சமீபகாலமாக திரையுலகில் அதிகரித்துவரும் விவாகரத்துகள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு சமீபத்திய தமிழ் சினிமாவில் திடீர் பரபரப்பைக் கிளப்பிய 7 விவாகரத்துகள் பற்றி இங்கேப் பார்க்கப்போகிறோம்.
செல்வராகவன் – சோனியா அகர்வால்
செல்வராகவனின் ‘காதல் கொண்டேன்’ படத்தில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அப்போதே இருவருக்குமிடையே ஏற்பட்ட காதலானது தொடர்ந்து பணிபுரிந்த ‘7ஜி ரெயின்போ காலணி’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் மூலம் இன்னும் நெருக்கமானது. 2006-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், மூன்றே ஆண்டுகளில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் செல்வராகவன், அதன்பிறகு ‘மயக்கம் என்ன’ படத்தில் தன்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியைக் காதலித்து கரம்பிடித்தார். சோனியா அகர்வால் இன்னும் சிங்கிளாகவே இருந்துவருகிறார்.
பிரபுதேவா – ரம்லத்
தன்னுடைய நடன குழுவில் டான்ஸராக இருந்த ரம்லத்தை கடும் எதிர்ப்புகளைத் தாண்டி 1995-ல் திருமணம் செய்துகொண்டார் பிரபுதேவா. அதன்பிறகு நயன்தாராவுடன் பிரபுதேவாவுக்கு ஏற்பட்ட காதலால் குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய புயல் வீசத் தொடங்கியது. அதன் முடிவாக 2011-ல் இந்த தம்பதி விவாகரத்து பெற்றது. அதன்பிறகு நயன்தாராவையும் பிரிந்த பிரபுதேவா, 2020-ல் ஹிமானி எனும் மும்பையைச் சேர்ந்த பிஸியோதெரபிஸ்டை திருமணம் செய்துகொண்டார்.
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
‘காதல் கொண்டேன்’ பட சமயத்தில் தனுஷுடன் அறிமுகமாகி, பின் காதலிக்கத் தொடங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் பரஸ்பரம் விருப்பம் தெரிவிக்க, 2004 ஆம் ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது இவர்களின் திருமணம். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள். இந்நிலையில் கடந்த மாதம் இருவரும் தங்களது 18 வருட திருமண உறவிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து ஷாக் கொடுத்தார்கள்.
ஏ.எல்.விஜய் – அமலா பால்
இயக்குநர் ஏஎல்.விஜய், 2011-ஆம் ஆண்டு விக்ரம் அனுஷ்கா நடிப்பில் இயக்கிய படம் ‘தெய்வதிருமகள்’. அந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்தவர் அமலா பால். அப்போது விஜய்க்கும் அமலா பாலுக்குமிடையே ஏற்பட்ட காதல் 2014-ஆம் ஆண்டில் திருமணத்தில் முடிந்தது. ஆனால் அடுத்த இரண்டே வருடங்களில் அந்த திருமண உறவு முறிவுக்கு வந்தது. இதில் ஏ.எல்.விஜய், அதன்பிறகு ஐஸ்வர்யா எனும் மருத்துவரை திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்திவரும் நிலையில் அமலா பால் சிங்கிளாக இருந்துவருகிறார்.
சமந்தா – நாக சைதன்யா
சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படமானது ஒரே நேரத்தில் தெலுங்கிலும் உருவானது. தெலுங்கில் நாக சைதன்யாவும் சமந்தாவும்தான் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட ஈர்ப்பானது பின்னாளில் காதலாக மாறியது. 2017-ஆம் ஆண்டு மிகக் கோலாகலமாகத் தொடங்கிய இவர்களின் திருமண உறவு கடந்த வருடம் முடிவுக்கு வந்தது.
அர்விந்த்சாமி – காயத்ரி ராமமூர்த்தி
1994-ல் காயத்ரி ராமமூர்த்தி என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்ட அர்விந்த்சாமிக்கு அடுத்த சில வருடங்களிலேயே திருமண உறவு கசக்கத் தொடங்கியது. 2003-லிருந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் தனித்தனியே பிரிந்து வாழ்ந்த இந்த ஜோடி, 2010-ல் முறைப்படி விவாகரத்து பெற்றது. அர்விந்த்சாமி அதன்பிறகு 2012-ல் அபர்ணா முகர்ஜி எனும் பெண்ணை திருமணம் செய்துகொண்டு தற்போது மகிழ்ச்சிகரமாக குடும்பம் நடத்திவருகிறார்.
யுவன் சங்கர் ராஜா
2002-ஆ,ம் ஆண்டு யுவனின் ரசிகையாக அவரது வாழ்வில் நுழைந்தவர் சுஜாயா. லண்டன் வாழ் பாடகியான இவரை, 2003-ல் லண்டனில் வைத்து யாருக்கும் தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்டார் யுவன். அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சம்பிராதயப்படி அவரை திருமணம் செய்துகொண்ட யுவன் அடுத்த இரண்டே வருடங்களில் அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு 2011-ஆம் ஆண்டு ஷில்பா எனும் ஆஸ்திரேலியா வாழ் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட யுவனுக்கு ஓரிரு ஆண்டுகளிலேயே அந்த உறவும் கசந்தது. அதன்பிறகு 2014-ல் இஸ்லாம் மதத்தைத் தழுவிய யுவன், ஜஃப்ரூன் நிஷா எனும் பெண்ணை மணந்துகொண்டு தற்போது மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திவருகிறார். நிஷாதான் தற்போது யுவனுக்கு கிட்டத்தட்ட மேனேஜர் மாதிரி. அந்த அளவுக்கு தன்னுடைய கரியர் விஷயத்திலும் முடிவெடுக்கும் உரிமையைத் அவருக்குத் தந்திருக்கிறார் யுவன்.
Also Read – `ஒரே வீட்ல மல்டிபிள் ஹீரோஸ்’ – தென்னிந்திய சினிமாவின் அப்பா – மகன் ஹீரோக்கள்!