இங்கிலாந்து ராணி எலிசபெத்தோட இறுதி ஊர்வலத்தை Youtube லைவ்ல பார்த்துட்டு இருந்தேன். ராணியை புதைக்கிற சர்ச்ல அவரோட சவப்பெட்டியை வச்சி அவருக்கான இறுதி சடங்குகள் எல்லாம் நடந்து முடிஞ்சது. சுத்தி மதகுருமார்கள், அவரோட குடும்பம் எல்லாம் இருக்காங்க. திடீர்னு பார்த்தா யாரோ பீப்பி ஊதுறதை காமிச்சாங்க. இது ஏதோ அந்த ஊர் சடங்கு போலனு வெயிட் பண்ணேன். திரும்ப கேமரா சர்ச்சுக்கு வந்தப்போ எல்லாரும் அதே இடத்துல இருக்காங்க. ஆனா சவப்பெட்டி மட்டும் மிஸ் ஆகிடுச்சு. எங்கடா போச்சு நம்ம எதுவும் மிஸ் பண்ணிட்டோமானு தேடி பார்த்தா அந்த பிடில் வாசிச்ச நேரத்துல சவப்பெட்டி காணாம போயிருக்கு. ஆனா யாருமே இருந்த இடத்தை விட்டு நகரவேயில்லை. இது முடிஞ்சதும் தேசிய கீதம் பாடி எல்லாம் வீட்டுக்கு போயிட்டாங்க. என்ன நடந்துச்சு.. சவப்பெட்டி எங்க போச்சுனு நெட்ல தேடினப்போ ஒரு ஆச்சர்யமான விஷயம் பார்த்தேன். அது என்னங்கறதை இந்த வீடியோல சொல்றேன். அதுக்கு முன்னாடி ராணியோட சவப்பெட்டில இருந்த எட்டுக்கால் பூச்சில இருந்து ராணியோட உடலை வைக்கிற ரகசிய அறை வரைக்கும் இங்கிலாந்து ராணியோட இறுதி ஊர்வலத்துல நடந்த சுவாரஸ்யங்களைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
* கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி மதியம் ஸ்காட்லாந்துல இருக்கிற பால்மோரல் அரண்மனைல 96 வயசு எலிசபெத் இறந்துபோறாங்க. அதைத் தொடர்ந்து அவங்களோட பையன் சார்ல்ஸ் மன்னராகுறாரு. நீண்ட நாட்கள் இங்கிலாந்தோட ராணியா இருந்தது எலிசபெத் அவர்கள்தான். பொதுவா இங்கிலாந்து ராணி இறந்துட்டா அவருடைய இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்கு Operation London Bridge-னு பேர். ஆனா இவங்க லண்டன்ல இல்லாம ஸ்காட்லாந்துல இறந்ததால இந்த ஆபரேசனுக்கு Operation Unicorn அப்படினு பேர் வச்சிருந்தாங்க.
* ஸ்காட்லாந்துல இருந்து ராணியோட உடலை லண்டனுக்கு ஃப்ளைட்ல எடுத்துட்டு வந்தாங்க. பக்கிங்காம் அரண்மனைல அவங்களோட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினபிறகு செப்டம்பர் 14 ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் ஹால்ல வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக அனுமதிக்கப்பட்டது.
* வனேசா நந்தகுமாரன் என்கிற 56 வயது பெண்மணிதான் முதல்முதல்ல அஞ்சலிக்கு அனுமதிக்கப்பட்டவர். இவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். “உள்ளே போனதும் பயங்கர எமோசனலா இருந்தது. கஷ்டப்பட்டுதான் அழுகையை கட்டுப்படுத்தினேன். வரலாற்றுல இடம்பிடிச்சிருக்கேன்னு மகிழ்ச்சியா இருக்கு”னு சொன்னாங்க வனேசா!
* ராணியோட சவப்பெட்டி மேல அவங்களோட தங்க கிரீடமும், செங்கோலும் வைக்கப்பட்டிருந்தது. அதோட ராணிக்குப் பிடித்த பூக்களால் ஆன ஒரு பூச்செண்டு வைத்து அதுல “In loving and devoted memory. Charles R.” அப்படினு சார்ல்ஸ் எழுதி கையெழுத்திட்ட ஒரு கார்டு இருந்தது.
* இரண்டரை லட்சம்பேர் இராணியின் உடலை பார்வையிட்டனர். சில பேர் கிட்டத்தட்ட 17 மணி நேரம் வரிசையில் நின்று பார்த்தனர். பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 2000 தலைவர்களும் பார்வையிட்டனர். நம் நாட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களும் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
* செப்டம்பர் 19 ஆம் தேதி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. தொடங்குறதுக்கு முன்னாடி எலிசபெத்தோட வயதை குறிக்குற விதமா 96 முறை மணியடிக்கப்பட்டது.
* ராணுவ ஒழுங்குனு சொல்வாங்கள்ல அது இந்த நிகழ்வுல பார்க்க முடிஞ்சது. யார் சவப்பெட்டியைத் தூக்கணும். யார் சவப்பெட்டிக்கு காவல் நிக்கணும், எத்தனை பேர் சவப்பெட்டி வைக்கிற வண்டியை இழுத்துட்டு வரணும், இப்படி எல்லாமே அவ்வளவு நேர்த்தியா இருந்தது. சொல்லப்போனா நம்ம ஊர்ல குடியரசு தின அணிவகுப்புக்கு ஒத்திகை பார்ப்பாங்கள்ல அந்த மாதிரி இதுக்கும் ஒத்திகை பார்த்திருக்காங்கனா பாருங்க.
* இந்த இறுதி ஊர்வலத்துல அரச குடும்பத்தைச் சேர்ந்தவங்க கறுப்பு ட்ரெஸ்லதான் இருக்கணும்ங்குறது நடைமுறை. அதனால எல்லாருமே கறுப்பு உடைல இருந்தாங்க. இதுல இளவரசி மேகனோட உடை ரொம்ப ஃபேஷனா இருந்தது இந்த நேரத்துல இதெல்லாம் தேவையானு ஒரு க்ரூப்பு ட்விட்டர்ல திட்டிட்டு இருந்தது. இன்னொரு பக்கம் இளவரசி கேட் ராணியோட நெக்லஸை போட்டிருந்தது, மேகன் ராணியோட ஒரு தோடு போட்டிருந்தது, வில்லியமோட மகள் சாரலட் ராணி கொடுத்த ஒரு பேட்ஜ் அணிந்திருந்தது இதெல்லாம் கூட டிவிட்டர்ல வைரலாச்சு.
* என்னங்க சாவு வீட்ல இதெல்லாமா நோட் பண்ணுவாங்கனு நீங்க கேட்கலாம். ஒரு சம்பவம் சொல்லவா? ராணியோட சவப்பெட்டில இருந்த பூக்கள் மேல ஒரு எட்டுக்கால் பூச்சி ஓடிட்டு இருந்தது. இது லைவ் டெலிகாஸ்ட்ல வந்தது. இதை ஒரு நியூஸ்னு ரிப்போர்ட் பண்ணிருந்தாங்க வாஷிங்டன் போஸ்ட். இதுக்கு என்ன சொல்றீங்க?!
* வெஸ்ட்மின்ஸ்டர் அபேல இருந்து 20 மைல் தொலைவுல இருந்து விண்ட்ஸர் அரண்மனைக்கு ராணியோட உடலை கார்ல எடுத்துட்டு போனாங்க. டிவி சேனல்ஸ் இந்த ட்ராவலை ஹெலிகாப்டர் மூலமா கவர் பண்ணாங்க. மொத்த ரோடும் லாக் டவுன் போட்ட மாதிரி அவ்வளவு அமைதியா இருந்தது.
* வின்ட்ஸர் அரண்மனைல இருந்த செயிண்ட் ஜார்ஜ் தேவலாயத்துலதான் ராணியோட இறுதிச் சடங்கு நடந்தது. இந்த இறுதிச் சடங்கு நடந்த இடத்துக்கு ராணி வளர்த்த செல்லப்பிராணிகளான இரண்டு நாயும் ஒரு குதிரையும் அழைத்து வரப்பட்டது.
* மத குருமார்கள் அவங்களோட மத சடங்குகளையெல்லாம் பண்ணினாங்க. அது முடிஞ்சதும் ராணியோட சவப்பெட்டியில இருந்த கிரீடமும், செங்கோலும் அகற்றப்பட்டது. அது முடிஞ்சதும் ராணிகிட்ட இருந்த அத்தனை பதவிகளும் புதிய மன்னருக்கு போறதா அறிவிக்கப்பட்டது. இப்போதான் இன்னொரு சுவாரஸ்யம் நடந்தது. ஒருத்தர் ஒரு குச்சியை உடைத்து ராணியோட சவப்பெட்டி மேல வச்சார்.
* இது என்னன்னா லார்டு சேம்பர்லைன்ங்குறது பக்கிங்காம் அரண்மனைல ஒரு முக்கியமான பதவி. ஊர் தலையாரினு சொல்வாங்கள்ல அந்த மாதிரி ஒண்ணு. அரண்மனைல இவர்தான் மொத்த கண்ட்ரோலும். இவர் கைல எப்பவும் இந்த குச்சி இருக்கும். இது இவரோட செங்கோல் மாதிரி. ராணி இறந்ததும் இவரோட பதவி முடிவுக்கு வரும் அதோட அடையாளமாதான் இந்த குச்சியை உடைக்கிற சடங்கு. இப்போ புதுசா வந்த ராஜா அவர் ஒரு லார்டு சேம்பர்லைன நியமிப்பாரு.
* எல்லா சடங்குகளும் முடிஞ்ச பிறகு அந்த தேவாலயத்தோட நடுவுல ராணியோட சவப்பெட்டி இருக்கு. ஆளாளுக்கு அவங்க இடத்துல நிக்குறாங்க. அடுத்து என்ன நடக்கப்போகுதுனு பார்த்தா தீடீர்னு தேவாலயத்து பக்கத்துல ஒருத்தர் BagPipe அப்படிங்குற இன்ஸ்ட்ரூமெண்ட் வாசிக்கிறதை காமிச்சாங்க. அது முடிச்சு திரும்பி தேவாலயத்தைக் காட்டும்போது பார்த்தா ராணியோட சவப்பெட்டி மட்டும் மிஸ்ஸிங். ஆனா எல்லாரும் அதே இடத்துல இருக்காங்க. என்னடா நடந்துச்சுனு தேடிப்பார்த்தா ஆக்சுவலா நம்ம ஊர்ல இறந்தவங்களை புதைக்கிற மாதிரி அங்க பண்ணமாட்டேங்குறாங்க. இந்த தேவாலயத்துக்கு அடில ராயல் வால்ட் அப்படிங்குற ஒரு ரகசிய அறை இருக்கு. எல்லா சடங்கும் முடிஞ்சதும் இந்த சவப்பெட்டியை ஒரு லிஃப்ட் மூலமா கொஞ்சம் கொஞ்சமா கீழ இறக்கி இந்த ராயல் வால்ட்ல வச்சி மூடிடுவாங்க. இந்த நடைமுறை எதுவும் லைவ்ல மக்கள் பார்க்கக்கூடாதுங்குறது ஒரு ரூல். அதனால அதை டெலிகாஸ்ட் பண்ணமாட்டாங்க. ராணி மட்டுமல்ல அவங்களோட கணவர் பிலிப்ஸ், அவங்களோட அப்பா ஜார்ஜ் இப்படி எல்லாரோட உடலும் இந்த ராயல் வால்ட்லதான் வைக்கப்படும். சில நாட்கள் கழித்து ராணியோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க மட்டும் எடுத்து பிலிப்ஸை புதைச்ச இடத்துக்கு பக்கத்துல புதைச்சிருவாங்க. இதுதான் அங்க நடைமுறை.
ஒரு இனத்தோட கலாசாரம் என்ன அவங்க நடைமுறை என்னனு தெரிஞ்சுக்கணும்னா அந்த காலாசாரத்துல இறுதிச் சடங்கு எப்படி நடக்குதுனு தெரிஞ்சுகிட்டாலே போதும். அப்படித்தான் இந்த ராணியோட இறுதிச்சடங்குல இங்கிலாந்து அரச குடும்பத்தோட சுவாரஸ்யமான கலாசார சம்பிரதாயங்களை பார்க்க முடிஞ்சது.