நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் சுற்றித் திரியும் டி23 புலியைப் பிடிக்க வனத்துறையினர் 12-வது நாளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
டி23 புலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக டி23 என்று பெயரிடப்பட்ட ஆண் புலி கால்நடைகள், மனிதர்களைத் தாக்கி வருகிறது. புலியின் தாக்குதலில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்கள் உயிரிழந்திருப்பதாகச் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள். இதனால், டி23 புலியை சுட்டுப்பிடிக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் அப்பகுதியில் நடத்தப்பட்டன. கூடலூர் தேவர்சாலை அருகே உள்ள தனியார் எஸ்டேட்டைச் சேர்ந்த சந்திரன், மசினகுடி குரும்பர்பாடியைச் சேர்ந்த மங்களபசுவன் ஆகியோர் புலி தாக்கி இறந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, அந்தப் புலியைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆட்கொல்லி புலியாகக் கருதப்படும் டி23 புலியை சுட்டுப்பிடிக்க வனத்துறை தலைமைக் காப்பாளர் உத்தரவிட்டிருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
உயர் நீதிமன்ற உத்தரவு

இந்தநிலையில், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடரப்பட்டது. நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா கோத்ரா, இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, அந்தப் புலி ஆட்கொல்லிப் புலியாக இல்லாமலும் இருக்கலாம் என்பதால், அதை உயிருடன் பிடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்தநிலையில், அந்த புலி ஆட்கொல்லி புலி இல்லை என்று தமிழகத் தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் விளக்கமளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,புலி சில இடங்களில் மனிதர்களைக் கொன்றது குறித்து அறிவியல்பூர்வமான விசாரணை நடந்து வருகிறது. ஆட்கொல்லி புலி என இதை எடுத்துக்கொள்ள முடியாது. ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவு மனிதர்களாக இருக்க வேண்டும்’’ என்றார்.
வனத்துறையின் யுக்தி என்ன?

சிங்காரா வனப்பகுதியில் புலியின் காலடித் தடத்தை வனத்துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதையடுத்து, அந்தப் பகுதியில் தமிழக வனத்துறையினரோடு கேரள, கர்நாடக வனத்துறையினரும் புலியைத் தேடும் பணியில் கைகோர்த்திருக்கிறார்கள். புலி, தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதால், அதைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பணியில் இரண்டு கும்கி யானைகளோடு, 3 மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. புலி நடமாடும் பகுதிகளில் 85 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் உடலில் காயம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பிட்ட பகுதியில் 6 மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் பரண் அமைத்துக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. புலியை மயக்க மருந்து செலுத்திப் பிடிக்க அறிவியல்பூர்வமான முயற்சிகளில் வனத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேபோல், கார் ரேஸிங்கின்போது பயன்படுத்தப்படும் 3 டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்புப் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
Also Read – மழைக்காலத்தில் மாடித்தோட்ட பராமரிப்பு – இதெல்லாம் செய்யாதீங்க..!