ஸ்ரீபெரும்புதூர் போராட்டம்

Sriperumbudur Women Protest: ஸ்ரீபெரும்புதூர் பெண் தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம் – என்ன நடந்தது?

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவால் 8 பேர் உயிரிழந்ததாக சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் 15 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபடு வருகிறார்கள். என்ன நடந்தது?

ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலை

ஸ்ரீபெரும்புதூர் போராட்டம்
ஸ்ரீபெரும்புதூர் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள், தொழிற்சாலைக்குச் சொந்தமான பூந்தமல்லி மகளிர் விடுதிகளில் தங்கியிருக்கிறார்கள். இந்தநிலையில், தொழிற்சாலை விடுதியில் கடந்த புதன்கிழமை மதியம் கெட்டுப்போன உணவைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், 400-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் அருகிலிருக்கும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தீவிரமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட எட்டு பேரின் நிலை தெரியவில்லை என்கிறார்கள். இதனால், தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து இரவு 12 மணி முதலே ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பெண் தொழிலாளர்கள் கோரிக்கை

சுமார் 10 மணி நேரம் கடந்து நீடித்து வரும் தொழிலாளர்கள் போராட்டத்தால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் போக்குவரத்தில் மாற்றம் செய்தனர். வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், எட்டு பேர் குறித்து தொழிற்சாலை நிர்வாகம் எந்தவொரு விளக்கமோ தகவலோ அளிக்கவில்லை என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலாளர்கள். இந்த நிலையில், தொழிலாளர்கள் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நேரடியாக வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் போராட்டம்
ஸ்ரீபெரும்புதூர் போராட்டம்

தொழிற்சாலையில் இரண்டு பேர் இறந்ததாகக் கூறப்படுவது வதந்தி என்று கூறிய அவர், மயக்க நிலையில் தொழிலாளர்கள் இருக்கும் புகைப்படத்தை வைத்து அவர்கள் இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பரப்பப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், விடுதியின் வார்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், சிகிச்சை பெற்று வரும் இரண்டு பெண் தொழிலாளர்களிடம் வீடியோ காலில் பேசி, அதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் காண்பித்தார். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த காஞ்சிபுரம் ஆட்சியர், போராட்டத்தைக் கைவிடுமாறு பெண் தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார். அதேநேரம், தங்களை மரியாதைக் குறைவாக போலீஸார் நடத்துவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read – திருநெல்வேலி பள்ளிக் கட்டடம் இடிந்த விபத்தில் 3 மாணவர்கள் பலி – என்ன நடந்தது?

1 thought on “Sriperumbudur Women Protest: ஸ்ரீபெரும்புதூர் பெண் தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம் – என்ன நடந்தது?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top