சென்னை எம்.ஜி.ஆர் நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாதிவாரியாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு பள்ளிக்கு வரவழைக்கத் திட்டமிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பின்னணி என்ன?
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில், 1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டன. உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. ஏறக்குறைய 19 மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகளுக்குத் திரும்பிய மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல இடங்களில் மேள,தாளங்கள் முழங்க வரவேற்புக் கொடுக்கப்பட்டது. பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து அதிகாரிகள் மாணவர்களை வரவேற்றனர். சென்னை மடுவின்கரை அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது கட்டாயமில்லை என்று அரசு அறிவித்திருக்கிறது. மேலும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் மாணவர்களை சுழற்சி முறையில் வகுப்பு நடத்தலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
சென்னை மாநகராட்சிப் பள்ளி சர்ச்சை
இந்தநிலையில், சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இருக்கும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாதிரீதியில் மாணவர்களைப் பிரித்து பள்ளிகளுக்கு வரவழைக்கத் திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களை சாதிரீதியாகப் பிரித்து அவர்களுக்கு வாரத்தின் ஒவ்வொரு கிழமைகளில் பள்ளிக்கு வர பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. பள்ளி மாணவர்களை, அகர வரிசைப்படி பிரித்து வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில், சாதிரீதியில் பிரித்த எம்.ஜி.ஆர். நகர் மாநகராட்சிப் பள்ளியில் செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் தரப்பில், இந்த நடைமுறை பல ஆண்டுகளாகத் தொடர்வதாகவும், எந்த உள்நோக்கமும் இதில் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. அதேபோல், மாணவர்களுக்கு அவர்களின் சாதி குறித்து எந்தவொரு தகவலும் தெரியாது என்றும் நிர்வாக ரீதியில் பட்டியல் எடுப்பதற்காகவே இது பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் சென்னை மாநகராட்சி இணை ஆணையர் பள்ளி நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். பள்ளி தரப்பில் அளிக்கும் விளக்கத்தை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.