பினார். ரயில், நடைமேடையில் இருந்த கடை ஒன்றின் மீது மோதி நின்றது.

மின்சார ரயில் விபத்து
மின்சார ரயில் விபத்து

மின்சார ரயிலில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பணிமணையில் இருந்து ரயில் வந்ததால், இந்தக் கோளாறு ஏற்பட வாய்ப்புக் குறைவே என்றும் சொல்லப்பட்டது. அதன்பின்னர், முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுநர் பவித்ரன் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 279 மற்றும் விரைவில் சட்டப்பிரிவு 151, 154 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

வேகமாக வந்த ரயில்

முதலாவது நடைமேடையில் ரயில் வந்தபோது வழக்கத்தை விட வேகமாக வந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனாலேயே, ரயிலை நிறுத்த முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட நிலையில், ரயில்நிலைய நடைமேடையில் இருந்த கடையின் மீது மோதிய இரண்டு பெட்டிகளைத் தவிர மற்ற பெட்டிகள் பயன்பாட்டுக்கு வந்தன. அந்த இரண்டு பெட்டிகள் பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது. விபத்தில் சிக்கிய ரயிலின் பெட்டிகளை மற்றொரு ரயில் இன்ஜினை வைத்து சுமார் 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். மேலும், குறிப்பிட்ட நடைமேடையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது.

மின்சார ரயில் விபத்து
மின்சார ரயில் விபத்து

விபத்தால், ரயில் சேவைகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. முதலாவது நடைமேடையில் விபத்து நடந்த பகுதிக்கு சிறிது தூரத்திலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. விபத்து நடந்த இடத்தில் மக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் போடப்பட்டிருக்கின்றன. இந்த விபத்தால், சென்னை பீச் ஸ்டேஷனில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read – கரண்ட் பில் எகிறுகிறதா… குறைக்க என்ன செய்யலாம் – 5 ஈஸி டிப்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *