மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இன்று கன்னி ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.
கன்னி ராசி
உத்திரம் 2, 3, 4-ம் பாதம் வரை, அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம் வரை இருப்பவர்கள் கன்னி ராசிக்காரர்கள். ராசியின் அதிபதி புதன். கன்னி ராசிக்காரர்கள் அவசியம் சென்று வழிபட வேண்டிய கோயில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலகட்டத்தில் நடைபெறும் லட்ச தீப விழாவின்போது சென்று வழிபட்டால் எல்லா வளங்களும் நலங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு வேதகிரீஸ்வரர் ஆலயம். மலைமேல் ஸ்ரீவேதகிரீஸ்வரராகவும் தாழக் கோயிலில் பக்தவத்சலேஸ்வரராகவும் ஈசன் அருள்புரிகிறார். மலைமேல் இருக்கும் இறைவி சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை. தாழக் கோயிலில் இருப்பவர் திரிபுரசுந்தரி.
சிவன் சுயம்புலிங்கமாகக் காட்சியளிக்கும் இத்தலத்தில், வழக்கமான சிவன் தலங்களில் இருக்கும் நந்தியம்பெருமான் சிலை இல்லை. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் என மூவராலும் பாடல்பெற்ற 44 தலங்களுள் முக்கியமான தலம் இது. தேவாரப் பாடல்பெற்ற தொண்டை மண்டலத் தலங்களுள் 28-வது தலமாகவும் இது விளங்குகிறது. மன நிம்மதி வேண்டுவோர் வேதகிரீஸ்வரரைத் தரிசிக்க இங்கு அதிகளவு வருகிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி ஒரு மண்டலம் இறைவனை வேண்டினால், பூரண குணமடைவார்கள் என்று நம்பப்படுகிறது. சுவாமி – அம்பாளுக்கு வேட்டி, சேலை படைத்தல், அன்னதானம் அளித்தல், இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பிரசாதம் அளித்தல் வழக்கமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம் முதல் பட்சி தீர்த்தம் வரையிலான 12 தீர்த்தங்கள் மலையைச் சுற்றி அமைந்திருக்கின்றன.
எப்படிப் போகலாம்?
மகாபலிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் திருக்கழுகுன்றம் அமைந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து செங்கல்பட்டுக்கு பேருந்து, ரயில் வசதிகள் இருக்கின்றன. அருகிலிருக்கும் விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம். செங்கல்பட்டிலிருந்து 14 கி.மீ தூரத்திலும், மகாபலிபுரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்திலும் இந்தத் தலம் அமைந்திருக்கிறது. பேருந்தில் சென்றால் கோயில் வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம்.
மலை அடிவாரத்தில் இருக்கும் தாழக் கோயில் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும். மலை மேல் இருக்கும் மலைக்கோயில் காலை காலை 6 மணி முதல் பகல் 9 மணி வரையிலும், மாலை 4.30 – 6.30 மணிவரையிலும் திறந்திருக்கும்.
Also Read – Rasi Temples: சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய பதஞ்சலிநாதர் ஆலயம்!
மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்
- சர்வதேச புகழ்பெற்ற மகாபலிபுரம் கடற்கரை கோயில்
- காஞ்சிபுரத்தில் காஞ்சி காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் கோயில்கள், காஞ்சி மடம்
- சுந்தர வரத பெருமாள் கோயில், உத்திரமேரூர்.
- குமரக்கோட்டம் முருகன் கோயில்
- வல்லக்கோட்டை முருகன் கோயில்