ரஷ்யா – உக்ரைன் போர் உலக அளவில் மோசமான பின்விளைவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யா தொடுத்திருக்கும் இந்தப் போரால் உக்ரைனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக இடம்பெயர்ந்து வருகிறார்கள். அங்கு படித்த மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியிருக்கிறது. அகதிகள் நிலை என்பது இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட சூழலோடு ஒப்பிடப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரின்போது, ஆங்கிலேயர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி போலந்து அகதிகள் 600-க்கும் மேற்பட்டோருக்கு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் பாதுகாப்பு அரண்போல் செயல்பட்டு அடைக்கலம் கொடுத்த `The Good Maharaja’ என்றழைக்கப்படும் ரஞ்சித்சிங்ஜி ஜடேஜாவின் கதையைப் பத்திதான் நாம இந்த வீடியோவுல தெரிஞ்சுக்கப் போறோம்.
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் சின்னஞ்சிறிய நாடான போலந்துக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்தனர். சோவியத் யூனியன் கால வடக்கு சைபீரியாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் தொழிலாளர் முகாம்களுக்கும் அங்கிருந்தவர்கள் பணியாற்றுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 1941-ல் ஹிட்லரின் நாஜி ராணுவம், சோவியத் யூனியனுக்குள் நுழைந்து போர் செய்யத் தொடங்கிய நிலையில், தொழிலாளர் முகாம்களில் இருக்கும் போலந்து நாட்டவர்களை விடுவிப்பதாக அந்நாடு அறிவித்தது. மேலும், ஜெர்மனி ராணுவத்துக்கு எதிரான போரில் பங்கேற்பதற்காக போலந்து நாட்டைச் சேர்ந்த தனிக்குழுவை அமைக்கவும் அப்போது முடிவு செய்யப்பட்டது.

கடுமையான போர் நடந்த சூழலில் 600-க்கும் மேற்பட்ட பெண்கள், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதுகாப்பில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்தாலும், பெரும்பாலான நாடுகள் அவர்களை அகதிகளாக ஏற்க மறுத்தன. இந்தியாவில் அப்போது ஆட்சியில் இருந்த பிரிட்டீஷ் அரசு, அவர்களை அகதிகளாக ஏற்க முடியாது என்று கைவிரித்தது. அந்தசூழலில், போலந்து மக்களைக் காக்க முன்வந்தார் குஜராத்தின் நவா நகர் பகுதி நவாபான திக்விஜய்சிங்ஜி ரஞ்சித்சிங்ஜி ஜடேஜா. தற்போதைய சௌராஷ்டிரா பகுதியில் இருந்த அவரது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் போலந்து மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.
சைபீரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பயணித்து நவாநகர் வந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்ற அவர், `உங்களை நீங்கள் ஆதரவற்றவர்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் நவாநகரைச் சேர்ந்தவர்கள். இங்கிருக்கும் மக்கள் அனைவருக்கும் தந்தை என்பதைப் போலவே, உங்களுக்கும் நான் தந்தைதான்’ என்று கூறி பாசத்தோடு அரவணைத்துக் கொண்டார்.
யார் இந்த ரஞ்சித்சிங்ஜி?
குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் இருக்கும் நவாநகர் மாகாணத்தை ஆண்ட அரச வம்சத்தில் பிறந்தவர் ஜாம்சாஹேப் என்றும் தி குட் மகாராஜா என்றும் அழைக்கப்படும் திக்விஜய் சிங்ஜி ரஞ்சித் சிங்ஜி ஜடேஜா. இவரது சித்தப்பா புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ரஞ்சித்சிங்ஜி. சுருக்கமாக ரஞ்சி. இவரது பெயரில்தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை போட்டிகளை பிசிசிஐ நடத்தி வருகிறது. இளம் வயதிலேயே பிரிட்டிஷ் ஆர்மியில் இணைந்த அவர், படிப்படியாக உயர்ந்து லெப்டினன்டாகவும் இருந்தார். 1931-ல் பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவர், தனது கல்லூரிப் படிப்பை லண்டனில் முடித்தவர். 1933-ல் ரஞ்சியின் மறைவைத் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஜாம்சாஹேப், கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற தனது இறுதிக் காலம் வரையில் பாடுபட்டவர். இவர், தனது 70-வது வயதில் மும்பையில் கடந்த 1966 பிப்ரவரி 3-ல் உயிரிழந்தார்.

9 ஆண்டுகள் ஸ்டே
நவாநகர் மாகாணத்தின் தலைநகரான ஜாம் நகருக்கு அருகே இருந்த பலாசாடி கிராமத்தில் அவர்களுக்கான குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். சைபீரியாவில் ஒரே அறையில் அடைந்து கிடந்த போலந்து குழந்தைகள் அனைவருக்கும், தனித்தனி பெட் கொடுத்து அவர்களை மகிழ்வித்தார். உணவு, உடை, இருப்பிடத்தோடு, போலந்து ஆசிரியர்களைக் கொண்டு அவர்களுக்கான கல்வி வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார். 1920களில் சுவிட்சர்லாந்தில் தனது உறவினருடன் தங்கியிருக்கையில், போலந்து மக்களின் கலாசாரம், அவர்களது வாழ்க்கை முறை போன்றவை குறித்து அறிந்துகொண்ட ஜாம்சாஹேப், அவர்கள் மீது தனி பாசம் கொண்டிருந்தார்.
போலந்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் நூற்றுக்கணக்கான குழந்தைகள், பாலாசாடி கிராமத்தில் வாழத் தொடங்கினர். அவர்களைத் தனது சொந்த மக்களாகவே பாவித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வசதிகளையும் செய்துகொடுத்தார். அவ்வப்போது, அந்தக் குடியிருப்புகளுக்கு விசிட் அடித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் கொண்டாட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த மக்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் வாய்ப்பு வந்தது. அப்படி நவாநகரில் சிறுவயதைக் கழித்த பலர், போலந்தில் முக்கியமான பொறுப்புக்கு வந்தனர். தி குட் மகாராஜா’ என்று போலந்து மக்கள், தங்கள் வரலாற்றில் அவருக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். கல்வி ரொம்பவே முக்கியமானது என்று உணர்த்திய ஜாம்சாஹேபின் பெயரை போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள முக்கியமான பள்ளி ஒன்றுக்குச் சூட்டியிருப்பதோடு, அந்த நகரில்
The Good Maharaja Square’ என்று பூங்கா ஒன்றும் இருக்கிறது. மேலும், அவரது பெயரில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

யாருமே ஏற்றுக்கொண்டு உதவி செய்யாத நிலையில், நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு, அவர்களுக்குக் கல்வியும் அளித்த ஜாம்சாஹேபின் நினைவை போலந்து மக்கள் இன்றளவும் போற்றி வருகிறார்கள்!
Also Read – பம்பாய் படம் ஏன் கல்ட் க்ளாசிக்.. 4 `நச்’ காரணங்கள்!