வட இந்திய மாநிலத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தை, தென்னிந்திய மாநிலம் ஒன்றில் பிறந்த ஒரு பெண் குழந்தை என இருவரையும் ஒரு விஷயத்துக்காக ஒப்பிட்டுப் பார்க்கலாம். தென்னிந்தியாவில் பிறந்த குழந்தை ஒரு வயதிற்குள்ளாக மரணம் அடைய சாத்தியங்கள் குறைவு, குழந்தை பிறப்பின் போது அதன் தாய் இறப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. அந்த தென்னிந்தியக் குழந்தைக்கு வட இந்தியக் குழந்தையைவிட அதிகமான ஊட்டச்சத்து பெறும், பள்ளியில் படிக்கும் காலம் அதிகம், கல்லூரிக்குச் செல்வதற்கும் வாய்ப்பு அதிகம், அந்தப் பெண் திருமணம் செய்து பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும், அந்தக் குழந்தை தாயை விட ஆரோக்கியமாக இருக்கும், அதிக கல்வி பெறும். சுருக்கமா சொல்லனும்னா, தென்னிந்தியாவில் பிறக்கும் குழந்தை வட இந்தியாவில் பிறக்கும் குழந்தையை விட ஆரோக்கியமாகவும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் வளரும்.
என்ன இப்படி அபசகுணமா, வட இந்தியர்கள் மேல வண்மத்தோடவும் பேசிகிட்டிருக்கேன்னு யோசிக்குறீங்களா? நான் மேல சொன்ன அத்தனையும் சமீபத்தில் வெளியாகி இருக்க SOUTH vs NORTH : India’s Great Divide புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்க விஷயங்கள். மேல சொன்ன ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாடியும் ஒரு புள்ளிவிவரத்தை எடுத்து கண் முன்னால போட்டு, அதற்கான விளக்கத்தையும் கொடுத்து இதனால்தான் தென்னிந்திய மாநிலம் பற்றி இதைச் சொல்றேன்னு ஆணித்தரமா வாதாடி இருக்காரு Nilakantan RS.
உதாரணமா, “தென்னிந்தியாவில் பிறந்த குழந்தை ஒரு வயதிற்குள்ளாக மரணம் அடைய சாத்தியங்கள் குறைவு, குழந்தை பிறப்பின் போது அதன் தாய் இறப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு…” ன்னு சொன்னேன் இல்லியா, அதற்கான புள்ளிவிவரம் என்னன்னா, பொதுவாக ஒரு குழந்தை பிறந்து, ஒரு வயதை எட்டுவதற்கு முன்னர் இறந்தால் அதை Infant Mortality-ன்னு சொல்வாங்க. பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஓராண்டுக்குள் எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்பதைக் குறிக்கும் விகிதம் தான் Infant Mortality Rate. கேரளாவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 7 குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன. தமிழகத்தில் இது 15-ஆக இருக்கிறது. ஆனால், உத்திரப் பிரதேசத்தில் இது 43-ஆகவும், மத்திய பிரதேசத்தில் இது 48-ஆகவும் இருக்கிறது. கேரளாவின் இந்த விகிதத்தை உலக நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என்றால், அமெரிக்காவுடன் தான் ஒப்பிட முடியும், அங்கே இந்த விகிதம் 6. ஆனால், மத்திய பிரதேசத்தை போரால் சீரழிந்த நைஜீரியா, ஆப்கானிஸ்தானுடன் தான் ஒப்பிட முடியும், அந்த நாடுகளிலும் இந்த விகிதம் 48. கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் குறைந்துகொண்டிருக்க, மத்திய பிரதேசத்திலோ இந்த விகிதம் அதிகரிக்கிறது.
இன்னொரு கேள்வி கேக்குறேன், அதுக்கான பதிலை கடைசியில் பார்க்கலாம். நீங்க Guess பன்ற பதிலை கமெண்ட்ல சொல்லுங்க, உங்க பதில் சரியான்னு கடைசியில் பார்க்கலாம். கேரளாவில் பிறக்கும் ஒரு குழந்தை உத்தர பிரதேசத்தில் பிறக்கும் ஒரு குழந்தையை விட எத்தனை ஆண்டுகள் அதிகம் உயிர் வாழும் தெரியுமா? அதற்கும் ஒரு புள்ளி விவரம் இருக்கு. அதோட பேர் Life Expectancy at birth. பதிலை கடைசியில் பார்ப்போம்.
ஆரோக்கியத்தில் IMR மட்டுமல்ல, குழந்தை பிறந்த எத்தனை நாள்களுக்குள்ளாகப் பதிவு செய்யப்படுகிறது, மருத்துவமனைகளில் எவ்வளவு சதவிகிதம் பிரசவங்கள் நிகழ்கின்றன என இன்னும் பல புள்ளி விவரங்களிலும் தென்னிந்திய மாநிலங்கள் வட இந்திய மாநிலங்களை விட சிறப்பாக இருப்பதை தரவுகள் உறுதி செய்கின்றன. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளில் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் வளர்ச்சி குறைவாக இருக்கும் குழந்தைகளின் சதவிகிதமும் கேரளாவில் 20, தமிழகம் 27, ஆந்திரம் 31. ஆனால், பீகார் 48, உத்திரபிரதேசம் 46. புள்ளி விவரமாக இல்லாமல் சில அதிர்ச்சியான தகவல்களா சொல்றேன்.
நிலையான கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம் மேற்கு வங்கத்தில் 9% விகிதம் தான். தமிழகத்திலோ 100% அங்கன்வாடி மையங்கள் நிலையான உறுதியான கட்டடங்களில் இயங்குகிறது. குழந்தைகளின் எடையளக்கும் கருவிகள் அஸ்ஸாமில் 19% மையங்களிலும் உத்தரபிரதேசத்தில் 20% மையங்களிலும் தான் இருக்கின்றன, தமிழகம், கர்நாடகா, கேரளாவிலோ 100% மையங்களிலும் இருக்கின்றன. இந்த மையங்களில் தனியான சமயலறை தமிழகம், கேரளம், கர்நாடகா, தெலுங்கானாவில் 100% இருக்கின்றன, மேற்கு வங்கத்திலோ 6% மையங்களில் தான் தனியான சமயலறை இருக்கிறது.
ஆரோக்கியம், நலம் போன்ற துறைகளில் மட்டுமல்ல, எழுத்தறிவு சதவிகிதம், பள்ளி இடைநிற்றல் குறைவாக இருப்பது, உயர் நிலைக் கல்வியைத் தொடரும் விகிதம், கல்லூரிக்குச் செல்லும் விகிதம், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிப்படிப்பை பெறும் பெண்களின் சதவிகிதம் என அனைத்துவிதமான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தாலுமே கல்வித்துறையிலும் தென்னிந்திய மாநிலங்கள், வட இந்திய மாநிலங்களை விட சிறப்பாகவே செயல்படுகின்றன.
உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி போன்ற அளவீடுகளிலுமே தென்னிந்திய மாநிலங்கள் வட இந்திய மாநிலங்களை விடவே சிறப்பாக செயல்படுகின்றன. விவசாயத்துறை சாராத பிற வேலைகளில் சராசரி தினக்கூலியின் மதிப்பும் கேரளம் மற்றும் தமிழகத்தில் அதிகம், விவசாயம் சார்ந்த வேலைகளிலும் ஒரு நாளைக்கான ஊதியம் இந்த இரு மாநிலங்களிலும் அதிகம்.
ஆரோக்கியம், கல்வி, பொருளாதாரம், ஒட்டுமொத்த வளர்ச்சி என எல்லா துறைகளிலும் வட இந்திய மாநிலங்களை விட ஏன் தென்னிந்திய மாநிலங்கள் அதிக வளர்ச்சியை அடைந்திருக்கின்றன? அதற்கான காரணம் என்னவாக இருக்கும்? கேரளாவிலும் தமிழகத்திலும் ஏற்பட்ட ஒரு மொழிவாரி, இனவாரி தேசிய உணர்ச்சிகளும், அந்த உணர்வை கட்டியெழுப்ப உருவான இயக்கங்களும் அவை மக்களிடம் புகட்டிய ஒற்றுமையுணர்வும் தான் இந்த வளர்ச்சிக்கு முதன்மையான காரணம். இவை போக இந்த ஐக்கிய கேரள இயக்கமும், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிட இயக்கங்கள் போன்றவை மக்களிடைய ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும், சாதிக்கு எதிரான மனோபாவத்தை வளர்த்ததும் இதனால் மக்களிடையே ஏற்பட்ட சகிப்புத்தன்மையும் “மலையாளி”, “தமிழர்” என்ற உணர்வுகளும் மேலோங்கியது ஒரு காரணம். கடலுக்கு அருகில் இருந்ததால் வனிகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் இன்னொரு காரணம். இவைபோக அரசு இயந்திரமும், அரசு கொண்டு வந்த மதிய உணவுத்திட்டம், சுகாதாரக்கட்டமைப்புகளை வலுப்படுத்தியதும், மக்கள் நலத்திட்டங்களுமே முக்கிய காரணம்.
Also Read : இந்தியாவில் இதை உங்களால் வாசிக்க முடியாது… தடை செய்யப்பட்ட 10 புத்தகங்கள்!
கடந்த 50 வருஷ திராவிட ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சியில் பிந்தங்கிருச்சுன்னு ஒரு முப்பது வருஷமாவே குரல் மாறாம பலர் சொல்லிகிட்டிருக்காங்க. சமூக வலைதளங்களோட வளர்ச்சிக்குப் பிறகு தமிழ்நாட்டை விட்டு வட இந்தியாவுக்கு வேலைக்குப் போன பலர் “தமிழ்நாட்டை விட்டு நீங்க வெளிய வந்தாதான் தமிழ்நாட்டோட அருமை தெரியும்”னு பேசிகிட்டிருக்காங்க. 2014-ல் மோடி பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் போது ‘குஜராத் மாடல்” விவாதப்பொருளா ஆச்சு. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இந்த விவாதம் முழுக்க “திராவிட மாடல்” பக்கம் திரும்பிருச்சு. ஆதாரப்பூர்வமா பல புள்ளிவிவரங்களோட தமிழ்நாடு குஜராத்தை விட மட்டுமல்ல வட இந்தியாவோட பல மாநிலங்களை விட தமிழகம் வளர்ச்சியடைந்திருக்குன்னு பேசினாலும்… ஆங் அதெல்லாம் நம்ப முடியாதுன்னு பேசுவாங்க, இந்தி படிச்சா பானி பூரி வாங்கலாம், இந்தி படிக்காம உருப்படாம போயிட்டோம்னு பேசுன குரல்களுக்கெல்லாம் “இந்தி தெரியாது போடா”ன்னு டிரெண்டாக்கி விட்டுட்டாங்க.
ஆனா, தமிழ்நாடு மட்டுமில்ல ஒட்டுமொத்தமா தென்னிந்திய மாநிலங்கள் எல்லாமே வட இந்திய மாநிலங்களை விட ஆரோக்கியம், கல்வி, பொருளாதாரம்னு பல துறைகளில் எப்படி முன்னேறி இருக்குன்னு அரசுத்தரப்பு புள்ளிவிவரங்களோடவும், ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களை எல்லாம் தொகுத்து வெளிவந்திருக்கு இந்தப் புத்தகம். புத்தகத்தோட ஆசிரியர் அடிப்படையில் ஒரு Data Scientist அவர், அதனால் இந்த புள்ளிவிவரங்களை தொகுக்குறதுலயும், அவற்றை விரிவாக்குறதுல சிறப்பாவும் செய்திருக்கார். வெறும் புள்ளி விவரங்களை மட்டும் வைத்து தென்னிந்திய மாநிலங்கள் தான் சிறப்பா இருக்குன்னு சொல்றதோட அவர் நிறுத்திக்கல. ஏன் தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பா இருக்குன்றதுக்கான ஆராய்ச்சியவும் அதற்கான விளக்கங்களையும். இந்த நேரத்தில் இந்தியாவுக்கான தேவை என்ன, அந்த பாதையில் போறதுக்கு என்ன செய்யனும்ன்ற ஆய்வுக்கட்டுரைகளும் புத்தகத்தோட பின்பகுதியில் இருக்கு.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
திருக்குறள் போலவே, பிரச்னைகளையும், அதற்கான காரணங்களையும், அதற்கான தீர்வையும் இந்தப் புத்தகம் சரியா வழங்கி இருக்குன்னே சொல்லலாம்.
முதலில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன்ல, “கேரளாவில் பிறக்கும் ஒரு குழந்தை உத்தர பிரதேசத்தில் பிறக்கும் ஒரு குழந்தையை விட எத்தனை ஆண்டுகள் அதிகம் உயிர் வாழும் தெரியுமா?” கேரளாவில் பிறக்கும் குழந்தை 75 வயது வரையும், உத்திரபிரதேசத்தில் பிறக்கும் குழந்தை 64 வயது வரையே உயிர் வாழும். அதாவது கேரளாவில் பிறக்கும் குழந்தை உ.பி-யில் பிறக்கும் குழந்தையை விட பதினோரு ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழும்.
புத்தகத்தில் கொடுத்திருக்க புள்ளி விவரங்கள் அடங்கிய Table-களை சிறப்புல இருந்து மோசம்ன்ற வரிசைக்கு Sort பண்ணி கொடுத்திருந்த தென்னிந்திய மாநிலங்கள் எல்லா டேபிள்லயும் மேல இருந்திருக்கும், புரிஞ்சுக்க சுலபமாவும் இருந்திருக்கும். ஆனா, என்ன வண்மத்தை அள்ளித்தெளிச்ச மாதிரி இருக்கும்.