ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆர்.சி.பி வீரர் முகமது சிராஜ், போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஐகானிக்கான ‘Sui Celebration’-னோடு கொண்டாடினார். அந்த செலிபிரேஷனுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
ஐபிஎல் 2022
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலா ஆர்.சி.பி-யை பஞ்சாப் கிங்ஸ் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆர்.சி.பி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை பஞ்சாப் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19 ஓவர்களில் எட்டியது. இந்தப் போட்டியில் பஞ்சாபின் சேஸிங்கின்போது, 14-வது ஓவரை வீசிய ஆர்.சி.பி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், அதிரடி காட்டிக் கொண்டிருந்த ராஜபக்ஷே மற்றும் ஜூனியர் உலகக் கோப்பை ஸ்டாரான ராஜ் பவா ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். இந்த இரண்டு விக்கெட்டுகளின்போதும், அவர் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஃபேமஸான ‘Sui Celebration’-னோடு கொண்டாடினார்.
Sui Celebration
காற்றில் துள்ளிக் குதித்தபடி இரண்டு கைகளையும் குறுக்கு வெட்டாக வைத்து, தரையில் லேண்டாகும்போது கைகளை நீட்டி கொண்டாடுவது ரொனால்டோவின் ஐகானிக் ஸ்டைல். உலக அளவில் பிரபலமான இந்த ஸ்டைல் கொண்டாட்டத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
ரொனால்டோ கோல் அடிக்கும்போது இந்த ‘Sui Celebration’-னோடு அடிக்கடி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதுண்டு. அப்போது ரசிகர்கள் ‘Suuuuiii’ என்ற ஆரவாரத்தோடு ஆர்ப்பரிப்பார்கள். இதற்கு என்ன பொருள் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘Yes’ என்பதுதான் அதற்கான அர்த்தம் என்று ரொனால்டோ பதிலளித்திருக்கிறார். மேலும், அவர் கூறுகையில், ‘’ஸ்பானிஷ் மொழியில் ‘Si’ என்றால் ‘Yes’ என்று பொருள். அந்த அர்த்தத்தில்தான் நான் இதைக் கூற நினைத்தேன். நான் அமெரிக்காவில் செல்சா அணிக்கெதிராக விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு கோல் அடித்த பிறகு இப்படி கொண்டாடினேன். எப்படி எனக்கு அது முதன்முதலில் தோன்றியது என்று எனக்கே தெரியவில்லை.
நான் அப்படி கொண்டாடியதும், அதற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் அந்த முறையில் கொண்டாட வேண்டும் என மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர். அப்படியே அது எனது பழக்கமாகிவிட்டது’’ என்று அவர் பதிலளித்திருக்கிறார்.
2013-ல் செல்சா அணிக்கெதிரான காட்சிப் போட்டியில் ரொனால்டோ ’Sui Celebration’ முதன்முதலாக செய்துகாட்டினார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு மேல் அந்தக் கொண்டாட்டம் ஐகானிக் செலிபிரேஷனாக விளையாட்டு உலகில் நிலைத்துவிட்டது.
Also Read – கண்ணைப் பறிக்கும் Cheerleaders – உடை, ஊதியம், பின்னணி, சர்ச்சைகள் – முழுமையான அலசல்!