தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் சிம்புவின் ‘மாநாடு’ படம் மோதப்போவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே சிம்புவின் ரசிகர்கள் இன்னும் உற்சாகம் ஆகியிருக்க, மற்ற சினிமா ரசிகர்களோ, ‘ஓ ரஜினியோடவே மோதப்போறாரா..பரவாயில்லையா’ என ஆச்சர்யப்படுகிறார்கள். ஆனால் சிம்புவின் சினிமா கரியர் என்ன சொல்கிறது என்றால், ‘அப்பவே அப்படி’ என்றுதான்.. சிம்புவின் முதல் படமான ‘காதல் அழிவதில்லை’ தொடங்கி அவரது பெரும்பாலான படங்கள் பெரிய படங்களுடன் நேருக்கு நேராக மோதியிருக்கிறது என்பதுதான் உண்மை.
எந்தவொரு ஹீரோவுமே செய்திடாத செய்யத் தயங்கிய சம்பவங்களை செய்துதான் சிம்பு தனது கரியரை வளர்த்து எடுத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. தனது முதல் படமான ‘காதல் அழிவதில்லை’ படத்தையே 2002-ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த ‘பகவதி’ படத்துடனும் அஜித் நடித்த ‘வில்லன்’ படத்துடனும் களமிறக்கி, அந்தப் படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. 2003 –ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு சிம்புவின் இரண்டாவது படமான ‘தம்’, ‘முகவரி’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் v.z.துரை விக்ரமுடன் இணைந்த ‘காதல் சடுகுடு’ படத்துடன் மோதி வெற்றியடைந்தது. அதேவருடம் செப்டம்பர் மாதத்தில் தனுஷின் ‘திருடா திருடி’ வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த நேரத்தில் அதாவது அந்தப் படம் ரிலீஸாகி ஒரு வார இடைவெளியில் சிம்புவின் ‘அலை’ படம் ரிலீஸாகி பெரும் தோல்வியை சந்தித்தது.
ஆனாலும் சிம்பு மனம் தளரவில்லை, தனது அடுத்த படமான ‘கோவில்’ படத்தை 2004-ஆம் ஆண்டு பொங்கலுக்கு, கமலின் ‘விருமாண்டி’, விஜயகாந்தின் ‘எங்கள் அண்ணா’, தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் செய்து வர்த்தகரீதியாக பெரும் வெற்றியடைந்தார். அதேவருடம் தமிழ்புத்தாண்டுக்கு பிளாக்பஸ்டர் ‘கில்லி’படத்துடன் மோதி தோல்வியைச் சந்திதது ‘குத்து’. அந்த வருடமே தீபாவளிக்கு தனது ‘மன்மதன்’ படத்தை அஜித்தின் ‘அட்டகாசம்’ படத்துடனும் தனுஷின் ‘ட்ரீம்ஸ்’ படத்துடன் மோதவிட்டார். அந்த ரேஸிலேயே ‘மன்மதன்’படம்தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு நடிகனின் ஆரம்பகால கரியரில் இப்படியான ரிஸ்குகள் சாதாரணமானதல்ல.. கொஞ்சம் அசந்திருந்தால் அவரது கரியரியே காலியாகியிருக்கும் .
2006-ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ‘ஆதி’ படமும் அஜித்தின் ‘பரமசிவன்’படமும் நேரிடையாக மோதிக்கொள்ள அதில் சிம்புவின் ‘சரவணா’ படமும் களம்கொண்டது. ஆனால் அந்த மூன்று படங்களுமே பெரும் தோல்வியை சந்தித்தது. மீண்டும் அந்த வருட தீபாவளிக்கு அஜித்தின் ‘வரலாறு’ படத்துடனும் பேரரசு இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘தருமபுரி’ படத்துடனும் தனது ‘வல்லவன்’ படத்தை மோதவிட்டார். இதிலும் சிம்புவுக்கு தோல்வியே அமைந்தது. 2008-ஆம் ஆண்டு பொங்கலுக்கு பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ‘பீமா’ படத்துடன் மோதி தோல்வியடைந்தது சிம்புவின் ‘காளை’. அதன்பிறகு வெளியான அவரது ‘சிலம்பாட்டம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘வானம்’, ‘ஒஸ்தி’ ஆகிய படங்கள் பெரிய போட்டி எதுவும் இல்லாமல் வெளியானது.
அதன்பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் 2012-ஆம் ஆண்டு தீபாவளிக்கு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்துடன் நேருக்குநேராக மோதி பெரும் தோல்வியை சந்தித்தது சிம்புவின் ‘போடா போடி’. அதன்பிறகான காலகட்டத்தில் ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’, போன்ற படங்கள் எல்லாம் வெளியிடுவதிலேயே சிக்கலை சந்தித்து பாதுகாப்பான தேதிகளில் வெளியாகியும் தோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில் தனது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகி கம்பேக் கொடுத்த சிம்பு கடந்த வருட பொங்கலுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துடன் மோதி தோல்வியை சந்தித்தது. இதுவரை சிம்பு, நேரிடையாக விஜய், அஜித், கமல், தனுஷ் என பலருடனும் நேரடியாக மோதியிருந்தாலும் ரஜினியுடன் இதுவரை மோதியதில்லை. அந்தக்குறையையும் இந்த வருட தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படத்துடன் தனது ‘மாநாடு’ படத்தை மோதவிட்டு போக்கவிருக்கிறார் சிம்பு.
இவ்வாறு அவர் பெரிய நடிகர்களுடன் மோதிய படங்களில் பல படங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் சிம்புவின் தைரியத்தை நாம் நிச்சயம் பாராட்டிதான் ஆகவேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ‘ஜெயிக்குறோமோ தோக்குறோமோ சண்ட செய்யணும்’. அந்த சண்டையைச் செய்கிறார் சிம்பு.
Also Read – `இருவர்’ பார்த்துவிட்டு கலைஞர் மணிரத்னத்திடம் என்ன சொன்னார் தெரியுமா?