குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 20,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் விவகாரத்தில் சென்னையில் வைஷாலி என்பவரைக் கைது செய்திருக்கிறார்கள். இதுதொடர்பாக, சென்னை, விஜயவாடா, டெல்லியில் தொடர் சோதனை நடத்தப்படுகிறது. பின்னணி என்ன?
ஆப்கானிஸ்தான் ஹெராயின்
ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு 2 கண்டெய்னர்களில் ஹெராயின் என்ற போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, ஈரானில் இருந்து வந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட இரண்டு கண்டெய்னர்களை சோதனையிட்டபோது, சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கண்டெய்னர் ஆந்திர மாநிலம் விஜயவாடா சத்தியநாராயணபுரம் முகவரியில் இயங்கும் ஆஷி டிரேடிங் கம்பெனி நிறுவனத்தின் பேரில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. முகத்துக்குப் பூசும் பவுடர் தயாரிப்புக்கான மூலப்பொருள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விஜயவாடாவில் சோதனை நடத்தியபோது, அந்த முகவரி போலியானது என்பதும் தெரியவந்தது.
சென்னையில் கைது
குறிப்பிட்ட முகவரியில் இயங்குவதாகக் கணக்குக் காட்டப்பட்டிருக்கும் அந்த நிறுவனம் சுதாகர் – துர்கா பூர்ணா வைஷாலி தம்பதிக்குச் சொந்தமானது என்றும் அவர்கள் சென்னையில் வசித்து வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை வந்த விஜயவாடா போலீஸார், கொளப்பாக்கம் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த வைஷாலியைக் கைது செய்திருக்கிறார்கள். அவரது கணவர் சுதாகர் தலைமறைவான நிலையில், அவரை போலீஸார் தேடி வருகிறார்கள். உலக அளவில் ஹெராயின் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் ஆப்கானிஸ்தான், தாலிபான்கள் வசமான பின்னர் கைப்பற்றப்படும் மிகப்பெரிய அளவிலான ஹெராயின் போதைப்பொருள் இதுவாகும். இதுகுறித்து டெல்லி, சென்னை, விஜயவாடாவில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் டெல்லியில் 350 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.