இரு சக்கர வாகனங்களில் கண்ணாடிகள் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
டூ வீலர்களில் பயணிக்கும்போது பின்பக்கம் வரும் வாகனங்களைக் கண்காணித்து இயக்குவதற்காக கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. இந்த கண்ணாடிகளை அகற்றி விடுவதால் விபத்துகள் அதிகரிப்பதாகவும் இதை முறைப்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சங்கர், கண்ணாடிகளை அகற்றுவதால் விபத்துகள் அதிகரிப்பதாகவும், இதுதொடர்பாக உரிய விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். மேலும், கண்ணாடிகள் நீக்கப்படுவதால் பாதசாரிகள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படுவதாகவும் கூறிய அவர், இந்த விவகாரத்தில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் வாதங்களை முன்வைத்தார்.
இருசக்கர வாகன விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களையும் மனுவில் இணைந்திருந்தார் மனுதாரர். இதுதொடர்பான வழக்கில் கடந்த 2017, நவம்பர் 9-ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்திருந்த உத்தரவை மேற்கோள் காட்டியிருந்த அவர், வாகன விபத்துகளைக் குறைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவையும் சுட்டிக்காட்டினார். அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துகுமார், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்புடன் அமல்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று தமிழகப் போக்குவரத்து ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல், டூ வீலர்களில் சைடு மிரர்களை நீக்கினால் வாரண்டி கிடையாது என நுகர்வோருக்கு அறிவுறுத்தவும் வாகன விற்பனையாளர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டனர். தேவைப்பட்டால் புதிய வாரண்டி விதிகளை வாகன உற்பத்தியாளர்கள் உருவாக்கிக் கொள்ளலாம் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.
சட்டம் என்ன சொல்கிறது?
மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயம். அதேபோல், திரும்பும்போது இண்டிகேட்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விதிகளை மீறும்போது தலா ரூ.500 அபராதம் விதிக்கவும் போக்குவரத்து போலீஸாருக்கு அதிகாரம் இருக்கிறது. பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் இந்த விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அந்தந்த நகர போலீஸார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.