பொன்னியின் செல்வன் நாவலின் கதை நாயகர்கள் சீரிஸில் நாம் அடுத்ததா பார்க்கப்போற கேரக்டர் ‘வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டப்பெயர் பெற்ற சோழ நாட்டின் பட்டத்து இளவரசான ஆதித்த கரிகாலன் பற்றிதான்.
பதினாறு வயதிலேயே போர்க்களம் புகுந்து பல செயற்கரிய செயல்களைச் செய்து சோழகுல வீரத்தை நிலைநாட்டிய ஆதித்த கரிகாலன், அந்த குலத்தின் புகழ்மிக்க வீரனாகவும் போற்றப்படுபவன். ஆதித்த கரிகாலன் கேரக்டர் பொன்னியின் செல்வன் நாவலில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது… அந்த கேரக்டரோட டிராவல் எப்படி இருந்துச்சு… மில்லியன் டாலர் கேள்வியா ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னரும் அவருடைய மரணம் பற்றிய மர்மம் என்னனுதான் இந்த எபிசோட்ல பார்க்கப்போறோம்.
டிஸ்கிளைமர் – நண்பர்களே இது கல்கியோட பொன்னியின் செல்வன் நாவலை விமர்சிக்குற அல்லது எடைபோடுற முயற்சி கிடையாது. அந்த நாவலைப் படிக்கிறப்போ நான் உணர்ந்த அல்லது என்னால் புரிந்துகொண்ட அளவில் அதிலிருக்கும் ஒவ்வொரு கேரக்டர்களைப் பத்தியான ஒரு சின்ன உரையாடல்தான். அதேமாதிரி, மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படம் இந்த நாவலை அடிப்படையாக வைச்சுதான் உருவாக்கப்பட்டிருக்கு. அதனால, இந்த ஸ்டோரில அந்தப் படத்தோட சில ஸ்பாய்லர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கு. சோ, படத்துல பார்த்துத் தெரிஞ்சுக்கிறேன்னு சொல்றவங்க Skip பண்ணிடுங்க.
யார் இந்த ஆதித்த கரிகாலன்
சோழப் பேரரசரான சுந்தர சோழரின் மூத்த மகன்தான் ஆதித்த கரிகாலன். வடதிசையில் சோழ அரசுக்கு தொல்லை கொடுத்து வந்த ராஷ்டிர கூடர்களையும் சோழ குலத்தின் மிகப்பெரிய எதிரியாகக் கருதப்பட்ட வீரபாண்டியனைக் கொன்று ‘வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி’ என்று பெயர் பெற்றவர். சிறுவயதிலேயே போர் புரியும் எண்ணம் கொண்டு, அதற்கேற்ப இளம் பிராயத்திலேயே போர்க்களம் பூண்டவர். அதேபோல், சிறுவயதில் தனது தங்கை, தம்பியோடு கூட வளர்ந்த பாண்டிய நாட்டைச் சேர்ந்த நந்தினி மீது காதல் கொண்டு, அவரை மணமுடிக்க எண்ணுவார். ஒரு கட்டத்தில், `நந்தினி அர்ச்சகர் வீட்டுப் பெண், நீயோ அரசகுமாரன். அவளோடு பழகாதே’ என்று பெரியோர்கள் எச்சரிக்கவே, அதையும் மீறி தொடர்ச்சியாக நந்தினியோடு பழகுவார். பின்னர், நந்தினி குடும்பத்தோடு பாண்டிய நாட்டுக்குக் குடிபெயர்ந்துவிடுவார், இவரும் போர்க்களங்களில் பிஸியாக இருப்பார். ஆனாலும், நந்தினி மீதான பாசம் இவரை விட்டு அகலாது.
வீரபாண்டியனைத் துரத்திச் செல்கையில், அவர் நந்தினி வீட்டில் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிப்பார். இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஆதித்த கரிகாலன், வீரபாண்டியனுக்காக உயிர்ப்பிச்சை கேட்கும் நந்தினியின் கோரிக்கையையும் மீறி அவரது தலையை வெட்டி எடுப்பார். இந்த சம்பவம் ஆதித்த கரிகாலனின் வாழ்வில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திவிடும். ஆத்திரத்தில் வீரபாண்டியன் தலையைக் கொய்துவிட்டதாக பின்னாட்களில் பார்த்திபேந்திரனிடம் சொல்லி அவர் வருத்தப்படுவார்.
வடதிசை நோக்கி படையெடுத்துச் செல்வதற்காக நண்பன் பார்த்திபேந்திரன், பாட்டன் மலையமானுடன் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து தளவாடங்கள், மற்ற ஏற்பாடுகளைச் செய்து வருவார். இந்தசூழலில் நந்தினி, பழுவேட்டரையரைத் திருமணம் செய்துகொண்ட தகவல் ஆதித்த கரிகாலன் தலையில் இடியென இறங்கும். வீரத்தில் சிறந்து விளங்கிய ஆதித்த கரிகாலன், தனக்குப் பிடித்த காரியத்தை செய்தே ஆக வேண்டும் என்கிற பிடிவாதம் பிடித்தவராக நாவலில் கல்வி அவரை உருவகப்படுத்தியிருப்பார். உயிருக்கு ஆபத்து, கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்குப் போகவேண்டாம் என்று சகோதரி குந்தவை, வந்தியத்தேவன் வாயிலாக எச்சரிக்கை விடுத்திருப்பார். அதேபோல், கடம்பூர் மாளிகைக்கு ஆதித்த கரிகாலன் போவது சரியாக இருக்காது என்று மலையமானும் ஆரம்பத்தில் எச்சரித்திருப்பார். இத்தனையும் மீறி கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்குச் செல்லும் ஆதித்த கரிகாலன், அங்கிருக்கும் பெரிய பழுவேட்டரையர், சம்புவரையர் போன்றவர்களை வார்த்தையால் சீண்டிக்கொண்டே இருப்பார். ராஜ்யபாரத்தை ஏற்பதில் அவருக்கு ஆசை இல்லையென்றாலும், பழுவேட்டரையர் உள்பட அவரது ஆதரவு சிற்றரசர்கள் தனக்கு எதிராகச் செயல்படுவதாக அவர்கள் மீது கோபம் கொள்வார். அதேபோல், பழுவேட்டரையர்கள் தனது தந்தை சுந்தர சோழரை தஞ்சை அரண்மனையில் சிறைபடுத்தி வைத்திருக்கிறார்கள் என்கிற எண்ணமும் அவர்கள் மீது இவருக்குக் கோபத்தை ஏற்படுத்தும். இப்படியான சூழலில் முதிய பிராயம் கொண்ட பெரிய பழுவேட்டரையரை நந்தினி திருமணம் செய்துகொண்டு தஞ்சையில் இருப்பதாலேயே, தந்தை சுந்தரசோழர் அழைத்தும் தஞ்சைக்கு செல்வதைத் தவிர்த்து வருவார்.
கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் நடக்கும் கான்வோ நாவலின் முக்கியமான கட்டம். அந்த சீனில் நந்தினியைத் தவிர்த்து பாண்டிய ஆபத்துதவிகளான ரவிதாஸன் முதலியோர் இருக்கும் நிலையில், இந்தப் பக்கம் வந்தியத் தேவன், பெரிய பழுவேட்டரையர், மணிமேகலை ஆகியோரும் இருக்கையிலேயே ஆதித்த கரிகாலனின் துர்மரணம் நிகழும். இந்த சம்பவம் பொன்னியின் செல்வன் நாவலின் மிகப்பெரிய ட்விட்ஸ்ட்களில் ஒன்று. ஆனால், ஆதித்த கரிகாலனை யார் கொன்றார் என்பது இன்றுவரையில் வரலாற்று ஆய்வாளர்களாலேயே விடை கண்டுபிடிக்க முடியாத ஆயிரம் ஆண்டுகால புதிர். சபதத்தை நிறைவேற்ற நந்தினி அவரைக் கொன்றிருப்பாரா… இல்லை பாண்டிய ஆபத்துதவிகள் கொன்றிருப்பார்களா என பல கேள்விகளை நமக்கு எழும். கொலைப்பழி வந்தியத்தேவன் மீது சுமத்தப்பட்டாலும், ஆதித்த கரிகாலன் மரணித்த நேரத்தில் அவர் மயக்கத்தில் இருப்பதை கல்கி சுட்டிக்காட்டியிருப்பார். மணிமேகலையும் பெரிய பழுவேட்டரையரும் தாங்கள் கொன்றதாகப் பழியை இருவேறு சூழ்நிலைகளில் ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் கொன்றிருக்க வாய்ப்பில்லை என்பதையும் நமக்கு விளக்கியிருப்பார் கல்கி. சோழ சாம்ராஜ்யத்தின் யுவராஜாகப் பட்டம் சூட்டப்பட்ட பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலன் இளம்வயதிலேயே மரணித்தது சோழ குலம் அதுவரை பார்க்காத ஒரு நிகழ்வு. ஆதித்த கரிகாலன் மறைவு என்கிற பெரிய அதிர்வு, கதையின் போக்கையே திசைதிருப்பிவிடும். கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்னாருங்குற ட்விஸ்டுக்கெல்லாம் பெரிய ட்விஸ்ட் இதுதான்!
ஆதித்த கரிகாலனை யார் கொன்னுருப்பாங்கனு நினைக்கிறீங்க… உங்க கருத்துகளை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.