ஆப்கானிஸ்தானில் கந்தகார் பகுதியில் தாலிபான்கள் மற்றும் அரசுப் படைகள் இடையே நடந்த மோதலில் இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்ட சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக தாலிபான்கள் மற்றும் அரசுப் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதில் தாலிபான்களின் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்னர் பல முக்கிய பகுதிகள் தாலிபான்களின் கட்டுப்பாட்டுகள் வர ஆரம்பித்துள்ளன.
தாலிபான்கள் தற்போது சண்டை நிறுத்தத்துக்கு முன் வந்துள்ளதாகவும் அதற்காக கடுமையான நிபந்தனைகளை அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தங்களது இயக்கத்தின் பெயரை அமெரிக்காவின் தடை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என தாலிபான்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல ஏற்கெனவே சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் 7,000 பேரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் நிபந்தனை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவை மிகப்பெரிய கோரிக்கைகள் என ஆப்கானிஸ்தான் அரசின் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் நதீர் தெரிவித்துள்ளார். எனினும், அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
தாலிபான் கைதிகள் சுமார் 5,000 பேர் கடந்த ஆண்டு இதே போன்ற சூழலில் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக பிபிசி செய்தியாளர் லிஸ் டவ்ஸி, “தாலிபான் கைதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் அரசுக்கு எதிராக மீண்டும் செயல்படத்தொடங்கினர். இதனால், அந்நாட்டில் வன்முறை அதிகரித்தது. நிலைமை இன்னும் மோசமாக ஆனது” என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் என தாலிபான்கள் கூறியிருப்பது ஆப்கானிஸ்தான் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : குஜராத் பழங்குடி பெண்ணுக்கு உறவினர்களால் நேர்ந்த கொடூரம்!