சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான பிறகு முதல்முறையாக நேரடியாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார் சசிகலா. தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின் ஹைலைட்ஸ்…
ஜெயலலிதா தோழியாக அவருடனே நிழலாக 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்தவர் வி.கே.சசிகலா. கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறை சென்றார். அ.தி.மு.க பிளவுபட்டு பின்னர் ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் இணைந்தன. சசிகலா அ.தி.மு.க-விலேயே இல்லை என்று அக்கட்சியினர் பேசி வந்தனர். இந்தநிலையில், சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை வந்த சசிகலா, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாகக் கடந்த மார்ச் 3-ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்பிறகு தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை அமைதியாக இருந்தவர், சமீபகாலமாக அ.தி.மு.க – அ.ம.மு.க தொண்டர்களுடன் போனில் பேசி வருகிறார். `மீண்டும் தலைமையேற்பேன். அரசியலுக்கு வருவேன்’ என்கிறரீதியில் அவர் பேசிய ஆடியோக்கள் வெளியாகின.
இந்தசூழலில், முதல்முறையாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்திருக்கிறார். சசிகலா பேட்டியின் 15 ஹைலைட்ஸ்…
குடும்பம்
எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் அப்பாவோடு பிறந்தவர்கள் 11 பேர். மொத்தம் 46 பேரக் குழந்தைகள் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். மருத்துவராக வேண்டும் என்று விரும்பினேன். இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டதால் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
எங்களுக்குத் திருமணம் நிச்சயமாகும்போது என் கணவர் நடராஜன் தி.மு.க-வில் இருந்தார். அது தாமதமாகத்தான் எனக்குத் தெரியும். 1973 செப்டம்பர் 16-ல் தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கத்தில் எங்கள் திருமணம் நடந்தது. மேடைக்கு வந்த கருணாநிதி, மணப்பெண் நிமிர்ந்த நிலையில் மிடுக்காக அமர்ந்திருக்கிறார் என்று சிரித்துகொண்டே சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது. பிறகு மேடையில் பேசும்போது, `மிகவும் துணிச்சலான பெண்ணாக தோன்றுகிறார், பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்றும் கூறினார்.
ஜெயலலிதாவுடன் முதல் சந்திப்பு
1981-ம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச்சங்க மாநாட்டை முழுமையாக வீடியோ பதிவு செய்தோம். எங்கள் வீடியோ காட்சிகளைப் பார்த்துவிட்டு ஜெயலலிதா பாராட்டினார். எங்களைப் பற்றி கட்சியினரிடம் விசாரித்திருக்கிறார். அ.தி.மு.க கட்சி அலுவலக மேலாளர் துரை எங்கள் வீட்டுக்கு வந்து, இனி ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து படம்பிடிக்கும்படி கேட்டுக்கொண்டார். கன்னியாகுமரியில் ஜெயலலிதா பேசியது சர்ச்சையானது. அந்த வீடியோ கேசட் இசைக்கோர்ப்புக்காக எங்களிடம் வந்தபோது அதைப் பெரிய தொகை கொடுத்து தி.மு.க-வினர் வாங்க நினைத்தார்கள். ஆனால், நான் துரை மூலமாக ஜெயலலிதாவிடம் கொடுத்தனுப்பி விட்டேன். அதன்பின்னர், ஜெயலலிதா என்னை சந்திக்க விரும்பினார். அப்போதுதான் முதல்முதலாக ஜெயலலிதாவை நேரில் சந்தித்தேன்.
ஜெயலலிதாவுக்கு வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. சினிமா பிரபலம் என்பதால் அது நிறைவேறாமல் இருந்ததாக என்னிடம் சொன்னார். காலை நேரத்தில் திருவான்மியூர் தாண்டி காரில் சென்று முகத்தை மறைத்துக் கொண்டு 2 கி.மீ தூரம் காலார நடந்துவிட்டு வருவோம்.
எம்.ஜி.ஆரின் அக்கறை
ஜெயலலிதா என்னப் பற்றி எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருக்கிறார். அவரை மாம்பலம் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன். அம்முவின் நல்ல நண்பராக இருக்கிறீர்கள். அவரை நன்றாகப் பார்த்துக்கொளுங்கள் என எம்.ஜி.ஆர் என்னிடம் தெரிவித்தார். எனது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தார்.
ஜெயலலிதாவை அப்போது இருந்த அமைச்சர்கள் ஜூனியர் என்றுதான் அழைப்பார்கள். அவருடன் பழகியதால் பல பிரச்னைகளை எதிர்க்கொண்டிருக்கிறோம். என் கணவரை புதுக்கோட்டைக்கு இடமாறுதல் செய்தனர். அதை நான் ஜெயலலிதாவிடம் சொல்லவில்லை.
எம்.ஜி.ஆர் மறைவு குறித்து ஜெயலலிதாவிடம் யாரும் தகவல் சொல்லவில்லை. அதைக் கேள்விப்பட்டு காரில் ராமாவரம் தோட்டத்துக்குப் போனபோது, ஜெயலலிதா உள்ளே அனுமதிக்கவில்லை. அப்போது அங்கிருந்த நடிகர் ரஜினிகாந்த், அவரை உள்ளே அனுமதியுங்கள் என்று சொன்னார். அப்போதுதான் ரஜினியை முதல்முறையாகப் பார்த்தேன். அங்கு எம்.ஜி.ஆரின் உடல் இல்லை. சில பெண்கள் மட்டுமே அழுதுகொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஒருவர் எங்களை ஒரு அறையில் வைத்து பூட்ட எண்ணினார். தினகரன் தான் எங்களை வெளியே அழைத்து வந்தார். அதன்பின்னர், எம்.ஜி.ஆர் உடல் ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. நாங்கள் பின் தொடர்ந்து சென்றோம். ஜெயலலிதா எம்.ஜி.ஆர் தலைமாட்டில் நின்றார். அவருடன் நான் இருந்தேன்.
ஜெயலலிதாவுக்கு எனது கணவர் நடராசன் தான் அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர்
1989ம் ஆண்டு தேர்தல் மறக்க முடியாதது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரு பெண் எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்த தேர்தல் அது. அதே ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மார்ச் 25-ம் தேதி ஒரு தவறான முன்னுதாரணமாகிவிட்டது. ஒரு பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுத்த சம்பவங்கள், சபையிலிருந்து அவர் வெளியேறும்போது அவர் மனதில் நினைத்தது, பிறகு சொன்னது என்னவென்றால், மீண்டும் அந்த அவைக்குள் நுழைந்தால் முதலமைச்சராகத்தான் நுழைவேன் என்பதுதான்.
அ.தி.மு.க அணிகள் இணைப்பு
இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தது அ.தி.மு.க. இப்போது தி.மு.க அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் இரண்டு பேர் அணிகள் இணைப்பு பற்றி என் கணவரிடம் பேசினார்கள். என் கணவரின் நண்பரான ஏவியேஷன் கிருஷ்ணமூர்த்தி இணைப்புக்கு முக்கிய பங்காற்றினார். இதுதொடர்பாக ஜானகி அணியினருடன் நடந்த சந்திப்பில் நான் கலந்துகொண்டேன். அதன்பின்னர் ஜானகியம்மாவை சந்தித்தபோது, `என் கணவர் தொடங்கிய இயக்கம் நல்ல முறையில் தொடர்ந்து இயங்க வேண்டும். அதைப் பிரித்தேன் என்ற கெட்ட பெயர் எனக்கு வேண்டாம். நான் விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. அந்தப் பொண்ணு (ஜெயலலிதா) இந்த இயக்கத்துக்காக ஏராளமான மனக் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். அவரைக் கொண்டே இயக்கத்தை நடத்துங்கள்’’ என்று என்னிடம் சொன்னார்.
ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற 1991-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி மறக்க முடியாத நாள். எம்.ஜி.ஆர் இறந்தபோது அவரை எப்படி உதாசீனப்படுத்தினார்கள் என்பது நினைவுக்கு வந்தது. கட்சியில் அவரை எந்த அளவுக்கு ஒதுக்கி வைத்தார்கள் என்பதையும் நினைத்துப் பார்த்தோம். ஆனால், அந்த இடத்துக்கு அவர் உயர கைகொடுத்தது அவரது உண்மையான கடின உழைப்புதான்.
கொடநாடு எஸ்டேட் – பட்டாசு ஆர்வம்
கொடநாடு எஸ்டேட் செல்லும்போது சுதந்திரமாக உணர்வோம். கொடநாட்டில் குழந்தையாகவே மாறிவிடுவார் ஜெயலலிதா. இறுக்கம் குறைந்து வேறு ஒரு ஜெயலலிதாவாகவே இருப்பார் என்று சொல்லலாம். பட்டாசு வெடிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். நீண்ட பட்டாசு பட்டியலை அவரே எழுதிக்கொடுத்து வாங்கச் சொல்வார். ஆன்மிகத்திலும் நாட்டம் உண்டு. அவரது இஷ்ட தெய்வம் ஆஞ்சநேயர்.
முதலமைச்சரான பிறகு ஜெயலலிதாவுக்கு பொழுதுபோக்கு கிடையாது. அவ்வப்போது நாங்கள் கேரம் போர்டு ஆடுவோம். மிமிக்ரி செய்து காட்டுவார். பாட்டெல்லாம் பாடுவார். எம்.ஜி.ஆர் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்ப்பார். கறுப்பு – வெள்ளை படங்கள் மீது அவருக்கு ஆர்வம் அதிகம். கொடநாட்டில் அவருடன் சேர்ந்து நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். காலையில் குளிக்கும்போது மட்டும் விருப்பமான பாடல்களை சத்தமாக வைத்துக் கொண்டு கேட்பார்.
2011ம் ஆண்டு கட்சியை விட்டு வெளியேற்றியதைப் பற்றி பேசிய சசிகலா, `அப்படி ஒரு சம்பவம் நடக்கப்போவது 4 மாதங்களுக்கு முன்னரே தெரியும். என்னையும் அக்காவையும் பிரிக்க வெளியில் ஒரு சதி நடப்பதாக அவருக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. அதில் யார் இருக்கிறார்கள்… யாரெல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய அக்கா விரும்பினார். உங்களுக்கு சொல்பவர்களைக் கேட்டு என்னை வெளியே அனுப்பிவிடுங்கள். நானும் வெளியேறி விடுகிறேன் என்று நான் தான் அறிக்கை விடச் சொன்னேன். அறிக்கையும் வந்தது. நான் வெளியேறிய இரண்டாவது நாள் அக்கா எனக்கு ஒரு செல்போன் கொடுத்து அனுப்பினார். அவரும் வழக்கமாகப் பயன்படுத்தும் போனைத் தவிர்த்து புது போனில் என்னிடம் பேச ஆரம்பித்தார். நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம்’ என்று தெரிவித்தார்.
Also Read – அரசியல் வருகைக்குத் தூபம் போடும் சசிகலா… தொண்டர்களிடம் பேசியது என்ன?