பக்தர்கள், தங்கள் விருப்ப தெய்வத்துக்கு வேண்டுதல்கள் நிறைவேறவும் இடர்களில் இருந்து தங்களைக் காக்க வேண்டியும் படையல்களிட்டு வழிபாடுகள் செய்வதுண்டு. தமிழகத்திலும் பல இடங்களில் விநோத வழிபாட்டு முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் எல்லா இனக்குழுக்களிடமும் இந்த வழக்கம் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. தமிழகத்திலும் பக்தர்கள் அலகு குத்துவது, காவடி எடுப்பது, தீச்சட்டி எடுப்பது, பூ மிதித்தல் என பல்வேறு வகையான வழிபாடுகளைச் செய்து வருகிறார்கள்.
ஆனால், சில இடங்களில் வித்தியாசமான முறையில் வழிபாடு செய்வதுண்டு. அப்படி, தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருக்கும் 14 விநோதமான வழிபாட்டு முறைகளைப் பத்தியும் அதை எப்படி செய்றாங்கன்றதைப் பத்தியும்தான் நாம இப்ப பார்க்கப் போறோம்.
கார மிளகாய் அபிஷேகம்
தமிழ்க் கடவுள் முருகனின் பிறந்தநாளை தைப்பூச திருவிழாவாக உலகம் முழுவதும் பக்தியுடன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் காவடி எடுத்து, பாத யாத்திரையாக முருகன் ஆலயங்களுக்குச் சென்று பக்தர்கள் வழிபடுவர். இதேபோல், விழுப்புரம் செஞ்சி அருகே உள்ள தேவதானம்பேட்டை பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோயிலில் அருள்ஜோதி என்பவர் நீண்டகாலமாக பூசாரியாகப் பணியாற்றி வருகிறார். தைப்பூசத்தை ஒட்டி இவரது மார்பு மீது உரக்கல்லை வைத்து அரிசியை இடித்து மாவாக்கப்படும். அதேபோல், காரமிகுந்த காய்ந்த மிளகாயை அரைத்து, பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு இடையே அந்தக் கரைசலை பூசாரி அருள்ஜோதி மீது அபிஷேகம் செய்வார்களாம்.
கொம்பு சுத்தி அய்யனார்
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுக்குப் பக்கத்துல இருக்க கிராமம் அய்யனார்புரம். இங்கு சாலையோரம் அமைந்திருக்கும் அய்யனார் கோயிலை வைத்தே அந்த ஊருக்கும் பெயர் வந்ததாம். இந்தக் கோயிலில் இருக்கும் அய்யனார் கொம்புசுத்தி அய்யனாராக அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், செம்மறி ஆடு, வெள்ளாடு போன்றவைகளை பலியிட்டு காணிக்கையாகப் படைக்கிறார்கள். அத்தோடு, கோயிலுக்கு அருகே இருக்கும் மரத்தில் அவற்றின் கொம்புகளைக் கட்டியும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள். கோயிலுக்குப் பின்புறம் உள்ள தம்புரான் மலை உள்ளிட்ட இரண்டு மலைகளை இரவு நேரத்தில் அய்யனார் சுற்றி வருவதாக மக்கள் நம்புகிறார்கள். அப்படி இரவு நேரத்தில் அவர் மலைகளைச் சுற்றி வரும்போது கையில் கொம்பை எடுத்து ஊதிக்கொண்டே வருவதால், அவருக்கு கொம்பு சுத்தி அய்யனார் என்று பெயர் வந்ததாம். தம்புரான் மலையில் இரவு நேரங்களில் கொம்பூதும் ஒலி எதிரொலிக்கும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
கடல் மாதா பொங்கல்
பொதுவா பொங்கல்னாலே அறுவடைத் திருவிழாவாத்தான் கொண்டாடுவோம். விவசாயிகள் சூரியனுக்கு நன்றி சொல்லும் நிகழ்வா நடக்கும். மீனவர்கள் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோரும் சூரியனுக்குத் தான் நன்றி சொல்லி பொங்கலிடுவார்கள். ஆனா, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இருக்கும் மீனவ கிராமமான மோர்ப்பண்ணையில் வித்தியாசமா கடல் மாதாவுக்குப் பொங்கல் படையலிட்டு கொண்டாடுகிறார்கள்.
பொங்கல் வந்துட்டாலே ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊர் மக்கள்லாம் ஒண்ணு கூடி ஊர்ல இருக்க 7 சிறுமிகளை சப்த கன்னிகளாகத் தேர்வு செய்யுறாங்க. பொங்கல் அன்னிக்கு ஊரின் காவல் தெய்வமான ரணபத்ரகாளி அம்மன் ஆலயம் முன்னாடி, அவங்கள் 7 பேரையும் 7 பானைகள்ல பொங்கலிட வைக்குறாங்க. பொங்கல் வைச்சபிறகு சின்ன படகு ஒண்ணைச் செய்து, அதில் பொங்கலையும் வைத்து, சப்த கன்னியரையும் அழைச்சிக்கிட்டு ஒரு ஊர்வலம் நடத்துறாங்க. பின்னர், கடற்கரையில் பொங்கலைப் படையலிட்டு கடல் மாதாவுக்கு நன்றி சொல்கிறார்கள்.
ஆடிப்படையல் திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தில் இந்து, இஸ்லாமிய சமுதாய மக்கள் இணைந்து கொண்டாடும் ஆடிப்படையல் திருவிழா ரொம்பவே பேமஸானது. சுந்தர்ராஜபுரம் சின்னக் கண்மாய் கரையில் அமைந்துள்ள ஐந்து முனி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவில், கண்மாயைச் சுற்றி இருக்கும் சுந்தரராஜபுரம், வீரசூடாமணிப் பட்டி, கச்சிராயன்பட்டி, பால்குடி மற்றும் கணேசபுரம் ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கொண்டாடி வருகிறார்கள். விழாவின்போது இஸ்லாமியர்கள் வந்து பாத்தியா எனப்படும் துஆ ஓதி கூடியிருக்கும் பக்தர்களுக்கு சர்க்கரை விநியோகம் செய்வது வழக்கம். நேர்த்திக்கடனாக வழங்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டு, பின்னர் வேப்பிலை சேர்த்து மண்பானைகளில் சமைக்கப்படுகிறது. வேப்பிலை சேர்த்து சமைக்கப்படும் கறி, தெய்வீக சக்தியால் அதன் சுவை மாறாது என்கிறார்கள் பக்தர்கள். அதை உண்பதால், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள் ஐந்து கிராம மக்கள்.
கொதிக்கும் எண்ணையில் வெறும் கையால் வடை சுடும் நேர்த்திக் கடன்
திருவண்ணாமலை செங்கத்தை அடுத்த துரைப்பாடியில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த விழாவில் முருகனுக்குப் பல்வேறு நேர்த்திக் கடன்கள் கொடுப்பர். அலங்கார கோலத்தில் முருகன் இருக்கும் இடத்துக்கு அருகே, கொதிக்கும் எண்ணெயில் வெறும் கைகளால் வடை சுடும் நேர்த்திக் கடனை சில பக்தர்கள் செய்வார்கள். கொதிக்கும் எண்ணெயில் வெந்து கொண்டிருக்கும் வடைகளை முருகனை வேண்டிக் கொண்டு கரண்டியில் எடுப்பதுபோல் வெறும் கைகளாலேயே எடுத்து, பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள். இதனால், குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்பதும் தீராதா நோய்கள் தீரும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. அவர்கள் கைகளால் எடுத்த வடைகளை சாமியின் அருகே வைத்து பூஜித்து பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுமாம்.
சேத்தாண்டி விழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி செங்கப்பாடி கிராமத்தில் அருள்புரியும் ஸ்ரீஅழகுவள்ளி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சேத்தாண்டி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழாவின்போது, அழகுவள்ளி அம்மனை வணங்கி பக்தர்கள், உடல் முழுவதும் சேற்றைப் பூசிக் கொண்டு, கைகளில் வேப்பிலையோடு ஆடிப் பாடி தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள். இதனால், நோய் நொடிகளில் இருந்து காத்துக் கொள்ளவும் நீண்ட ஆயுளைப் பெறவும் முடியும் என்று நம்புகிறார்கள் பக்தர்கள்.
முறம், துடப்பத்தால் அடிக்கும் வழிபாடு
ஓசூர் அருகே உள்ள டி.கொத்தபள்ளி கிராமத்தில் முந்நூறு ஆண்டுகள் பழமையான தர்மராஜ சுவாமி கோயில் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 நாட்கள் பல்வேறு பூஜைகளோடு நடக்கும் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தின்போது அருள் வந்து ஆடும் பூசாரி பக்தர்களைத் துடைப்பம் மற்றும் முறத்தால் அடிக்கும் விநோத வழிபாடு இங்கே கடைபிடிக்கப்படுகிறது.
Also Read:
வெள்ளை ஆடை வழிபாடு
கடலூர் விருதாச்சலம் அருகே மணிமுத்தாறு – வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையே அமைந்திருக்கும் கிராமம் மருங்கூர். இந்த கிராமத்தில் வசிக்கும் களிங்ராயர் பங்காளி வகையறாவைச் சேர்ந்தவர்கள் ஆகாச வீரனைக் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். பொதுவாக சிறு தெய்வ வழிபாட்டில் சிலைகள் உள்ளிட்ட அடையாளங்களோடு வழிபாடு நடக்கும். ஆனால், இவர்களில் குலதெய்வமான ஆகாச வீரனுக்கு எவ்வித அடையாளமும் பூமியில் இல்லை என்பதால், ஆகாயத்தில் இருப்பதாக நம்புகிறார்கள். இங்கு நடக்கும் விழாவில் வெள்ளை நிற ஆடை அணிந்து ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு ஆகாச வீரனை வழிபடுகிறார்கள்.
ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு அம்மனை வழிபடுவார்கள். இந்த விழா நடக்கும் ஒருவார காலத்துக்கு அந்தப் பகுதிக்கு வர எந்தப் பெண்களுக்கும் அனுமதி இல்லை. விழாவின்போது 50 செம்மறி ஆடுகள் பலியிடப்பட்டு அம்மனுக்கு படையிலடப்படுகிறது. மேலும், சாதம் உருண்டைகளாகப் பிடிக்கப்பட்டு அம்மனுக்கு படைத்து வழிபடுகிறார்கள். இந்த விழாவில் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொள்வார்களாம்.
சாணியடித் திருவிழா
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே இருக்கும் கும்டாபுரம் கிராமத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகள் பழமையான வீரேஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளியை அடுத்து வரும் மூன்றாவது நாளில் சாணியடித் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவுக்கு முன்பு கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பசுமாட்டுச் சாணம் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவிக்கப்படுகிறது. பின்னர், ஊர்மக்கள் ஒன்றுகூடி சாமி வேடமணிந்தவரை கழுதை மீது ஊர்வலமாகக் கோயிலுக்குக் கொண்டு வருகிறார்கள். கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், சாணத்துக்கும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. அதன்பின்னர், அங்கிருக்கும் சாணத்தை சிறிய உருண்டைகளாகப் பிடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவர் மீது ஒருவர் அடிக்கிறார்கள்.
துடைப்பம் அடி
தேனி மாவட்டம் மறவன்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். திருவிழாவின் கடைசி நாளில் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் தாக்கிக் கொள்ளும் விநோத வழக்கத்தை அந்த ஊர் மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். மாமன்மார்கள், தங்கள் மைத்துனர்களை துடைப்பத்தால் அடித்துக் கொள்கிறார்கள். அடிப்பதற்கு முன்னர் சாக்கடை, சேறு, சகதிகளில் துடைப்பத்தை நனைத்துக் கொண்டு அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
எருமை ரத்தம்
சிவகங்கை மாவட்டம் பையூர் பழமலை நகரில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த மக்கள் ஆண்டுதோறும் காளி, மீனாட்சி, மதுரை வீரன், முத்து மாரியம்மன் போன்ற தெய்வங்களுக்கு ஒரு மாத விரதத்தைக் கடைபிடிக்கிறார்கள். விரதத்தின் முடிவில் எருமை மாடுகள், ஆடுகளைப் பலியிட்டு அதன் ரத்தத்தைக் குடிக்கும் விநோத வழிபாட்டை நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு திருவிழாவின்போது 11 எருமை மாடுகளையும் 30 ஆடுகளையும் பலியிட்டு ரத்தம் குடித்திருக்கிறார்கள். சூரனைக் காளி வதம் செய்யும்போது, கீழே சிந்தும் ரத்தம் மீண்டும் அசுரனாக வடிவெடுக்கும் என்பதால், ரத்தத்தைக் கீழே சிந்தாமல் குடிக்கும் வழக்கத்தைக் கடைபிடிப்பதாகச் சொல்கிறார்கள் பழங்குடி மக்கள்.
பூட்டு வழிபாடு
சேலம் அருகே உள்ள ஆலங்குட்டை முனியப்ப சாமி கோயிலில் பக்தர்கள், பூட்டுப் போட்டு வழிபாடு நடத்துகிறார்கள். கோரிமேடு பகுதியில் இருக்கும் ஸ்ரீபூட்டு முனியப்பன் கோயிலில் பூட்டுப் போட்டு வழிபட்டால், தங்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்தக் கோயிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம், சண்டைகள், தடைகள் என பல்வேறு வேண்டுதல்களோடு வரும் பக்தர்கள் கோயிலில் இருக்கும் வேண்டுதல் பீடத்தில் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு சாவியை எடுத்துக் கொண்டு போய்விடுவார்களாம். தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர், கோயிலுக்கு வந்து சேவல் வாங்கி விடுவது, பொங்கல் வைத்து அன்னதானம் செய்வது உள்ளிட்ட பூஜைகளைச் செய்தபிறகு பூட்டைக் கழற்றி விடுவார்களாம்.
பானை சுற்றும் வழிபாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் இருக்கும் மேடுப்பள்ளி கிராம மக்கள் மழை எப்போது பெய்யும் என்பதைக் கணிக்க விநோத வழிபாடு ஒன்றை நடத்துகிறார்கள். கோயிலை அலங்கரித்து ஊருக்கு நடுவே மணல் கலந்த மாட்டு சாணத்தைக் கொட்டி அதன்மீது மண்பானையை வைத்து வழிபடுகிறார்கள். அந்தப் பானையை சுழற்றிவிட்டு, அது எந்தத் திசையில் நிற்கிறதோ, அந்தத் திசைக்குரிய பருவத்தில் மழை அதிகம் இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
விஷ ஜந்துக்களின் பொம்மைகளை உடைத்து வழிபாடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அய்யா கோயிலில் விஷ ஜந்து பொம்மைகளை உடைத்து வழிபடும் விநோத வழிபாடு நடைபெறுகிறது. கோயிலில் இருக்கும் அய்யன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்களை வழிபட்டு கோயிலின் முன்பகுதியில் கற்பூரம் ஏற்றி தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் உருவ பொம்மைகளை உடைத்து வழிபாடு செய்வார்கள். சித்திரை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுகிறார்கள். இதன்மூலம் விஷ ஜந்துகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.
Also Read – Samiyar: தமிழகத்தின் செம ஜாலி சாமியார்கள்… இந்த 9 பேரைப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?