பெரும்பான்மையானவர்களிடம் இன்றைக்கு இருக்கும் முக்கியமான பழக்கம் ’Binge-watching’ என்பதுதான். அதாவது தொடர்ந்து டி.வி, லேப்டாப் மற்றும் மொபைல் ஆகியவற்றில் ஒரு சீரிஸையோ, படத்தையோ ஒரே மூச்சில் பார்த்து முடிக்கும் பழக்கம். அதனால் ஏற்படும் பின்விளைவுகள், தீர்வு, அறிகுறிகள் ஆகியவற்றைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்.
Binge-watching
இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் டெக்னாலஜிதான் நம்மை வழிநடத்துகிறது எனலாம். வேலை, பொழுது போக்கு என அனைத்துமே டெக்னாலஜிகளைச் சார்ந்தே இருக்கிறது. குறிப்பாக, கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் நாம் அதிகமாக நேரத்தை செலவிடுவது லேப்டாப், மொபைல் மற்றும் டி.வி-யுடன்தான். ஆனால், அதிக நேரம் தொடர்ந்து லேப்டாப், மொபைல் மற்றும் டி.வி-க்களை பார்ப்பது (Binge-watching) உங்கள் உடலுக்கும் மனதுக்கும் அதிக ஆபத்துகளை விளைவிக்கும். தொடர்ந்து 4 மணி நேரம் வேலை மற்றும் வெப் சீரீஸ்களைப் பார்ப்பதால் எதைப் பற்றியும் உங்களது மூளை சிந்திக்க முடியாத நிலையை எட்டும் என்றும் கால், நுரையீரல் போன்றவற்றில் ரத்தக்கட்டு ஏற்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏன், பக்கவாதம் ஏற்படக்கூட வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஒரே இடத்தில் சுமார் 4 மணி நேரங்களுக்கு மேலாக அமர்ந்து லேப்டாப், டி.வி மற்றும் மொபைல் போன்றவற்றைப் பார்ப்பதால் நரம்புகளில் ரத்தக்கட்டு ஏற்படும். இதனை venous thromboembolism என்பர். இது மிகவும் தீவிரமாகும் பட்சத்தில் Deep Vein Thrombosis (DVT), Pulmonary Embolism போன்றவையும் ஏற்படும். பெரும்பாலும் மக்கள் இதுதொடர்பான அறியாமையில் இருப்பதால் மிகவும் சிவியரான நிலைக்கு தள்ளப்படுவர். அசைவின்றி ஒரே இடத்தில் இருப்பதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறைந்து ரத்த உறைதல் ஏற்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் இந்த இரத்த உறைதல் நிலையைக் குறைக்கலாம். ஆனால், அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு மருத்துவ உதவி நிச்சயம் தேவைப்படுகிறது என்கிறார்கள். ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்களும் ரத்த உறைதலை இன்னும் அபாயகரமானதாக மாற்றும்.
Physical Activities அவசியம்
லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் சரி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாலும் சரி, தொடர்ந்து ஒரே இருப்பாக அசைவின்றி இருக்காமல், அடிக்கடி இடைவேளை எடுத்துக்கொள்வது அவசியம். விளம்பர இடைவேளைகள் போடும்போது எழுந்து சிறிது தூரம் நடக்கலாம். வெப் சீரீஸ் மற்றும் வேலை போன்றவற்றை பார்க்கும்போது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கை, கால்களை நீட்டி உடல் அசையும்படி வேலைகளை செய்யலாம். physical activities மிகவும் அவசியம் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
DVT ஏற்பட்டதற்கான அறிகுறிகள்
- திடீரென அல்லது மெதுவாக கால் மற்றும் கை பகுதியில் வீக்கம் ஏற்படுதல்
- வீங்கிய பகுதி சூடாகவும் வலியுடன் இருத்தல்
- நிற்கும்போது அல்லது நடக்கும்போது கால் பகுதியில் அதிகம் வலி ஏற்படுதல்
- தோல் பகுதி சிவந்தும் நிறம் மாறியும் காணப்படுதல்
- தோலின் மேற்பகுதியில் நரம்புகள் புடைத்துக் காணப்படுதல்
Pulmonary Embolism ஏற்பட்டதற்கான அறிகுறிகள்
- திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்
- இருமலுடன் கூடிய மார்பு வலி ஏற்படுதல்
- முதுகுப்பகுதியில் வலி ஏற்படுதல்
- இருமல் மற்றும் சளி வெளிப்படும்போது ரத்தம் வருதல்
- சாதாரணமாக வியர்வை ஏற்படுவதைவிட அதிகமாக வியர்த்தல்
- இதயத்துடிப்பு வேகமாக இருத்தல்
- மயக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு இருத்தல்
Also Read: Drop Box, Cloud Storage-லாம் பழங்கால டெக்னாலஜி… புதுசு என்ன தெரியுமா..?