மீம்ஸ் கன்டன்டுகளின் நாயகன் வைகைப்புயல் வடிவேலு சினிமாவில் நடித்து ஏறக்குறைய மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. என் தங்கை கல்யாணி தொடங்கி 2017 மெர்சல் வரையிலான இவரது திரைப்பயணம் பல்வேறு ஏற்ற, இறக்கங்களோடே இருந்தது. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருக்கும் வடிவேலு கோலிவுட்டில் அடுத்த ரவுண்டுக்காகத் தயாராகி வருகிறார்.
ரியாக்ஷன்களால் மக்களை மகிழ்வித்த வடிவேலு பற்றிய 7 தகவல்கள்!
- தந்தையின் திடீர் மறைவுக்குப் பிறகு சிறுவயதிலேயே கண்ணாடிக் கடையில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பணியாற்றிய வடிவேலு, கிராமங்களில் நடக்கும் நாடகங்களில் காமெடி வேடத்தில் கலக்கியிருக்கிறார்.
- ராஜ்கிரண் தயாரித்து நடித்த
என் ராசாவின் மனசிலே’ பட வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது சுவாரஸ்யமான சம்பவம். திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக ஊருக்கு வந்திருந்த ராஜ்கிரணை அடித்துப் பிடித்து நேரில் சந்தித்திருக்கிறார் வடிவேலு.
உனக்கு என்ன தெரியும்’ என்று கேட்ட ராஜ்கிரணிடம் சில காமெடிகளைச் செய்து காட்டியிருக்கிறார். `சரி சென்னைக்கு வந்து என்னைப் பாரு’ என்று சொல்லிவிட்டு ராஜ்கிரண் கிளம்பியிருக்கிறார். வீட்டிலிருந்த பாத்திரங்களை 100 ரூபாய்க்கு அடகு வைத்து அவர் சென்னை கிளம்பியிருக்கிறார். என் ராசாவின் மனசிலே படத்தில் 6 சீன்களில் நடித்திருந்த வடிவேலு, ஒரு பாடலிலும் தோன்றியிருப்பார். போடா போடா புண்ணாக்கு என்ற அந்தப் பாடலும் பிரபலமானது. - வடிவேலுவின் நடிப்பைப் பார்த்து பாராடிய இயக்குநர் உதயகுமார், சின்னக்கவுண்டர் வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததோடு கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களிடமும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
- தேவர் மகன் படத்தில் வடிவேலுவின் நடிப்பைப் பார்த்து அசந்த நடிகர் சிவாஜி கணேசன், `இவன் வெறும் கமெடியன் மட்டுமல்ல.. கேரெக்டர் ஆர்டிஸ்ட்.. என்னையே கொஞ்சம் ஆட வைச்சுட்டான்டா’ என்று கமலிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். இதை ஒரு ஓரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த வடிவேலுவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்திருக்கிறது.
- வின்னர் படத்தில் இடம்பெறும்… `வேணாம்…வலிக்குது… அழுதுருவேன்’ என்ற டயலாக் சீன் எடுக்கும்போது ரியாஸ்கான் வடிவேலுவின் நடிப்பைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். இதனால், அந்த ஒரு சீன் மட்டும் கிட்டத்தட்ட 16 டேக்குகள் வரை போயிருக்கிறது.
- எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான வடிவேலுவுக்கு அவரின் `நான் ஏன் பிறந்தேன்’ படமும், அந்தப் படத்தின் பாடல்களும் மனசுக்கு நெருக்கமானவை.
- உங்கள் வசனங்களுக்கு ராயல்டி கேக்கலாமே என பேட்டியொன்றில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, `அட போயா… இதுக்கெல்லாமா ராயல்டி கேப்பாங்க.. என்னால சந்தோஷம்னா இருந்துட்டு போகட்டுமே? உங்களுக்கு ஏன் பொறுக்கல’ என கேள்வி கேட்டவரிடமே திருப்பிக் கேட்டிருக்கார்.
Also Read – நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்! – தமிழ் சினிமா பற்றிய சில சர்ப்ரைஸ் தகவல்கள்