தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க 9 பெண் கதாபாத்திரங்கள்!

எங்கேயும் எப்போதும் – மணிமேகலை

மணிமேகலை
மணிமேகலை

சைட் அடிப்பவனை வீட்டுக்கே தேடிப் போய் பார்த்து அனலைஸ் பண்ணுவதில் தொடங்கி அப்பாவைப் போய் பாரு, மாமாவைப் போய் பாரு ‘என்னை கல்யாணம் பண்றதுனா இதெல்லாம் சமாளிக்கணும்’ என்று காதலனை அதட்டுவது. அவனை கன்வின்ஸ் பண்ணி அல்லது மிரட்டி உடல் உறுப்பு தானம் செய்ய வைப்பது, கடைசியில் அவன் இறந்து கலங்கும்போதும் ‘அவன் ஆர்கன் டொனேசன் பண்ணியிருக்கான்’ என்று சமூக அக்கறையுடன் பேசுவது என தமிழ் சினிமா பெரிதும் கொண்டாடாத சிங்கப்பெண் எங்கேயும் எப்போதும் மணிமேகலை.

மயக்கம் என்ன – யாமினி

யாமினி
யாமினி

பொதுவா ஆண்கள் உடையாம, உணர்ச்சிகளைக் காட்டாம, சோகத்தை தனக்குள்ள புதைச்சிகிட்டு வாழ்க்கையோட போக்குல வாழ்ந்துட்டிருப்பாங்க. ஆனா, உடைச்சுப் போடுற ஒரு சம்பவம் நடந்தா, மொத்தமா உடைஞ்சு போய் உலகம் முடிஞ்சதுன்னு உட்கார்ந்துடுவாங்க. ஆனா, பெண்கள் தொட்டதுக்கெல்லாம் அழுது, மிகை உணர்ச்சியோட இருப்பாங்க. ஆனா, அவங்க காலுக்குக் கீழ இருக்க உலகம் நழுவிப் போனாலுமே, சமாளிக்குற திறன் ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகம்.
மனம் உடைந்து, வாழ்க்கையை வெறுத்துப் போன ஒருவனுக்கு தேவை எல்லாம், “அடேய்! நான் இருக்கேன், அமைதியா இரு” என ஆறுதல் சொல்லும் ஒரு குரல்தான். அந்தக் குரல் உலகத்துக்கே கேக்குற மாதிரி ஓங்கி சொல்லனும்னு அவசியம் இல்லை. காதோரமா சொன்ன போதும். ‘மயக்கம் என்ன?’ யாமினியோட கதாபாத்திரம் அந்த மாதிரி நம்ம காதோரம் பொறுமையா ஆறுதல் சொன்ன ஒரு குரல் தான்.

சம்சாரம் அது மின்சாரம் – உமா

 உமா
உமா

‘கோதாவரி வீட்டுக்கு நடுவுல கோட்டைக் கிழிடி’ என்று வீட்டையே ரெண்டாக்கும் மாமனார். அவர் சொல்கேட்டு படி தாண்டாத மாமியார். பால் பவுடருக்கெல்லாம் கணக்கு போடும் கணவர். அப்பா சொன்னதற்காக பிறந்த குழந்தையைக் கூட நிராகரிக்கும் கணவரின் குடும்பம். இத்தனை பேரையும் சமாளித்து உடைந்த குடும்பத்தை ஒட்டவைத்தது உமாவின் சமார்த்தியத்துக்கு சாட்சி என்றால் உடைஞ்சது உடைஞ்சதுதான் இனி விலகியே இருப்போம் என்று உமா எடுக்கும் முடிவு சுயமரியாதைக்கான சாட்சி.

அறம் – மதிவதனி

மதிவதனி
மதிவதனி

800 கோடியில் ராக்கெட் விடும் நாட்டில் ஆழ்துணைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க வெறும் கயிறுதான் இருக்கிறது என்ற கையறு நிலை. அறிவியல் வளர்ச்சியை நம்பி பயனில்லை என்ற கட்டத்தில் எமோசனலாக முடிவெடுத்து மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து ஒரு உயிரைக் காப்பாற்றிய கலெக்டர் அறம் மதிவதனி. “மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கணும். ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு அதுல மக்களைத் திணிக்கக் கூடாது!” என்று சீறும் அதிகாரி பெண்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமான இன்ஸ்பிரேஷன்.

அவள் ஒரு தொடர்கதை – கவிதா

கவிதா
கவிதா

பொறுப்பற்ற குடிகார அண்ணன், அக்காவுக்கு முன்னரே திருமணம் முடிந்து கைம்பெண்ணான தங்கை, மாற்றுத் திறனாளி தம்பி, வீட்டை விட்டு வெளியேறிய தந்தையை நினைத்துக் கொண்டிருக்கும் தாய், திருமண வயதில் இன்னொரு தங்கை – இப்படியான குடும்பத்தை மொத்தமாக இழுத்துப் பிடிக்கும் சரடாக கவிதா கேரக்டர். வீட்டில் அமைதியானவள், சாலையில் செல்கையில் திமிர் பிடித்தவள், 23பி பஸ்ஸில் அதிகம் கோபப்படுபவள், ஆபிஸில் ஈகோ பிடித்தவர் என கவிதாவாக பல முகங்கள் காட்டியிருப்பார் சுஜாதா. தங்கைக்காக காதலனை விட்டுக்கொடுப்பது, அலுவலக முதலாளியின் திருமண புரபோசலுக்கு ஓகே சொல்லி, பின்னர் தங்கைக்காக விட்டுக் கொடுத்துவிட்டு தொடர்கதையாக உழைக்கத் தொடங்குவது என அதன்பிறகான பெண் உரிமை பேசும் படங்களுக்கு கவிதா கேரக்டர்தான் மிகப்பெரிய ரெஃபரென்ஸ்.

அருவி – அருவி

அருவி
அருவி

தமிழ் சினிமாவின் பெருமைமிக்க அடையாளம் இந்த அருவி. வீட்டின் தலைமகளாகக் கொண்டாடப்படும் அருவியை எதிர்பாரா சூழலில் எய்ட்ஸ் நோய் தாக்குகிறது. வீட்டுக்குள் இளவரசியாக வலம் வரும் அருவி, பதின்ம வயதில் இந்த சமூகத்துக்குள் வீசப்படுகிறாள். உதவிக்கு வர ஆள் இருந்தும், அவர்கள் எல்லாரும் எதிர்பார்ப்பது ஒன்றைத்தான். காதலுக்கு ஏங்கும் அருவி சந்திப்பதெல்லாம் அதற்கு நேர்மாறான உணர்வைத்தான். ஒரு கட்டத்தில் துப்பாக்கியேந்தி அவள் கேட்கும் கேள்விகள் எல்லாமே சமூகத்துக்கான சாட்டையடி. பொதுவா நாம அழும்போது, அதுக்கான காரணம் என்னானு நமக்குத் தெரியும். ஆனா, இந்தப் படம் பார்த்தவங்க பல பேரு தங்களை அறியாமலேயே அழுத புதிய அனுபவத்தைக் கொடுத்திருப்பாள் அருவி.

தரமணி – அல்தியா ஜோசப்

அல்தியா ஜோசப்
அல்தியா ஜோசப்

போல்டான இன்டிபென்டன்ட் மதர் அல்தியா ஜோசப். இந்த சொசைட்டில இருக்க ஸ்டீரியோடைப்களை எல்லாம் உடைத்துப் போட்டது அந்த கேரக்டர். படத்தின் ஒரு சீனில் கணவரிடம் இருந்து பிரிந்து வந்திருக்கும் அல்தியாவிடம் அலுவலக நண்பர், பார்டிக்கு அழைப்பார். அதை அல்தியா மறுத்ததும், `பிரேக் அப்னா ஆண்கள் மட்டும்தான் டிரிங்ஸ் சாப்பிடணுமா?’ என்று இயல்பாக எழுப்பும் கேள்வியை மென்மையாக சிரித்துக் கடந்துபோவார் அல்தியா. பெண்கள் என்றாலே ஆண்களைச் சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற நிலை மாறி அவர்கள், தங்கள் தேவைகளைத் தாங்களாகவே பூர்த்தி செய்துகொள்ளும் நிலை வந்திருக்கிறது. இது ஆண்களின் ஈகோவைச் சீண்டியிருக்கிறது என்ற ஆணாதிக்க சமூகத்தின் நிலையைத் தோலுரித்திருக்கும் அல்தியா ஜோசப் கேரக்டர். தனது கணவர் ஹோமோ செக்‌ஷுவல் என்பது தெரிந்ததும் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன். யாரென்றே தெரியாத பிரபுநாத்துடனான உரையாடல் என அல்தியாவின் கேரக்டரைஷேசனின் அடர்த்தி அலாதியானது.

மொழி – அர்ச்சனா

அர்ச்சனா
அர்ச்சனா

`மொழி’ அர்ச்சனாவை ஃபீல் குட் சினிமாவை ரசிக்கும் எந்தவொரு தமிழ் சினிமா ரசிகனாலும் அவ்வளவு சீக்கிரம் கடந்து போக முடியாது. உணர்வுகளை நாம் நினைப்பதை அடுத்தவர்களுக்குக் கடத்தும் முக்கியமான ஆயுதமான மொழியின் துணை அர்ச்சனாவுக்கு இல்லையென்றாலும், சின்னச் சின்ன முகபாவனைகளால் தான் நினைக்கும் விஷயத்தின் அடர்த்தியை எதிரில் இருப்பவர்களோட ஆடியன்ஸும் கடத்திய அர்ச்சனா கேரக்டர் நிகழ்த்திய மேஜிக்கை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. நம்பிக்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் இடத்தில் இருந்து காலை இளம் கதிரவனின் முதல் ஒளிக்கீற்று மெல்ல ஒளிபரப்பி படர்வதைப் போல, புது நம்பிக்கை என்ற இடத்தை நோக்கி அர்ச்சனா நகர்ந்து வரும் பயணம் அவ்வளவு அழகானது.

ஆரண்யகாண்டம் – சுப்பு

சுப்பு
சுப்பு

கடந்த நூறு ஆண்டுகால தமிழ் சினிமாக்களின் கதாநாயக பிம்பங்கள் அத்தனையையும் சேர்த்து ஒரே அடியில் ஒரே வசனத்தில் காலி செய்துவிட்டுப் போன கலகக்காரி ஆரண்யகாண்டம் ‘சுப்பு’. சிங்கமும் புலியும் யானைகளும் உலவும் காட்டில் ஒரு ஒற்றைப் பட்டாம்பூச்சியாக வலம் வந்த சுப்பு, பட்டாம்பூச்சியைப் போல பறந்தாலும் குளவியைப் போல கொட்டுவாள்… சிங்கம் பெருமாளைப் பார்த்து “உன்னால முடியலைனா என்னை ஏன் அடிக்குற..?” என்ற வசனமும் “இந்த உலகத்துல எல்லா ஆம்பளயும் சப்ப தான்… சப்பயும் ஒரு ஆம்பளதான்…” என்ற வசனத்தையும் உச்சரித்த சுப்பு கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் ரொம்பவே புதுசு.

Also Read – `நாடக என்ட்ரி முதல் வில்லன் வரை’ – தம்பி ராமையா எனும் பன்முகக் கலைஞன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top