கொரோனா பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்டதாக உலக அளவில் கவனம் பெற்ற கேரள சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஷைலஜா டீச்சருக்கு பினராயி விஜயனின் புதிய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படாதது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஷைலஜா டீச்சர்
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய 2020 மார்ச்சில், முதல் தொற்று கேரளாவிலேயே கண்டறியப்பட்டது. கொரோனா முதல் அலையின் போது கேரளாவில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா முழுமூச்சில் செயல்பட்டார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்ததில், அவரின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. இதனால், `கேரளா மாடல்’ என்ற சொல்லாடல் பரவலாக உச்சரிக்கப்பட்டது. இதனால், ஷைலஜா சர்வதேச அளவில் கவனம் பெற்றார். நாட்டின் பல மாநிலங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, மற்ற மாநிலங்களுக்கு அனுப்பும் வகையில் கேரளாவில் ஆக்ஸிஜன் உற்பத்தி நடந்தது.
இந்தநிலையில், சமீபத்திய தேர்தலில் வென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. எமெர்ஜென்ஸிக்குப் பிறகு ஆளுங்கட்சியே ஆட்சியைத் தக்க வைத்திருப்பது கேரளாவில் இதுவே முதல்முறை. வரலாற்று வெற்றியோடு அரியணை ஏறியிருக்கும் சி.பி.எம், பினராயி விஜயன் தலைமையிலான இரண்டாவது அமைச்சரவையில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு இடம் கொடுக்காதது சர்ச்சையானது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
கேரள காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வெளிப்படையாகவே அதிருப்தியைப் பதிவு செய்தார். ஆனால், முற்றிலும் புதுமுகங்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை எனவும் கேரள சி.பி.எம் விளக்கம் கொடுத்தது. சர்ச்சைகள் வலுத்த நிலையில், மட்டனூர் எம்.எல்.ஏ ஷைலஜாவுக்கு சட்டப்பேரவைத் தலைமைக் கொறடா பதவியை சி.பி.எம் கொடுத்திருக்கிறது. கேரளாவின் புதிய சுகாதாரத் துறை அமைச்சராக பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியான வீணா ஜார்ஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பாலபாரதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களில் முக்கியமான பெண் தலைவராக வலம்வருபவர் பாலபாரதி. திண்டுக்கல் தொகுதியில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு 2001, 2006 மற்றும் 2011 என மூன்று முறை எம்.எல்.ஏவாகப் பதவி வகித்தவர். எழுத்தாளரும் கவிஞருமான பாலபாரதி, பல மக்கள் போராட்டங்களில் முன்னணியில் நின்று போராடியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைப்படி மூன்று முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதால், 2016, 2021-ல் இவருக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. 2016-ல் பாலபாரதிக்கு வாய்ப்புக் கொடுக்காதபோதே, சர்ச்சையானது.
முகமது ரியாஸ்
கேரள கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸுக்கு இடம் அளிக்கப்பட்டிருப்பதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாமா – மருமகன் ஒரே அமைச்சரவையில் இடம்பெறுவது கேரளாவில் முதல்முறையாகும். சி.பி.எம்-மின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ-யின் தேசியத் தலைவராகப் பதவி வகித்து வரும் முகமது ரியாஸ், பினராயி விஜயனின் மகள் டி.வீணாவைக் காதலித்து கரம்பிடித்தவர். முதல் முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் முகமது ரியாஸுக்கு பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. `அமைச்சர் பதவி என்பது பொறுப்புமிக்கது. தனிப்பட்ட விமர்சனங்களுக்கு செயல்பாடு மூலம் பதிலடி கொடுப்பேன்’ என்று கூறியிருக்கிறார் முகமது ரியாஸ்.