ஸ்ட்ரீமிங் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் நெட்ஃபிளிக்ஸ், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஸ்காட்ஸ் வேலி பகுதியில் ரீட் ஹேஸ்டிங்ஸ், மார்க் ராண்டால்ஃப் ஆகிய இருவரால் 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கப்பட்ட நிறுவனமாகும். 2021 ஏப்ரல் மாதக் கணக்குப்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 208 மில்லியன் (20.8 கோடி). இதில், 7.4 கோடி பேர் அமெரிக்கா, கனடாவைச் சேர்ந்தவர்கள். சீனா, சிரியா, வடகொரியா, கிரீமியா ஆகிய நாடுகளைத் தவிர உலகின் பெரும்பாலான நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கி வருகிறது. கலிஃபோர்னியாவின் லாஸ் கடோஸ் நகரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருக்கும் அந்த நிறுவனத்துக்கு இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, ஜப்பான், தென்கொரியா, இங்கிலாந்தில் கிளை அலுவலகங்கள் இருக்கின்றன.
நெட்ஃபிளிக்ஸ் பற்றிய 6 சுவாரஸ்யத் தகவல்கள்!
நெட்ஃபிளிக்ஸ் – ஆரம்பகாலப் பெயர்
டிவிடி சேல்ஸ் மற்றும் வாடகைக்கு விடும் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட நெட்ஃபிளிக்ஸ் ஆரம்பகாலகட்டத்தில் கிப்பிள் (Kibble) என்றழைக்கப்பட்டது. Directpix.com, Replay.com மற்றும் Luna.com போன்ற பெயர்களை அதன் நிறுவனர் ராண்டால்ஃப் பரிசீலனையில் வைத்திருந்தார். கம்பெனி கார்ப்பரேட் நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட போது புதிய நிரந்தரமான பெயரை வைக்கும்வரை கிப்பிள் என்றழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சர்வே
நெட்ஃபிளிக்ஸ் நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் எந்தமாதிரியான படங்களைப் பார்க்கிறார்கள், அவர்களது விருப்பம் எப்படியிருக்கிறது என்பதை அறிவதற்காக வீடுகளுக்கே சென்று வாடிக்கையாளர்களுடன் படம் பார்ப்பதை வழக்கமாக ஆரம்பகாலத்தில் வைத்திருந்தனர். 1990களில் நெட்ஃபிளிக்ஸின் லாஸ் காடோஸ் அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களோடு படம் பார்த்ததோடு மட்டுமல்லாமல், டெலிபோனில் கேள்விகள் மூலம் சர்வேவையும் நடத்தி வந்தது. காஃபி உள்ளிட்ட ஸ்நாக்ஸும் வாடிக்கையாளர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் பணியாளர்களால் வழங்கப்பட்டது.
பப்ளிசிட்டி
2006-2007 பப்ளிசிட்டி சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் விளம்பர போர்டுகளில் திரைப்படங்களை ஒளிபரப்ப நெட்ஃபிளிக்ஸ் குழு திட்டமிட்டது. படம் ஷூட் செய்யப்பட்ட ரியல் லொக்கேஷன்களிலேயே அந்தப் படத்தைத் திரையிட முடிவு செய்து, அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில் ஷூட் செய்யப்பட்ட `Field of Dreams’ படத்தை குறிப்பிட்ட பகுதியிலேயே ஒளிபரப்பியது. அதேபோல், படத்தில் நடித்த நடிகர்களை வைத்தும் விளம்பரம் செய்யப்பட்டது.
ஸ்பாய்லர் சயின்ஸ்
நெட்ஃபிளிக்ஸின் பல முக்கிய ஷோ, வெப் சீரிஸ்கள் போன்றவற்றை ஸ்பாய்லர்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க அந்த நிறுவனம் புது முயற்சியைக் கையிலெடுத்தது. ஸ்பாய்லர்கள் எப்படி குறிப்பிட்ட ஷோ அல்லது வெப் சீரிஸைப் பார்க்க வேண்டும் என ஒருவர் எடுக்கும் முடிவைப் பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காகவே கலாசார மானுடவியல் அறிஞர் கிராண்ட் மெக்கிராக்கன் (Grant McCracken) என்பவரைப் பணியமர்த்தியது. அவரது ஆய்வில், மக்களில் சிலர் கதையின் ட்விஸ்ட் முன்கூட்டியே தெரியும் என்று பெருமையுடன் பார்க்கிறார்கள் என்றும், இறுதியாக, குறிப்பிட்ட ஷோ அல்லது வெப் சீரிஸ் நல்ல திரைக்கதையைக் கொண்டிருந்தால் நிச்சயம் ஸ்பாய்லர்களால் பாதிப்பில்லை என்று சொன்னார்.
நெட்ஃபிளிக்ஸின் ஃபர்ஸ்ட் ஒரிஜினல்
ஸ்ட்ரீமிங்கில் ஃபிரேம் ரேட் எப்படி இருக்கிறது, ஸ்ட்ரீமிங்கின் தரம் எப்படியிருக்கிறது என்பதைப் பரிசோதிப்பதற்காக 2011-ல் 11 நிமிடங்கள் ஓடும் ஃபூட்டேஜ் ஒன்றை அந்த நிறுவனம் ஷூட் செய்தது. `Example Show’ என்ற பெயரில் இதை இன்றும் நீங்கள் நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்.
கடைசியா ஒரு சீக்ரெட்
இது நீங்க நினைக்கிற மாதிரி சீக்ரெட்லாம் இல்லீங்க. கம்யூட்டர்ல நீங்க ஸ்ட்ரீம் பண்ணும்போது, நெட்ஃபிளிக்ஸோட சைட்ல இருந்துகிட்டு Shift + Alt + left mouse click பண்ணீங்கன்னா, மெனு ட்ரபுள்ஷூட்டாகி ஸ்ட்ரீமிங்கோட பிட் ரேட்டை அட்ஜஸ்ட் பண்ணலாம். இதனால, பஃபர் ஆகாம உங்க படத்தைத் தொடர்ந்து நீங்க பார்க்க முடியும். ஆப்பிள் ஐ ஓஸ் சிஸ்டத்துல இந்த ஷார்ட் கட்டுக்கு Shift + Option + click. பிக்ஸர் குவாலிட்டி கொஞ்சம் அடிவாங்கலாம். ஆனால், பஃபராகி பஃபராகிப் பாக்குறதுக்கு இது பெட்டர்தானே?..
நெட்ஃபிளிக்ஸ்ல வேறெதும் ஷார்ட் கட் உங்களுக்குத் தெரியும்னா… கமெண்ட்ல சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்குறோம்.
Also Read – கேட்ஜெட் பிரியரா நீங்க.. அப்போ இந்த கியூட் கேட்ஜெட்டுகளை ட்ரை பண்ணிப் பாருங்க!