2014- ஆம் ஆண்டு `வேலையில்லா பட்டதாரி’ படத்தின் ஆடியோ அப்டேட்டாக ‘THE COMBO THAT TOOK THE WORLD BY STORM IS BACK’ என்ற கேப்ஷனுடன் தனுஷுக்கு நிகராக அனிருத் படத்தையும் வைத்து போஸ்டர் ஒன்று வெளியிட்டிருந்தது அப்படக்குழு. அதற்கு காரணம் ‘3’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘வொய் திஸ் கொலவெறி’ பாடல்தான் என்பது பிரதமர் அலுவலகம்வரை அறிந்த செய்தி.
தொடர்ந்து ‘மாரி’, ‘தங்கமகன்’ என தொடர் மியூசிக்கல் ஹிட் காம்போவாக இருந்துவந்த, ரசிகர்களால் செல்லமாக ‘DnA’ என அழைக்கப்பட்ட தனுஷ் – அனிருத் கூட்டணி அடுத்த சில வருடங்களில் உருவான ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்திற்கு முன்னதாகவே பிரிந்துபோனதுதான் பெரும் சோகம். தனுஷூக்கும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் சோலோ ஹீரோவான சிவகார்த்திகேயனுக்குமிடையே லேசான பனிப்போர் ஏற்பட்டபோது அனிருத், சிவகார்த்திகேயன் பக்கம் நின்றிருக்கிறார். தன்னால் வெளிச்சம் பெற்ற இருவரும் கை கோர்த்துக்கொண்டதுதான் தனுஷின் கோபமுகத்துக்கு காரணம் என சொல்லப்பட்டது. மேலும் தனுஷ் மனைவியான ஐஸ்வர்யாவின் சொந்த தாய்மாமன் மகன் அனிருத் என்பதால் இந்த புகைச்சல் குடும்பத்துக்குள்ளும் நீடித்தது.
இதன் விளைவாக தனுஷ், அனிருத்தை தவிர்த்துவிட்டு அவருக்குப் பதிலாக ஒரே நேரத்தில் மூன்று இசையமைப்பாளர்களுடன் கை கோர்த்தார். ‘கொடி’ & ‘வடசென்னை’ படங்களுக்கு சந்தோஷ் நாராயணனையும் ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கு யுவன் சங்கர் ராஜாவையும் ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்துக்கும் தனுஷ் தானே இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’ படத்துக்கும் ஷான் ரோல்டனையும் ஒப்பந்தம் செய்தார். என்னதான் இந்த கூட்டணிகளால் ‘ரவுடி பேபி’, ‘என்னடி மாயாவி’ என ஒரு சில டிரெண்டிங் ஹிட் பாடல்களைக் கொடுக்கமுடிந்தாலும் தனுஷ்-அனிருத் கூட்டணியில் இருந்த வசீகரத்தில் ஓரிழை குறையத்தான் செய்தது.
இந்த ‘DnA’ காம்போ மீண்டும் இணைவது என்பது இனி சாத்தியமில்லையோ என ரசிகர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது மீண்டும் மறைமுக இணைய சந்தர்ப்பம் ஒரு அமைந்தது. அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது கார்த்திக் சுப்புராஜ். ரஜினியை வைத்து அவர் இயக்கிய ‘பேட்ட’ படத்துக்கு அனிருத்தான் இசை. அதேசமயம் தனது அடுத்த பட ஹீரோவான தனுஷ், இந்தப் படத்தில் ஒரு பாடல் எழுதவேண்டும் என விருப்பப்பட்டார் கார்த்திக் சுப்புராஜ். தனுஷூக்கும் ஒரு ரஜினி பட பாடல் எழுதவேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்துவரவே ‘இளமை திரும்புதே’ பாடலில் கை கோர்த்தது இந்தக் கூட்டணி. அந்த ஹிட் பாடலை அனிருத்தேப் பாடினார் என்பது இன்னும் ஸ்பெஷல்.
சரி, மறைமுகமாக இந்தக் கூட்டணி இணைந்துவிட்டது, பிணக்கு எல்லாம் தீர்ந்துவிட்டதுபோல இனி தனுஷின் அடுத்தடுத்த படங்களில் அனிருத் நேரடியாக இசையமைத்துவிடுவார் என எதிர்பார்க்கத் தொடங்கினார்கள் ரசிகர்கள். ஆனால், அதன்பிறகு வெளியான தனுஷின் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘அசுரன்’, ‘பட்டாஸ்’ போன்ற படங்களில் அனிருத் இல்லை.
இந்நிலையில் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் மூலமாகவே இந்தக் கூட்டணி மறைமுகமாக இணைந்திருக்கிறது. அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்து நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் வரும் ‘புஜ்ஜி’ பாடலை அனிருத் பாடியிருக்கிறார். சென்றமுறை ‘பேட்ட’ படத்தில் தனுஷ் எழுதி அனிருத் பாடியிருக்க, இந்தமுறை அனிருத் பாடிய இந்தப் பாடலுக்கு தனுஷ் ஆடியிருக்கிறார்.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ‘D44’ படத்திற்கு அனிருத்தான் இசை என தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் யாரென இன்னும் முடிவாகாத நிலையில் அந்தப் படத்தை ‘யாரடி நீ மோகினி’ படத்தின் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இணையும் இந்தக் கூட்டணி வெறும் பிஸினெஸ் காரணங்களுக்காக மட்டுமே இல்லாமல் நட்பு ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் இணைந்து செயல்பட வேண்டுமென அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது
Also Read : தேனீக்கள் முதல் யானை வரை… இசையில் மயங்கிய உயிரினங்கள்!