இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் தொழிலதிபர்களும் தங்களது நாட்டில் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்து கறுப்புப் பணத்தை பதுக்கி வருகின்றனர். இதனால், சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் பணக்காரர்களின் சொர்க்கபுரியாக விளங்குகின்றன. கடந்த பல ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பண மதிப்பு பல மடங்கு உயர்ந்திருப்பதாக சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் #Swiss, #Rs20700 போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இடம்பிடித்தன.
சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள விபரங்களின் படி, கடந்த ஆண்டில் மட்டும் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் சுமார் 2.55 பில்லியன் சுவிஸ் ஃபிரான்க்ஸ் மதிப்பிலான பணத்தை டெபாசிட் செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 20,700 கோடி டெபாசிட் செய்துள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ம் ஆண்டின் இறுதியில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருந்த பணம் ரூபாய். 6,625 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள 20,700 கோடி ரூபாயில் சுமார் ரூபாய் 4,000 கோடி வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம் எனவும் கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டு சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகமாக சுமார் 6.5 பில்லியன் சுவிஸ் ஃபிரான்கஸ் இருந்ததாகவும் 2020 முடிவில் சுவிஸ் வங்கிகள் அளித்துள்ள தரவுகளின்படி தற்போது இந்தியர்களின் பணம் 2.55 பில்லியன் சுவிஸ் ஃபிரான்க்ஸ் ஆக இருப்பதாக தெரியவந்துள்ளது. 2006 முதல் 2020 ஆண்டுகளுக்கு இடையில் 2011, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளைத் தவிர பெருமாலான ஆண்டுகளில் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் குறைந்து வந்துள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா இடையே இந்தியர்களின் பணம் இருப்பு தரவுகளை வெளியிடுவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டுள்ளது. அஃபிசியலாகவே இவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றால் அன் அஃபிசியலாக அதாவது பினாமிகளின் மூலம் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் என்றும் ட்விட்டர்வாசிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மத்திய அரசு இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்றும் கேள்விகளை பதிவிட்டு வருகின்றனர்.
பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் அதிகம் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். அவர்களின் மதிப்பு சுமார் 377 பில்லியன் சுவிஸ் ஃபிரான்க்ஸ் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அமெரிக்கர்கள் அதிகளவில் பணத்தை சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். இவர்கள் டெபாசிட் செய்துள்ள பணத்தின் மதிப்பு சுமார் 100 பில்லியன் சுவிஸ் ஃபிரான்க்ஸ். இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ், ஃபிரான்ஸ், ஹாங்காங், ஜெர்மனி, , சிங்கப்பூர், லக்சம்பர்க், கேமேன் தீவுகள், பஹாமாஸ் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா இந்த பட்டியலில் 51 வது இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, கனடா, எகிப்து, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவைவிட அதிகம் பணம் டெபாசிட் செய்துள்ள நாடுகளின் பட்டியலில் உள்ளன. தென்னாப்பிரிக்கா, பிரேசில், நியூஸிலாந்து, நார்வே, பாகிஸ்தான், வங்காள தேசம் உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவைவிட குறைவாக பணம் டெபாசிட் செய்துள்ள நாடுகளின் பட்டியலில் உள்ளன.
Also Read : சோனியாவுக்கு ஸ்டாலினின் கிஃப்ட் – `The Journey of a Civilization’ புத்தகத்தின் ஸ்பெஷல் என்ன?