Pegasus: பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்த்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு வல்லுநர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
Pegasus மென்பொருள் சர்ச்சை
இஸ்ரேலிய நிறுவனத்துக்குச் சொந்தமான பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் மன்றம் ஆதாரங்களை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் பட்டியலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர், தற்போது பதவியில் இருக்கும் இரண்டு மத்திய அமைச்சர்கள், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பதிவாளர்கள், முன்னாள் நீதிபதி ஒருவரின் பழைய செல்போன் எண், அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருக்கு நெருக்கமானவர் ஒருவர், 40 பத்திரிகையாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் விளக்கமளிக்கக் கோரி மத்திய அரசுக்குத் தொடர் நெருக்கடி ஏற்பட்டது. அதேபோல், பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய என்.எஸ்.ஓ நிறுவனம், தங்களது மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே அளித்திருப்பதாகக் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், அரசு விளக்கமளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி `தி இந்து’ என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஷசி குமார் உள்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
மத்திய அரசின் நிலைப்பாடு
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டல் ஜெனரல் துஷார் மேத்தா, பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு பயன்படுத்தியதா, இல்லையா என்பதை வெளிப்படையாகச் சொல்லும்பட்சத்தில், தீவிரவாத இயக்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இதுகுறித்து தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்ற வாதத்தை முன்வைத்தார். `இதுதொடர்பாக உங்கள் நிலைப்பாட்டை விவரிக்க விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கினோம். இதைதவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். இதையடுத்து, பெகாசஸ் விவகாரத்தில் எதையும் மறைக்க அரசு முயலவில்லை என்று சொன்ன துஷார் மேத்தா, விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்கத் தங்களுக்கு அனுமதியளிக்கும்படி வேண்டுகோள் வைத்தார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வதென்ன?
பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு பயன்படுத்தியிருந்தால், சட்ட விதிகளுக்குட்பட்டே அதைப் பயன்படுத்தியிருக்கும் என்று நம்புவதாகச் சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருக்கிறது. தனியுரிமைக்குக் கட்டுப்பாடு என்பது அவசியம்தான். அது அரசியல் சாசனத்துக்குட்பட்டு இருக்க வேண்டும். எல்லா நேரத்திலும் தேசியப் பாதுகாப்பு என்ற வாதத்தை மட்டுமே முன்வைக்க வேண்டாம். கண்காணிப்பு என்ற பெயரில் செய்யப்படக்கூடிய கட்டுப்பாடுகள் தனியுரிமையை பாதிக்கக் கூடியது என்பதை மறுப்பதற்கில்லை. மத்திய அரசின் தெளிவான நிலைப்பாடு இல்லாததால், இந்தியர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பது கவலை தருவதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
சிறப்பு வல்லுநர் குழு
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கும் சிறப்பு வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள்.
- உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் (தலைவர்)
- ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோக் ஜோஷி
- சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத் தலைவர் மருத்துவர் சந்தீப் ஓபராய்
- குஜராத் தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்தின் சைபர் செக்யூரிட்டி பிரிவு தலைவர் டாக்டர் நவீன் சௌத்டி
- கேரளாவில் இருக்கும் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன்
- மும்பை ஐஐடி-யின் கணிப்பொறி அறிவியல் துறை பேராசிரியர் அஷ்வின் அணில் குமஸ்தே.
இந்த சிறப்பு வல்லுநர் குழு பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி எட்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
I wanted to leave a little comment to support you and wish you a good continuation. Wishing you the best of luck for all your blogging efforts.