கொரோனா இரண்டாவது அலை, ஏக இந்தியாவையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் அதிகரிக்கும் மரணங்கள், இந்தியர்கள் ஒவ்வொருவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவமனையில் மருந்தில்லை; மாத்திரைகள் இல்லை என்பதை நாம் இதற்கு முன்பு பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நோயாளிகளுக்கு இடமே இல்லை என்பதையும், மருத்துவமனையில் இடம்பிடிக்க, வரிசைகட்டி நோயாளிகள் காத்திருப்பதையும் பெரியளவில் இப்போது பார்க்க முடிகிறது. அதோடு வரலாற்றில் இதுவரை நாம் கேட்டிராத விநோதமாக, “சுடுகாட்டில் பிணங்களை எரிக்க இடம் இல்லை” என்ற செய்தி, ஒவ்வொருவரையும் மரணத்திற்கு பிறகு என்னாகுமோ… என்றும் யோசிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும், கொரோனா கட்டுப்படுத்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. அதையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனைவரும் நிதி அளிக்க முன்வரவேண்டும்” என கோரிக்கை விடுத்தார். அதையடுத்துத் திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் நிதியளித்து வருகின்றனர். அவர்களில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரது கணவர் விசாகனுடன் சேர்ந்து 1 கோடி ரூபாய், நிதியளித்தார்.

அதன்பிறகுதான் நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் நிதியுதவி அளித்தார்.
சௌந்தர்யா-விசாகன் பின்னணி என்ன?

ரஜினியின் மகள் சௌந்தர்யா திருமணம் செய்திருக்கும் விசாகனின் அப்பா சூலுர் வணங்காமுடி. இவர் தி.மு.க பின்புலம் உடையவர். இவர்கள் நடத்தும் நிறுவனம்தான், அபெக்ஸ் லேபராட்டிரிஸ். இந்த நிறுவனம் இந்தியாவின் “டாப் 50” மருந்து நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும், கொரேனா முதல் அலையின்போது, கொரோனா தெம்பூட்டும் மருந்தான CLI VIRA என்ற மருந்தைத் தயாரிக்கும் அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கோவேக்ஸின் மருந்தை மாநில அரசுகளும், தனியார் மருந்து நிறுவனங்களும் தயாரிக்க அனுமதி கோரி வருகின்றன. அந்த அனுமதியைக் கோரும் நிறுவனங்களில் அபெக்ஸ் லேபராட்டிரிஸ் நிறுவனமும் உண்டு. இந்தப் பின்னணியில்தான் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவும், அவரது கணவர் விசாகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.