சஹாரா… இந்த நிறுவனத்தோட பெயரைக் கேள்விப்படாதவங்க இந்தியாவுலயே இருக்க முடியாது. குறைந்தபட்சம் இந்திய கிரிக்கெட் டீமோட ஜெர்சில இருந்த பேர்ங்குறதாலகூட நிறைய பேருக்குத் தெரியும். அதோட நிறுவனர் சுப்ரதா ராய் சமீபத்துல மறைஞ்சிருக்காரு. சுப்ரதா ராயோட வாழ்க்கையும், சஹாராவோட வரலாறும் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேசனல் ஸ்டோரி.. அதே நேரத்துல இந்தியாவோட மிகப்பெரிய மோசடினு சொல்லப்பட்ட கான்ஸ்பிரசி ஸ்டோரி.. யார் இந்த சுப்ரதா ராய்?
பீகார்ல ஒரு கிராமத்துல சின்ன சின்ன பிசினஸ் பண்ணிட்டு இருந்த பையன்தான் சுப்ரதா ராய். சாக்ஸ் விக்குறது, ஸ்னாக்ஸ் கடை, ஸ்கூட்டர்ல போய் ஃபேன்லாம் விக்குறதுனு எல்லா பிசினஸூம் பண்றாரு. எல்லாமே தோல்விலதான் முடியுது. அடுத்து பெருசா எதாச்சும் பண்ணலாம்னு தோணினப்போ வந்த ஐடியாதான் சிட் ஃபண்ட். பேங்க் வசதிகள் அதிகமா இல்லாத காலத்துல மக்களுக்கு பணத்தை சேமிச்சு வைக்கிற வழியா சிட் ஃபண்ட்தான் இருந்தது. ஒரு நாளைக்கு அஞ்சு ரூபா, 10 ரூபானு தினமும் கட்டணும். மூணு வருசத்துல நீங்க கட்டுன பணம் வட்டியோட திரும்ப வரும்னு சொல்றாரு. ஸ்கூட்டர்ல வீடா வீடா போய் இவரே பணத்தை வாங்கி வரவு வச்சிக்குவாரு. மொத்தமா ஒரு நாள் திருப்பிக் கிடைக்கும்போது அவங்களுக்கு கல்யாணம், படிப்புனு யூஸ் ஆகும்னு மக்களும் ஆர்வமா கட்ட ஆரம்பிக்குறாங்க. இப்படி சின்னதா ஆரம்பமாகுது சஹாரா.
நிறைய பேரை கலெக்சன் ஏஜெண்டா வேலைக்கு எடுக்குறாரு. எல்லாருக்கும் ஒயிட் ஷர்ட், டைனு யூனிஃபார்ம். ஒவ்வொரு வீட்டுக்கும் அவங்களே போய் கலெக்ட் பண்ணிக்குவாங்கனு வளர ஆரம்பிக்குது. நிறைய ஏஜெண்டுகளை வேலைக்கு எடுக்குறது மூலமா நிறைய டெபாசிட்டர்ஸ் உள்ள வர்றாங்க. ஆரம்பத்துல இருந்தே டெபாசிட்டர்ஸ், ஏஜெண்ட்ஸ் எல்லாரையும் சேர்த்து சஹாரா குடும்பம்னுதான் ப்ரொஜெக்ட் பண்றாரு. உலகத்துலயே மிகப்பெரிய குடும்பம்னு சஹாராவை சொல்றாரு சுப்ரதா ராய். ஒரு கட்டத்துல 12 லட்சம் ஏஜெண்டுகள் சஹாரால இருந்தாங்க. அதாவது இந்தியாவுலேயே அதிகமான எம்ப்ளாயி இருக்குற இரண்டாவது கம்பெனியா சஹாரா மாறுது. முதல் கம்பெனி இந்தியன் ரயில்வே. கிட்டத்தட்ட 6 கோடி பேர் சஹாரால பணம் கட்டி இன்வஸ்டாரா மாறுறாங்க.
அவ்வளவு பணத்தையும் வேற வேற பிசினஸ்ல இன்வெஸ்ட் பண்றாரு சுப்ரதா ராய். ஹோட்டல் பிசினஸ், டிவி சேனல், ஏர் சஹாரானு விமான சேவை நடத்துறாரு. இதுல ஒரு காமெடி என்னன்னா முதன்முதல்ல அவர் ஃபேன் வித்தப்போ அதோட பேர் ஏர் சஹாரா. இந்தியன் கிரிக்கெட் டீமோட டீசர்ட்ல இருந்த சஹாராவை யாரும் மறக்க முடியாது. ஐ.பி.எல் வந்தப்போ புனே டீமை வாங்குறதுனு எல்லா இடத்துலயும் இன்வஸ்ட் பண்றாரு. சஹாரா சிட்டி, ஆம்பி வேலி ப்ராஜக்ட்னு வீடு கட்டுறதெல்லாம் இல்ல ஊர் கட்டுறதையே பண்ணி அமர்க்களம் பண்றாரு. ஒரு ஸ்கூட்டர், 2000 ரூபாயோட பிசினஸ் தொடங்குன சுப்ரதா ராய் தன்னோட மகன்களுக்கு 500 கோடி செலவு பண்ணி கல்யாணம் பண்ற அளவுக்கு வளர்ந்தாரு.
ஒருத்தர் மூணு வருசம் இன்வெஸ்ட் பண்ணி கடைசியா காசு எடுக்கலாம்னு போறப்போ இப்போ எடுக்காதீங்க, இன்னும் 2 வருசம் கழிச்சு எடுத்தா டபுள் ஆகும்னு சொல்றது. திரும்ப இந்த ஸ்கீம்ல இன்வெஸ்ட் பண்ணுங்கனு சொல்றதுனு தொடர்ந்து இன்வெஸ்ட் பண்ண வைக்கிறாங்க. திடீர்னு மாவட்டத்துக்கு ஒரு ஊர்ல ஆபிஸ் போட்டு இனிமே வீட்டுக்கு வீடு வந்து கலெக்சன் பண்ண மாட்டோம். நீங்கதான் ஆபிஸ்க்கு வந்து கட்டணும்னு சொல்றது. அப்படி பண்ணா டெய்லி 50 ரூபா கட்டுற ஒருத்தர் வேலையைக் கெடுத்துட்டு வரமுடியாது. ஒழுங்கா கட்டமாட்டாரு. நீங்க தொடர்ந்து கட்டல அதனால உங்க பணம் வராதுனு சொல்றது. இப்படி நிறைய குழப்பங்கள் நடக்க ஆரம்பிக்குது. ஒரு கட்டத்துக்கு அப்பறம் புதுசா உள்ளே ஆட்கள் வரமாட்டேங்குறாங்க பிசினஸ் அடி வாங்க ஆரம்பிக்குது. இந்த சஹாரா பிசினஸ் மாடலைப் பொறுத்தவரைக்கும் பிரமிடு ஸ்ட்ரக்சர்னு சொல்வாங்க. அதாவது சிட் ஃபண்ட்ல டெய்லி 10 ரூபா, 20 ரூபா டெபாசிட் பண்றாங்கள்ல அவங்க அதிகமா இருந்தாதான் மேல இருக்குற ஹோட்டல், ஏர்வேஸ் பிசினஸ்க்கெல்லாம் காசு வரும். இப்போ அந்த பிரமிடுல கீழே அடிவாங்குனதும் மொத்த சிஸ்டமும் அடி வாங்க ஆரம்பிக்குது.
இந்த நேரத்துல இன்வெஸ்ட்மெண்டுக்காக தன்னோட ஒரு கம்பெனியை ஸ்டாக் மார்க்கெட்ல பப்ளிக் லிஸ்ட்டடா மாத்தலாம்னு போறாரு. அங்கதான் மொத்தமா சஹாரா சாம்ராஜ்யத்துக்கே ஆப்பு வருது. சஹாரால கிட்டத்தட்ட 3 கோடி இன்வஸ்டர் இருக்காங்கனு கணக்கு காமிச்சா இது சட்டவிரோதமானது அத்தனை பேருக்கும் காசை வட்டியோட திருப்பி கொடுங்கனு சுப்ரீம் கோர்ட் சொல்றாங்க. கிட்டத்தட்ட 26 ஆயிரம் கோடி பணத்தை ரீபே பண்ண சொல்றாங்க. இதுல காமெடி என்னன்னா ஒரே மாசத்துல மொத்த பணத்தையும் ரீபே பண்ணிட்டோம்னு அதுவும் 90% பேருக்கு காசாவே கைல கொடுத்திட்டோம்னு சொல்றாரு சுப்ரதா ராய். எப்படிங்க கொடுத்தீங்க ஆதாரம் என்னனு கேட்டா 100 லாரில கிட்டத்தட்ட 30 ஆயிரம் பெட்டிகள்ல டாகுமெண்ட் செபி ஆபிஸ்க்கு அனுப்பி வைக்கிறார். அத்தனையும் பிரிச்சு சரி பார்க்கவே வருசக் கணக்குல ஆகும். அதுலயும் ஒரு பெட்டில யாரெல்லாம் பணம் கொடுத்தாங்கன்ற லிஸ்ட் இருக்கும். இன்னொரு பெட்டில யாருக்கெல்லாம் திருப்பி கொடுத்தோம்ங்குற டாகுமெண்ட் இருக்கும். ரெண்டையும் மேட்ச் பண்ணவே முடியாது.
ரேண்டமா 20 ஆயிரம் பேரை செலக்ட் பண்ணி அவங்ககிட்ட விளக்கம் கேட்டு லெட்டர் அனுப்புறாங்க செபி. ஆனா எங்களுக்கு காசு வந்துடுச்சுனு ரிப்ளை பண்ணது வெறும் 68 பேர்தான். அவர் கொடுத்த 5 கோடி டாகுமெண்ட்ல ஏகப்பட்ட பெயர்கள் ஆயிரம் தடவைக்கு மேல ரிப்பீட் ஆகுது. பாதிக்குமேல அட்ரெஸ் இல்ல. நிறைய அட்ரஸ்ல அப்படி ஒரு ஆளே இல்லைனு ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கு. அப்போதான் செபி ஒரு முடிவுக்கு வர்றாங்க. இவர் மக்கள்கிட்ட இருந்து காசு வருதுனு டாகுமெண்ட்ல கணக்கு காமிச்சுட்டு வேற வழிகள்ல கறுப்பு பணத்தை வெள்ளையா மாத்துறாருனு குற்றச்சாட்டு வைக்கிறாங்க.
அதுக்கும் அசராமா ஒரு ஸ்டண்ட் பண்றாரு சுப்ரதா ராய். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னோட எம்ப்ளாயிஸ் எல்லாரையும் ஒரு இடத்துல கூட்டி தேசிய கீதம் பாட வைச்சு சாதனை பண்ணி, தன்னோட தேசப்பற்றை வெளிக்காட்டுறாரு. ஆனா கோர்ட் இவரை கைது பண்ணி திகார் சிறைல அடைக்குது. எந்த மக்கள் இவரை சஹாராஶ்ரீனு கொண்டாடுனாங்களோ அதே மக்கள் இவரைத் திருடன்னு சொல்லி முகத்துல கறுப்பு மை அடிச்சாங்க. உடல்நலக்குறைவு காரணமா சமீபத்துல இறந்து போனார் சுப்ரதா ராய். உலகத்தின் மிகப்பெரிய குடும்பம் என்னோடதுனு சொன்னவரோட இறுதிச் சடங்குக்கு அவரோட சொந்த மகன்கள்கூட வரலங்குறதுதான் இயற்கையின் விநோதம்.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.com/kz/register?ref=RQUR4BEO