சரத்பவார் அழைப்பு விடுத்திருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்த விவாதம் தேசிய அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு எதிராக வரும் 2024 தேர்தலில் வலுவான கூட்டணியை முன்னிறுத்தும் வேலைகளுக்கான தொடக்கம்தான் இது என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க-வுக்கு எதிராக ஒரே சிந்தனை கொண்ட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையிலான முயற்சியை சரத் பவார் கையிலெடுத்திருப்பதாகவும் பேச்சு எழுந்திருக்கிறது.
பா.ஜ.க-வில் இருந்து விலகி சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா, சரத் பவாரை டெல்லியில் உள்ள இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான சந்திப்பு அது அல்ல என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். சரத் பவார் கடந்த 2018-ல் உருவாக்கிய Rashtra Manch எனும் அரசியல் நடவடிக்கைக் குழுவின் மீட்டிங் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல், இந்த சந்திப்புக்கு மூத்த வழக்கறிஞர்கள் கே.டி.எஸ்.துளசி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, தூதராக இருந்து ஓய்வுபெற்ற கே.சி.சிங், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், ஃபிலிம் மேக்கர் பிரீத்திஷ் நந்தி, மூத்த வழக்கறிஞர் காலின் கான்சால்வே, பத்திரிகையாளர்கள் கரண் தாப்பார், அசுதோஷ் என பல்வேறு துறை சார்ந்தவர்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் நவாப் மாலிக்கும் தமது பங்குக்கு மற்றொரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த விளக்கங்கள் எல்லாம் மூன்றாவது அணி குறித்த பேச்சைக் குறைக்கவில்லை. மாறாக, அந்த கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.
பிரசாந்த் கிஷோர் கனெக்ஷன்
தேர்தல் வியூக வகுப்பாளரான ஐபேக்கின் பிரசாந்த் கிஷோர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னரே மூன்றாவது அணி குறித்த பேச்சுகள் எழத் தொடங்கின. கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு இதுவாகும். அவர்கள் சந்திப்பு `மிஷன் 2024’ குறிக்கோளை முன்னிறுத்தியே என்று அரசியல் வட்டாரங்களில் பேசத் தொடங்கினர். ஆனால், மூன்றாவது அணி என்ற வாதத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று பிரசாந்த் கிஷோர் விளக்கம் கொடுத்திருக்கிறார். சரத் பவாருடனான தனது சந்திப்புக்கும் ராஷ்ட்ரா மன்ச் கூட்டத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார். ஆனால், இது எத்தகைய சந்திப்பு என்பது குறித்த தகவல் அடுத்தடுத்த நாள்களில் தெரிந்துவிடும். இந்தக் கூட்டத்துக்கு காங்கிரஸ் சார்பில் யாரும் அழைக்கப்படவில்லை.