Kanimozhi: `டெல்லியில் ஒலிக்கும் திராவிடக் குரல்’ – கனிமொழி வாழ்வின் 7 மொமண்ட்கள்!

இலக்கியவாதி, சமூகப் போராளி, பத்திரிகையாளர், பாசிட்டிவ் பரப்பும் அரசியல்வாதி, எம்.பி என பல முகங்கள் கொண்ட தி.மு.க எம்.பி கனிமொழி தமிழக அரசியலில் தவிர்க்க முடியா டாப் டென் அரசியல் ஆளுமைகளில் முக்கியமானவர். மாற்றுக் கட்சியினருக்கும் மதிப்பளிக்கும் அவரது மாண்புக்குக் கட்சிகள் தாண்டி மரியாதை உண்டு. தமிழகத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஒலித்து வருகிறார் கனிமொழி.

கனிமொழி, தமது வாழ்வில் மனதுக்கு நெருக்கமான தருணங்களாக நினைக்கும் 6 மொமண்டுகளைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

கனிமொழி வாழ்வின் 7 மொமண்ட்கள்!

பெருமை

kanimozhi
kanimozhi

இலக்கியத்திலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்த ஆளுமை கருணாநிதி. இலக்கியத்தில் அவரது வாரிசாகக் கருதப்படுபவர் கனிமொழிதான். கனிமொழி எழுதிய சிகரங்களில் உறைகிறது காலம்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி, ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அப்போதைய நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் இதைக் குறிப்பிட்டுப் பேசினார். கடந்த 2009-ல் நடந்த நிகழ்வில் பேசிய அவர்,அண்ணா விட்டுச் சென்ற அரசியல் இடத்தை மட்டுமல்ல, இலக்கியம், கலைக்கான இடத்தையும் பிடித்துக் கொண்டவர் கருணாநிதி. அண்ணாவைப் போல் தமிழர்களின் இதயத்திலும் அவர் இடம் பிடித்துள்ளார். கருணாநிதியின் அரசியல் இடத்தைப் பிடிக்கத் தகுதியானவர்கள் இருக்கிறார்கள். அவரின் கலை, இலக்கிய இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கவலை எங்களுக்கு இருந்தது. அந்த இடத்தைக் கனிமொழி பிடித்துள்ளார். திராவிட இயக்கங்களின் சித்தாந்தங்களை புதுப்புது சிந்தனையோடு கனிமொழி, தனது படைப்புகளில் வழங்கியுள்ளார்’ என்று புகழாரம் சூட்டியிருந்தார் அன்பழகன்.

வெற்றி

kanimozhi
kanimozhi

2003-ம் ஆண்டு முதலே மாநிலங்களவை எம்.பி-யாக இருந்த கனிமொழி, நேரடியாகத் தேர்தல் களத்தைச் சந்தித்தது 2019 மக்களவைத் தேர்தலில்தான். அவரை எதிர்த்துக் களம்கண்டது அப்போது தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன். கடுமையான போட்டிக்கிடையில் தூத்துக்குடி தொகுதியில் பம்பரமாகச் சுழன்று பணியாற்றிய கனிமொழிக்கு, தொகுதி மக்கள் மிகப்பெரிய வெற்றியைப் பரிசாக அளித்தனர். தமிழிசையை 3.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அவரை முதல்முறையாக மக்களவைக்கு அனுப்பி வைத்தனர் தூத்துக்குடி மக்கள்.

மகிழ்ச்சி/ பாராட்டு

கருணாநிதியுடன்
கருணாநிதியுடன்

தி.மு.க ஆட்சியில் இருந்தபோது கடந்த 2010-ல் கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. அப்போது, மாநிலங்களவை எம்.பியாக இருந்த கனிமொழிக்கு ஆய்வரங்கு அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்த கனிமொழிக்கு மாநாட்டின்போது கருணாநிதி பாராட்டுத் தெரிவித்தார். அந்த நெகிழ்வான தருணம் குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்ட கனிமொழி, `செம்மொழி மாநாட்டில் எனக்குப் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. அப்போது மேடை ஏறும்போது பின்னால் இருந்த எனது கையைப் பற்றி முத்தம் கொடுத்து நன்றி கூறினார் தலைவர் கலைஞர் அவர்கள். அதனை எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாது. அதனை ஒரு பெரிய அங்கீகாரமாகவே நான் நினைக்கிறேன்.

சோகம்

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ கனிமொழியையும் குற்றவாளியாக முதல் தகவல் அறிக்கையில் சேர்த்திருந்தது. இந்த வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோருடன் கைது செய்யப்பட்ட கனிமொழி, கடந்த 2011-ல் 190 நாட்களை திகார் சிறையில் கழித்தார். தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டிவிக்கு முறைகேடாக நிதி திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த 2017 டிசம்பர் 21-ல் தீர்ப்பு வழங்கியது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கனிமொழி உள்ளிட்ட 19 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது சிபிஐ நீதிமன்றம்.

Kanimozhi
கனிமொழி

திகார் சிறையின் பெண்கள் சிறை வளாகத்தில் சிறை எண் 6-ல் கனிமொழி அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்டபோது மகன் ஆதித்யாவைப் பிரிந்ததை எண்ணி கலங்கியிருக்கிறார். சிறைக்குள் நகைகள் அணிந்து வரக் கூடாது என்பதால், அவரது மூக்குத்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. `பத்து வயது முதலே மூக்குத்தி அணிந்திருப்பதாகக் கூறி கவலையடைந்திருக்கிறார். தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர், சிறையில் இரண்டு தலையணைகள் மட்டும் கூடுதலாகக் கேட்டிருக்கிறார். அதைத் தவிர வேறு எந்த சலுகைகளையும் அவர் கேட்கவில்லையாம்.

வருத்தம்

ஆதித்யா
ஆதித்யா

கனிமொழியின் உலகமே அவரது மகன் ஆதித்யாதான். டெல்லி அரசியலில் தீவிரமாக இயங்கினாலும் மகனைப் பற்றி தொடர்ச்சியாக விசாரித்துக் கொண்டிருப்பது அவரது வழக்கம். அத்தோடு, போனிலும் மகனோடு அடிக்கடி பேசிவிடுவாராம். 2ஜி வழக்கில் கனிமொழி சிக்கிய போது, ஆதித்யாவுக்கு 11 வயது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாட்கள் மட்டுமல்லாமல், வழக்கில் ஆஜராக வேண்டி டெல்லியிலேயே அதிக நாட்கள் இருக்க வேண்டிய சூழல் கனிமொழிக்கு ஏற்பட்டது. அந்த வழக்கு முடிய கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகின. அதேநேரம், ஆதித்யாவை டெல்லியில் உள்ள பள்ளியில் சேர்க்கவும் அவருக்கு விருப்பமில்லாத நிலை. இதனால், வளர்ந்து வரும் மகனின் முக்கியமான காலகட்டத்தில் அவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லையே என்ற வருத்தம் கனிமொழிக்கு இருக்கிறது.

பரபரப்பு

கருணாநிதி கைது
கருணாநிதி கைது

கனிமொழி ரொம்பவே பரபரப்பாக இருந்த தருணம் 2000-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்ட தருணம். கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்ட நிலையில், சென்ட்ரல் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றது போலீஸ். சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லாமல் வாயிலில் அவர் காக்க வைக்கப்பட்ட நிலையில், கருணாநிதியுடன் சேர்ந்து கனிமொழி அங்கே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். `காரை விட்டு கீழே இறங்கும்போது நகைச்சுவையாக அவர் பேசினார். நான் அப்போது இருந்த பரபரப்பான மனநிலையிலும் அது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அப்படியான ஒரு சூழலை எளிதாக அவர் கடந்து போனது ஒரு படிப்பினை. அத்தோடு யாருக்கு எந்த சூழலில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை நாங்கள் உணர்ந்துகொண்ட தருணம் அது’ என்று பின்னாட்களில் கனிமொழி இதை நினைவுகூர்ந்திருந்தார். தி.மு.க தொண்டர்களால் மறக்கமுடியாத நிகழ்வாக வரலாறு அதைப் பதிவு செய்துகொண்டது.

Also Read:

கருணாநிதி கைதைத் தொடர்ந்து நடந்த அதிரடிகள்… 2001 ஜூன் 30-க்குப் பிறகான காட்சிகள்!

இழப்பு

Kanimozhi
Kanimozhi

கனிமொழி வாழ்வில் மிகப்பெரிய இழப்பாக அவர் கருதுவது தந்தையாகவும் ஆசானாகவும் இருந்து வழிகாட்டிய கருணாநிதியின் மறைவைத்தான். உடல் நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ல் மறைந்தார். அவரது மறைவு குறித்து கலங்கிய கனிமொழி, `எதைச் சொல்வது என்று தெரியவில்லை. நெஞ்சமெங்கும் நினைவின் அலைகள் எழுந்து எழுந்து அடங்குகின்றன. ஒரு துயரச் சூறாவளியை எதிர்கொண்ட நிலையில் பல்வேறு உணர்வுக் கலவைகளோடு நிற்கிறேன். அன்புமிகும் அப்பாவாய், நாடறிந்த கலைஞராய், மாபெரும் இயக்கத்தின் தலைவராய், சுயமரியாதைச் சுடரொளியாய், பெரியார், அண்ணாவின் மறுவடிவாய், மனதில் இன்னும் உலவிக்கொண்டிருக்கிறது அந்த மகத்தான உருவம். அப்பா இல்லை என்பதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கு சென்றாலும் என் அருகில் அவர் இருப்பதுபோல, அவரிடம் நான் விவாதிப்பதுபோல, ஒரு உணர்வு எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. அவர் இல்லை என்பதை முழுமையாக நான் உணர்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவைப்படலாம் எனத் தோன்றுகிறது’ என்று உணர்வுப்பூர்வமாகப் பேசியிருந்தார்.

Also Read – “எது இயற்கை விவசாயம்…” நம்மாழ்வார் சொன்னது என்ன? #RememberingNammalvar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top