36 மொழிகளில் கிட்டத்தட்ட 15000 பாடல்கள் பாடிய பான் வேர்ல்ட் பாடகிதான் இந்த சாதனா சர்கம். 36 மொழிகளில் பாடியிருந்தாலும் அவங்களுக்கு தேசிய விருதை வாங்கிக்கொடுத்தது நம்ம தமிழ் பாட்டுதான். அழகி படத்துல வந்த பாட்டுச் சொல்லி பாடலுக்காக தேசிய விருது வாங்கிய சாதனா சர்கம், இரண்டு முறை ஃபிலிம் ஃபேர் விருதும் வாங்கியிருக்காங்க. அதுல ஒரு விருது கீரிடம் படத்துல வந்த அக்கம் பக்கம் பாட்டுக்காக வாங்கியிருக்காங்கன்னா, தமிழ் பாடல்கள் அவங்க கரியருக்கு எவ்வளவு முக்கியமா இருந்திருக்குனு பார்த்துக்கோங்க. இந்த மாதிரி அவங்க கரியரில் நடந்த முக்கியமா மொமெண்ட்ஸைத்தான் பார்க்கப்போறோம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு இசை குடும்பத்தில் பிறந்தவங்கதான் சாதனா. சாதனாவோட அக்கா ஒரு கர்னாட்டிக் சிங்கர் மற்றும் பாட்டு டீச்சர். அதுனால சின்ன வயசுல இருந்தே சாதனாவுக்கு சங்கீதத்தை ஊட்டியே வளர்த்திருக்காங்கனு சொல்லலாம். சாதனாவும் அவங்க சொல்லித்தர சங்கதிகள் எல்லாத்தையும் எந்த மிஸ்டேக்கும் இல்லாமல் சூப்பரா பாடி அசத்துவாங்களாம். 4 வயசுலேயே இசை விழாக்களில் பாடியிருக்காங்க. அதுனால சாதனாவோட அம்மா இவரைப் பற்றி இசையமைப்பாளர்கள் கல்யாண்ஜி மற்றும் ஆனந்த்ஜியிடம் சொல்லியிருக்காங்க. அவங்களும் சாதனாவுக்கு கோரஸ்ல இருந்து ஆரம்பிச்சு சின்ன, சின்ன போர்ஷன்ஸ்னு சினிமாவில் பாடுறதுக்கு பயிற்சி கொடுத்திருக்காங்க. எட்டு வயசுல இருந்து சினிமாவில் வேலை பார்க்க ஆரம்பிச்ச சாதனாவின் 13வது வயசுல குஜராத்தி படம் மூலமா முதல் பாடல் பாடும் வாய்ப்பு கிடைச்சது. அதைத் தொடர்ந்து அதே வருஷத்துலேயே இந்தி பாடல் அடுத்தடுத்து பெங்காலி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம்னு வரிசையா 36 மொழிகளில் பாடிட்டாங்க.
சாதனா சினிமாவில் பாட ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழிச்சி 1996 ஆம் ஆண்டுதான் தமிழ்ல இவங்களை வித்யாசாகர் அறிமுகப்படுத்தினார். விஜய் நடிச்ச கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தோட கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணுக்கிடைச்சா பாடலில் பாடகர் உதித் நாராயனோடு சேர்ந்து பாடிதான் தமிழில் அறிமுகமானார் சாதனா. சமீபத்தில் மல்லிப்பூ பாடல் மூலம் வைரலான மதுஸ்ரீவும் இதே வித்யாசாகர் – உதித் நாராயன் காம்போவில்தான் தமிழிலில் அறிமுகமானார். ஆனால், அவர் அறிமுகமானது 2003 ஆம் ஆண்டில். அப்படிப்பார்த்தால் மல்லிப்பூ மதுஸ்ரீக்கே அக்கா, இந்த சாதனா சர்கம்.
Also Read – லேடி உதித் நாராயன்; யார் இந்த ‘மல்லிப்பூ’ மதுஸ்ரீ?!
சாதனா சர்கமுக்கு தமிழில் சக்ஸஸான ஒரு காம்போ இருக்கு. அதுல இசையமைப்பாளர் – பாடகி காம்போல ஏ.ஆர்.ரஹ்மானுக்குதான் முதலிடம். தமிழில் சாதனாவுக்கு வாய்ப்பு கொடுக்குறதுக்கு முன்னாடியியே இந்தியில் வாய்ப்பு கொடுத்தார் ரஹ்மான். இந்தியன் படத்தோட கப்பலேறி போயாச்சு பாட்டோட இந்தி வெர்ஷன்தான் அது. அதுக்கப்பறம் தமிழில் பாடிய பாடல்தான் மின்சார கனவு படத்துல வெண்ணிலவே வெண்ணிலவே பாடல். இதுக்கப்பறம் அலைபாயுதே படத்துல சினேகிதனே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துல கொஞ்சும் மைனாக்களே, தெனாலி படத்துல சுவாசமே, ஸ்டார் படத்துல மனசுக்குள் ஒரு புயல், பார்த்தாலே பரவசம் படத்துல அழகே சுகமா, நியூ படத்துல காலையில் தினமும், வரலாறு படத்துல காற்றிள் ஓர் வார்த்தை, உதயா படத்துல உதயா உதயானு பல ஹிட் பாடல்களை ரஹ்மானின் இசையில் சாதனா பாடியிருக்காங்க.

அதே மாதிரி ஜோடி பாடல்களில் சாதனாவின் எவர்க்ரீன் ஹிட் காம்போனா அது ஹரிஹரன்தான். ஹரிஹரன்கூட சாதனா 6 மொழிகளில் கிட்டத்தட்ட் 100 ஹிட் பாடல்களுக்கு மேல பாடியிருக்காங்க. குறிப்பா அவங்க தமிழில் பாடிய பாடல்கள்னா பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துல சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே, நெஞ்சினிலே படத்துல மனசே மனசே, குஷி படத்துல மொட்டு ஒன்று, டும் டும் டும் படத்துல ரகசியமாய், ரோஜாக்கூட்டம் படத்துல மொட்டுகளே மொட்டுகளே, ரன் படத்துல பொய் சொல்லக்கூடாது காதலி, சொக்கத்தங்கம் படத்துல என் ஜன்னல் நிலவுக்கு, பிரியமான தோழி படத்துல மான்குட்டியே, வசூல்ராஜா படத்துல காடு திறந்துனு இந்த ஹிட் லிஸ்ட் ரொம்பவே பெருசு.

இந்த காம்போவைத் தவிர சாதனா சர்கம் பாடிய பல தமிழ்ப்பாடல்கள் நம்ம எல்லாரோட ப்ளேலிஸ்டிலும் கண்டிப்பாக இருக்கும். அந்தப் பாடல்கள் என்னென்னனா, பூவெல்லாம் உன் வாசம் படத்துல காதல் வந்ததும், அன்பே சிவம் படத்துல பூ வாசம், தம் படத்துல சாணக்யா சாணக்யா, மதுர படத்துல கண்டேன் கண்டேன், மன்மதன் படத்துல மன்மதனே நீ, ஐயா படத்துல ஒரு வார்த்தை கேக்க, தாஸ் படத்துல சக்கப்போடு போட்டானே, பீமா படத்துல எனதுயிரே, தசாவதாரம் படத்துல முகுந்தா முகுந்தா, பாணா காத்தாடி படத்துல என் நெஞ்சில்னு நாம் கேட்டு, கேட்டு கொண்டாடுற பல பாடல்களை பாடியிருக்காங்க சாதனா சர்கம்.
சாதனா சர்கம் பாடுன எந்தெந்த பாடல்கள் உங்களோட ப்ளேலிஸ்டில் இருக்குனு மறக்காம கமெண்ட் பண்ணுங்க.