சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அது சென்னையின் கிழக்குப் பகுதிகளில் உணரப்பட்டது. நில அதிர்வு உணரப்பட என்ன காரணம்?
வங்கக் கடலில் நிலநடுக்கம்
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து கிழக்கே 296 கி.மீ தூரத்தில் வங்கக் கடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.1-ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் நேற்று மதியம் 12.35 மணியளவில் ஏற்பட்டது. இதை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் உறுதி செய்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி சென்னையில் இருந்து வடகிழக்கே 320 கி.மீ தூரம் கொண்டது.
இதையடுத்து, சென்னையின் கிழக்குப் பகுதிகளான திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மதியம் 12.50 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ஆந்திரா, தமிழகக் கடலோரப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தாலேயே சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதாக ஆய்வாளர்கள் விளக்கமளித்தனர். சென்னையில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டாலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
தமிழகத்துக்குப் பாதிப்பில்லை!
பூமிக்கு அடியில் இருக்கும் நிலத்தகடுகள் நகர்வதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. அந்தவகையில் பார்த்தால் தமிழகத்தின் அமைவிடம் நிலத்தகடுகள் சந்திக்கும் பகுதியில் இல்லை என்பதால், இங்கு நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைவு. அதேபோல், சுனாமியைப் பொறுத்தவரை கடலில் ஏற்படும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7-க்கு மேல் பதிவானால் மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. இதுபற்றி பேசிய தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், `நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்னையில் நில அதிர்வு உணரப்படுவது வழக்கமான ஒன்றுதான். நிலநடுக்கம் ஏற்படும் பகுதியின் மையப்புள்ளி இங்கு இருந்தால் மட்டுமே பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். இதனால், அச்சப்படத் தேவையில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.
Also Read – குத்தகைக்கு விடப்படும் தமிழகத்தின் 6 விமான நிலையங்கள்… என்ன காரணம்?