இரவில் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக வியர்க்கிறதா… அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அந்தக் காரணங்களைப் பற்றிதான் நாம இப்போ பார்க்கப்போறோம்.
இரவில் வியர்த்தல்
வழக்கமாக கோடை காலங்களில் இரவு நேரத்தில் வியர்ப்பது இயல்புதான். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அதிகமாக சிலருக்கு வியர்த்து வழிவதுண்டு. பொதுவாக, பெண்களுக்கே இந்த பிரச்னை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். பெரும்பாலானோருக்கு உடல் வெப்பநிலை மாறுபாடு ஏற்படுவதுண்டு. குறிப்பாக இரவு நேரங்களில் இதை உணர முடியும். இப்படியாக இரவு நேரங்களில் அதிகமாக வியர்ப்பதால் தூக்கத்தையே தொலைக்க வேண்டிய சூழலும் ஏற்படலாம்.
இரவில் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக வியர்ப்பதற்கு மருத்துவ உலகில் சில காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள் மருத்துவர்கள். அப்படியான 5 காரணங்களைத்தான் பார்க்கப்போகிறோம்.
மன அழுத்தம்
இரவில் அதிகமாக வியர்த்து வழிவதற்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிகமான மன அழுத்தத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களின் மூளையும் உடலும் ஓவர் ஆக்டிவ்வாக இருக்கும். இதனால், இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்க வாய்ப்பிருக்கிறது.
ஆல்கஹால்
ஆல்கஹால் மூச்சுவிடும் பாதையில் தொந்தரவை ஏற்படுத்தக் கூடியது. இதனால், உங்களால் இயல்பாக மூச்சுவிட முடியாமல் போகலாம். அதேபோல், ஆல்கஹாலால் இதயத் துடிப்பின் வேகமும் அதிகரிக்கலாம். இதனால், உங்கள் உடலின் வெப்பநிலை அதிகரித்து, இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கலாம்.
மருந்துகள்
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் சிலவற்றால் இரவில் வியர்ப்பது அதிகமாகலாம். மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள், ரெட்ரோ வைரஸ்களுக்கு எதிரான சில மருந்துகள், ஹார்மோன் சிகிச்சை மற்றும் ஹைப்பர் டென்சன் சிகிச்சைகாக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள் கூட வழக்கத்துக்கு மாறான வியர்த்து வழியும் நிலைக்குக் காரணமாக இருக்கலாம்.
உடல்நிலை
உங்களுக்கு ஏற்படும் சில உடல்நலக் குறைபாடுகள் கூட வியர்ப்பதற்குக் காரணமாக இருக்கலாம். முடக்குவாதம், ரத்தப் புற்றுநோய், லிம்போமா, புரோஸ்டேட் புற்றுநோய், இதயநோய், அதிகப்படியான உடல் எடை, காசநோய் உள்ளிட்டவைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவை அதிகமாக வியர்ப்பதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த மாதிரியான சூழல்களில் நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
மாதவிடாய்
மாதவிடாய், நெருங்கும் நாட்களில் உங்களுக்கு அதிகமாக வியர்க்கலாம். இந்த மாதிரியான நேரங்களில் மருத்துவரின் உரிய ஆலோசனையைப் பெற்று, தேவைப்பட்டால் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். சுயமாக மருந்துகளை எடுத்துக்கொண்டு நிலையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டாம்.
Also Read – ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில் இத்தனை வகைகளா… இதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்களா?