இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இதனால், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து மாவட்டங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் கடையை திறந்தபோது ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பிட்ட அந்தக் கடையில் எலிகள் பத்துக்கும் மேற்பட்ட பாட்டில்களில் இருந்து ஒயினைக் குடித்து காலி செய்துள்ளன. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் அருகே காளம்புழா என்ற பகுதி உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடையை ஊழியர்கள் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த திங்கள் கிழமை காலை திறந்துள்ளனர். அப்போது, டாஸ்மாக்கில் இருந்த ஒயின் பாட்டில்கள் காலியாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன்பின்னர், எலிகள் இந்த ஒயின் பாட்டில்களில் இருந்த ஒயினை காலி செய்திருப்பதை கண்டறிந்துள்ளனர். எலிகள் ஒயின் பாட்டில்களை மட்டுமே காலி செய்துள்ளன. பாட்டில்களின் மூடியை சிதைத்து எலிகள் ஒயின்களை குடித்துள்ளன. மற்ற மதுபான வகைகள் எதையும் எலிகள் குடிக்கவில்லை. காலி செய்த ஒயின் பாட்டில்களின் விலை கிட்டத்தட்ட ரூபாய் 1,500 என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் தங்களது அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
எலிகள் மதுபானங்களை குடிக்கும் செய்திகள் வெளியாவது இது முதன்முறை அல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் காவல்துறையானது கள்ளச்சாராயங்களை பறிமுதல் செய்து வைத்திருந்தன. இவற்றை எலிகள் குடித்துவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, இந்த விஷயம் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தின. அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள் மற்றும் சமூக செய்ற்பாட்டாளர்கள் சர்ச்சைகளில் சிக்கி ட்ரோலுக்கு ஆளாவது வழக்கம். ஆனால், கடந்த சில நாள்களாக அணில், எலி போன்றவை சர்ச்சைகளில் சிக்கி ட்ரோலுக்கு ஆளாகி வருகின்றன. இந்த சம்பவத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க மற்றும் எலிகளால என்ன பிரச்னையெல்லாம் சந்திச்சிருக்கீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read : வில்லேஜ் குக்கிங் சேனல் ஆரம்பிக்கப்பட்ட கதை தெரியுமா?