இரட்டைத் தலைமைக்கு எதிராகக் குரல்கொடுத்த அ.தி.மு.க முன்னாள் எம்.பியும், சிறுபான்மை பிரிவு செயலாளராகவும் இருந்த அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எஸ்.டி.சோமசுந்தரம் தொடங்கி அன்வர் ராஜாவரை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் பற்றி பார்க்கலாம்.
எஸ்.டி.சோமசுந்தரம்
தி.மு.க-விலிருந்து பிரிந்து அ.தி.மு.க-வை தொடங்கிய காலம் முதலே எம்.ஜி.ஆரோடு பயணித்தவர் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.டி.சோமசுந்தரம். முதல்முறையாக வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சாராகப் பதவி வகித்தார். 1982-ல் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் கட்சிக்குள் கொண்டு வந்தபோது, அதை எதிர்த்தவர். இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்படவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்தார் எம்.ஜி.ஆர். இதனால், தனிக்கட்சி தொடங்கி 3 ஆண்டுகள் செயல்பட்டவர், பின்னர் எம்.ஜி.ஆர் தலைமையிலேயே வந்து இணைந்தார்.
ஜெயலலிதா
ஜெயலலிதாவுடனான கருத்து வேறுபாட்டுக்குப் பிறகு அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பை எம்.ஜி.ஆர், கடந்த 1987 நவம்பர் வாக்கில் தயார் செய்தார். அதை பத்திரிகையாளர் சோலையிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு எம்.ஜி.ஆர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைந்து வந்தபிறகு, முறையாக இந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று பத்திரிகையாளர் சோலை நினைத்திருந்த நிலையில், எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்து திரும்பவில்லை. அதனால், அ.தி.மு.க-விலிருந்து ஜெயலலிதா நீக்கம் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகமலேயே போனது. இதுகுறித்து பத்திரிகையாளர் சோலை, தனது புத்தகத்திலும் குறிப்பிட்டிருப்பார்.
திருநாவுக்கரசர்
எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாக இருந்த திருநாவுக்கரசர், அவரது மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா தலைமையை ஏற்றுக்கொண்டார். அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்தபோது ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களை இவரும் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் பேருந்தில் ஏற்றிக்கொண்டு ஊர் ஊராகச் சென்றது வரலாறு. ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்த திருநாவுக்கரசர், ஒரு கட்டத்தில் அ.தி.மு.க-வில் ஓரங்கட்டப்பட்டார். பின்னர், அதிலிருந்து விலகி எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கி சிறிது காலம் நடத்தினார்.
கேகேஎஸ்எஸ்ஆர்
1984-1987 எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். பிறகு ஜெயலலிதா தலைமையை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவளித்தார். 1996 தேர்தலுக்குப் பிறகு ஓரங்கப்பட்ட இவர், தி.மு.க-வில் இணைந்தார்.
கா.காளிமுத்து
இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதலே தி.மு.க-வில் பயணித்த கா.காளிமுத்து, 1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, அவரோடு பயணித்தார். அ.தி.மு.க-வில் அமைச்சர், எம்.பியாக இருந்த இவர், ஜெயலலிதாவோடு ஏற்பட்ட பிணக்கு காரணமாக ஓரங்கட்டப்பட்டார். இதனால், தி.மு.க-வில் சில காலம் பயணித்த அவர் பின்னர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். 2001-2006 காலகட்டத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராகவும் பதவி வகித்தவர்.
ராஜகண்ணப்பன்
ஜெயலலிதா தலைமையிலான 1991-1996 அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் உள்ளிட்ட 3 துறைகளைத் திறம்பட கவனித்தவர். இதனாலேயே, ஜெயலலிதாவால் கம்ப்யூட்டர் கண்ணப்பன் என்று பாராட்டப்பட்டவர். 1996 தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் ஓரங்கப்பட்டார் ராஜகண்ணப்பன். பின்னர் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கி சிலகாலம் நடத்திய இவர் 2006-ல் திமுகவில் இணைந்தார். 2009 பிப்ரவரியில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2009 பொதுத்தேர்தலில் சிவகங்கை எம்.பி தொகுதியில் காங்கிரஸின் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2020 பிப்ரவரியில் திமுகவில் மீண்டும் இணைந்த இவர் தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கிறார்.
பி.கே.சேகர்பாபு
அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசியாக இருந்தவர் பி.கே.சேகர்பாபு. வடசென்னையில் அ.தி.மு.க-வின் முகமாக இருந்த பி.கே.சேகர் பாபு, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். 2001, 2006 தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்றவர். வடசென்னை அ.தி.மு.க மாவட்டச் செயலாளராகவும் இருந்த இவர், அ.தி.மு.கவிலிருந்து கடந்த 2011-ல் திடீரென நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.கவில் இணைந்த அவர், 2021 தேர்தலில் வென்று தற்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருக்கிறார்.
ஓபிஎஸ்
கடந்த 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தற்காலிக முதலமைச்சராக ஓபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நேரத்தில் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளரான சசிகலா, முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், முதல்வர் பதவியிலிருந்து தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதாக ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். அப்போது, ஊழல் வழக்கில் சசிகலா தண்டிக்கப்படவே, எடப்பாடி பழனிசாமியின் பெயரை முதலமைச்சராக முன்மொழிந்ததோடு, ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அப்போது அறிவிக்கப்பட்டது. சசிகலா சிறைக்குச் சென்றபின்னர் ஓபிஎஸ்-இபிஎஸ் ஒன்றிணைந்தனர்.
சசிகலா
சென்னை வானகரத்தில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ல் நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தற்காலிகப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் நியமனம் ரத்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிடிவி தினகரன்
2012 செப்டம்பர் 17-ல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால், சசிகலா, நடராஜன், டிடிவி தினகரன், வெங்கடேசன் உள்ளிட்ட 14 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்தார். போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, பின்னர் மன்னிப்புக் கடிதம் மூலம் ஜெயலலிதா வீட்டில் குடியேறினார். டிடிவி தினகரன் ஜெயலலிதா மறைவு வரை அதிமுகவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
அன்வர் ராஜா
அதிமுக ராஜ்யசபா முன்னாள் எம்பியும் அக்கட்சியின் சிறுபான்மைப் பிரிவு செயலாளராகவும் இருந்த அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார். கட்சியின் இரட்டை தலைமை குறித்து அவர் வெளிப்படையாக ஊடகங்கள் வாயிலாக விமர்சித்து வந்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.