பிரேக்-அப்
ஒரு பிரேக்-அப்பிலிருந்து மீண்டு வருவது வாழ்வின் மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கும். அதேநேரம், நீங்கள் அதிலிருந்து மீளவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் உங்கள் Ex, வேறொரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்பதோ, ஏன் இன்னொருவருடன் டேட்டிங் செல்கிறார் என்ற தகவல் தெரிந்தால் அந்தக் கணம் வானமே இடிந்து தலையில் வீழ்ந்துவிட்ட ஃபீலிங்கில் நொறுங்கிவிடுவீர்கள். ஆனால், இப்படியான எண்ணங்கள் எல்லாமே தற்காலிகம்தான் என்ற புரிதலுக்கு வரும்பட்சத்தில் அதிலிருந்து மீண்டு வருவதும் சிம்பிள்தான் என்கிறார்கள் பெரும்பாலான உளவியல் நிபுணர்கள்.
பிரேக்-அப் இல் இருந்து மீண்டு வர உளவியல் நிபுணர்கள் சொல்லும் சிம்பிள் வழிகள்…
புரஃபொஷனலின் உதவியை நாடுங்கள்
பிரேக்-அப்பிலிருக்கும் சமயத்தில் உங்களுக்கு அட்வைஸ் செய்பவரை விட, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கேட்கும் நபர்கள்தான் வேண்டும் என்று நினைப்பீர்கள். என்ன காரணத்தால் பிரேக்-அப்பானது என்று தெரியாமலோ அல்லது அதற்கான நியாயம் எதுவும் இல்லை என்று நீங்கள் நினைக்கும் சூழலிலும் உங்கள் எண்ணத்தை, எமோஷனை வெளிப்படுத்துவது உங்களுக்கு உதவலாம். அந்த மாதிரியான சூழலில் புரஃபஷனல் ஒருவரின் உதவியை நாடுங்கள். எமோஷன் என்பது சரி, தவறு என்பதல்ல.. அதன் இருப்பு மட்டும்தான் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுயபரிசோதனை
உலகில் நாம் அதிகம் நேசித்த ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்துபோகும் தருணமோ அல்லது விவாகரத்து பெற்று திருமண பந்தத்தில் இருந்து வெளியேறும் தருணமோ வாழ்வின் மிகக்கொடிய தருணங்கள்தான். பிரேக்-அப்பாகி சில நாட்கள்தான் ஆகிறது என்பவரா நீங்கள்… இதே நிலையை 17 ஆண்டுகள் கழித்து நீங்கள் நினைத்துப் பார்த்தாலும் வெடித்து அழுதுவிடுவீர்கள் என்பதுதான் உண்மை. அப்போதைய மகிழ்வான தருணங்கள் உங்கள் நினைவில் வந்து தொந்தரவு செய்யலாம். இந்த மாதிரியான சூழலில் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத புதிய விஷயம் ஒன்றை சுயபரிசோதனை செய்து கண்டுபிடிக்க முயலுங்கள். வாழ்வை அணுகும் விதத்தை மாற்றி, உங்களுக்கு நீங்களே அன்பு செலுத்திப் பாருங்கள். இதுவும் காதலோடு வாழ்வை அணுக உதவும்.
பயத்தை எதிர்க்கொள்ளுங்கள்
பிரேக்-அப் கொடுக்கும் பயத்தையும் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிதர்சனத்தையும் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். உங்களின் Ex, அதைக் கடந்து வேறொரு தளத்துக்குப் பயணித்துவிட்டார், அவருடனான பயணம் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த பயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் மாற்றுவழி தேட முயற்சித்தால், ஒருநாள் அது விஸ்வரூபமெடுக்கும். அதனால், அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து நகர முயற்சி செய்யுங்கள். அவருடனான பசுமையான நினைவுகள் ஒருகட்டம் வரை உங்களுக்குப் பயம் கொடுக்கலாம், ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு வாழ்வு நமக்காக இருக்கிறது என்பதை உணர குடும்பத்தினரையும் நண்பர்களையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு கட்டத்தில் அந்த பயத்தில் இருந்து உங்களால் வெளிவர முடிந்திருக்கும்.
ஹேப்பி பிரேக்-அப் பாஸ்..!