மூன்று முறை சர்வதேச செஸ் சாம்பியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதல் முறையாக வீழ்த்தியிருக்கிறார். இதன்மூலம், கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.
பிரக்ஞானந்தா பற்றிய 7 தகவல்கள்!
- இவரது மூத்த சகோதரி வைஷாலியும் செஸ் விளையாட்டில் கில்லிதான். சிறுவயதில் டிவி அதிகம் பார்க்கும் வைஷாலியை அருகில் உள்ள செஸ் அகாடமியில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். நான்கு வயதில் வீட்டில் செஸ் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த அக்காவைப் பார்த்து செஸ் விளையாடக் கற்றுக்கொள்ளத் தொடங்கியபோது பிரக்ஞானந்தாவுக்கு வயது இரண்டு. அக்காவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே செஸ் விளையாடத் தொடங்கியிருக்கிறார்.
- தந்தை ரமேஷ் பாபு கூட்டுறவு வங்கியில் பணிபுரிபவர். சிறுவயதிலேயே போலியோவால் காலில் பாதிப்பு ஏற்பட்டதால், தனது மகன் வெளிநாடுகளுக்கு விளையாடச் செல்கையில் உடன் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு உண்டு. `அவன் இந்த வீட்டை விட்டு வெளியில் விளையாடியதை நான் பார்த்ததே இல்லை’ என்று தனது வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

- டிவி பார்ப்பதுதான் இவரின் பிடித்தமான பொழுதுபோக்கு. டிவி பார்த்துக் கொண்டிருக்கையில் சில நேரங்கள் சாப்பிடக்கூட எழுந்து செல்லமாட்டாரம். அப்படியான சமயங்களில் அவரது அம்மா இவருக்கு உணவை ஊட்டி விடுவாராம். `சோட்டா பீம், மைட்டி ராஜூ, டாம் அண்ட் ஜெர்ரி’ இந்த மூன்று கார்ட்டூன் நிகழ்ச்சிகளும் ஃபேவரைட்.
- மூன்று முறை தேசிய இளையோர் சாம்பியன் பட்டம் வென்றவர். 2013-ல் எட்டு வயதுக்குட்பட்டோர், 2015-ல் பத்து வயதுக்குட்பட்டோர் மற்றும் 2019-ல் 18 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளின் வெற்றி வாகை சூடியிருக்கிறார்.
- செஸ் வரலாற்றில் இளம் வயது International Master பிரக்ஞானந்தாதான். அதேபோல், 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதன் மூலம், மிக இளம் வயதில் பட்டம் வென்ற ஐந்தாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

- மூன்று முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை ஆன்லைன் வழியே நடந்த Airthings Masters தொடரில் வீழ்த்தியிருக்கிறார். கறுப்பு நிறக் காய்களுடன் விளையாடிய இவர் 39வது காய் நகர்த்தலில் வெற்றியைப் பதிவு செய்தார். இதன்மூலம், விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பெண்டால ஹரிகிருஷ்ணா ஆகியோருக்கு அடுத்தபடியாக கார்ல்சனுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்த மூன்றாவது இந்திய கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றார்.
- பிலிப்பைன்ஸ் – அமெரிக்க செஸ் வீரரான வெஸ்லி சோவை எதிர்த்து 4 போட்டிகள் கொண்ட ரேப்பிட் தொடரில் விளையாட பிரக்ஞானந்தாவுக்குக் கடந்த 2018-ல் அழைப்பு விடுக்கப்பட்டது. ஸ்பெயினில் நடந்த அந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இருவரும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், கடைசிப் போட்டியில் வெஸ்லி வென்று தொடரையும் கைப்பற்றினார்.
Also Read – Drop Box, Cloud Storage-லாம் பழங்கால டெக்னாலஜி… புதுசு என்ன தெரியுமா..?