மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இன்று துலாம் ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.
துலாம் ராசி
சித்திரை 3-ம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ம் பாதம் வரையிலான நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் துலாம் ராசிக்காரர்கள். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சனி இந்த ராசியில்தான் உக்கிரமடைகிறார். இவர்கள் தங்கள் வாழ்நாளில் அவசியம் சென்று வழிபட வேண்டிய கோயில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். சுப்பிரமணியனை வேண்டினால் துலாம் ராசிக்காரர்களின் தடைகள் விலகியோடும் என்பது ஐதீகம். எத்தனை கோபம், மனக்குழப்பம் இருந்தாலும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால், அவையனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு சந்தன காப்பு, பஞ்சாமிர்த படையல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலைமேல் வீற்றிருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி. வள்ளியை சிறைபிடித்து வந்து திருமணம் செய்த தலம் என்பதால், திருமண தடை நீங்க இவர் அருள்புரிவார் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். ஓர் ஆண்டின் 365 நாட்களைக் குறிக்கும் வண்ணம் 365 படிக்கட்டுகள் ஏறி சுப்பிரமணியனைத் தரிசிக்கலாம். முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு. சுப்பிரமணியை 5 குறிப்பிட்ட தினங்களில் தொடர்ந்து வழிபடும் பக்தர்கள் அவரின் ஆசியைப் பெற்றும் அவரது வாழ்கையில் அரிய பேறுகளை பெற்றவர்கள் ஆகிறார்கள்.
முருகப் பெருமான் சரவணப் பொய்கை தீர்த்தத்தில் கார்த்திகை பெண்களுக்குக் குழந்தையாக அவதரித்த திருக்குளம். திருத்தணிகை சரவணப் பொய்கை தீர்த்தத்தில் நீராடுவோர் தங்களது உடல் உபாதைகள், பாவங்கள் களையப்படுவதக ஐதீகம். சப்தரிஷிகள் என்று கூறப்படும் வசிஷ்டர் முதலான ஏழு முனிவர்கள் இங்கு முருகனைப் பூஜித்தனர். அவர்கள் பூஜித்த இடம் மலையின் தென்புறத்திசையில் உள்ளது. அவர்கள் அமைத்த ஏழு சுனைகளும் மற்றும் கன்னியர் கோயிலும் இங்கு உள்ளன. இந்த இடம் இப்போது ஏழு சுனை கன்னியர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ஆடிக்கிருத்திகை, மாதாந்திர கிருத்திகை விரத நாட்கள், ஆண்டுதோறும் டிசம்பர் 31 – ஜனவரி 1-ல் நடைபெறும் திருப்புகழ் திருப்படி திருவிழா புகழ்பெற்றது.
எப்படிப் போகலாம்?
சென்னை – மும்பை ரயில் பாதையில் அரக்கோணத்தில் இறங்கி 13 கி.மீ. தொலைவில் இருக்கும் திருத்தணி செல்லலாம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயிலில் அரக்கோணம் செல்லலாம். அங்கிருந்து பேருந்து வசதி இருக்கிறது. சென்னையிலிருந்து 87 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 37 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து 66 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு எல்லா வழித்தடங்களிலும் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்
- ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருவள்ளுர்
- ஸ்ரீ வீரராகவஸ்வாமி திருக்கோயில், திருவள்ளூர்
- வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர்
- பழவேற்காடு, பூண்டி ஏரி