இயக்குநர் பாலா திரும்பி வரணும்… பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்!

பிரதி எடுக்கப்படமுடியாத கலைஞன் இயக்குநர் பாலான்னு வைரமுத்து ஒரு மேடையில் சொல்வார். நகைச்சுவை காட்சிகளை கற்பனை செய்வதிலும் திரையில் கொண்டுவருவதிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் பாலா. ஆனா, கடைசியா அவரோட படங்கள்ல என்ன நடந்திட்டுருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். முழுசா எடுத்த படத்தை ரிலீஸ் பண்ண முடியாம போறது, பாதி படத்தோட நடிகர்கள் கழண்டுக்குறதுன்னு இறங்குமுகத்துல இருக்கு. வணங்கானுக்கு முன்னாடியும் இப்படி ஆகியிருக்கு, ஆனா வணங்கான்தான் ஃபர்ஸ்ட் டைம். என்ன பிரச்னை இயக்குநர் பாலாவிடம்?

Director Bala
Director Bala

வர்மாவுக்கு போவோம். பாலா எடுத்த படங்களிலேயே பிரச்னையின்று ஸ்மூத்தாக ஷூட்டிங் முடிந்த படம் என்றால் அது வர்மாதான். ஆஹா, கம்ப்ளெய்ண்ட்டே இல்லாம படத்தை முடிச்சு குடுத்துட்டாரே, பரவால்லயே என்று பார்த்தால், அங்குதான் ட்விஸ்ட் வைத்திருந்தார். ஏன்டா, 1999ல நான் எடுத்த சேதுவை 20 வருஷம் கழிச்சி பட்டி டிங்கரிங் பார்த்து அர்ஜுன் ரெட்டியாக்கி, அதை என்னைய வச்சே ரீமேக் பண்ண வைக்கிறீங்களா, உங்களுக்கு எவ்வளவு சூனாகொனா இருக்கும்னு கேக்காம கேட்டுட்டார் பாலா. ரீமேக் பண்றதுக்கு நான் எதுக்குன்னு அவர்பாட்டுக்கு வேற ஒரு படத்தை எடுத்து வச்சுட்டார். படத்தை பார்த்த விக்ரம், இது நம்ம வர்மா இல்ல வேற வர்மான்னு டீசண்டா ஒதுங்கிக்கொண்டார். வர்மா, ஆதித்ய வர்மாவாக பரிணாம வளர்ச்சி கண்டது. ஒரு படத்துக்கு செக்ண்ட் பார்ட் எடுக்குறதை கேள்விபட்டிருப்போம். ஆனா ஒரே படம் ரெண்டு பார்ட்டா வந்த கொடுமை வர்மாவுக்குத்தான்.

ஒரு படத்தோட இயக்குநரும் தயாரிப்பாளரும் அடுத்து இன்னொரு படம் சேர்ந்து பண்ணாங்களா இல்லையாங்கிறதை வச்சி, முந்தின படத்தோட ரிசல்ட்டை தெரிஞ்சிக்கலாம். முந்தின படம் பெரிய வெற்றிப்படமாக்கூட இல்லாம போயிருந்திர்க்கலாம். ஆனா, இயக்குநர்மேல இருந்த நம்பிக்கையால அடுத்த படத்தையும் தொடங்கி இருப்பாங்க. இந்த விஷயத்தில் பாலாவுக்கு எல்லாமே நேரெதிர். அவரோட முந்தின படத்தின் தயாரிப்பாளர்கள் எவரும் அவரோட அடுத்தப் படத்தை தயாரிக்கலங்கிறதுகூட பெரிய விஷயமில்லை. ஆனா அவங்க அதுக்கப்புறம் படம் தயாரிக்கவே இல்லங்கிறதுல இருந்து பாலாவோட கரியர் எங்க அடிவாங்குச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்.

படம் தொடங்குறதுன்னு முடிவாகி பாதி கிணறு தாண்டுனவுடனே யாராவது இந்த பிராஜெக்ட்லேர்ந்து நம்மள காப்பாத்திட மாட்டாங்களான்னு பாலாவின் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நினைச்சதுண்டு. சேது தயாரிப்பாளர் கந்தசாமி நொந்தசாமியானது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அடுத்த படமான நந்தாவிலிருந்து அஜீத் வெளியேற, அஜீத் வெளியேறியதால் தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ் வெளியேற, 4 NRI தயாரிப்பாளர்கள் தலையில் விழுந்தது. இந்த இடத்துல உங்களுக்கு சொல்லவேண்டிய இன்னொரு விஷயம், ராஜ்கிரண் கேரக்டரை பண்ண வேண்டியது சிவாஜியாம். பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி பட தயாரிப்பாளர்கள் எல்லாருக்கும் இதே நிலைதான்.

ஏன் இப்புடி நடக்குத்துன்னு பார்த்தா, கதைன்னு ஒரு ஒன்லைன் சொல்லி ஓகே வாங்கிடுவார் பாலா. திரைக்கதைன்னு ஒரு வஸ்து ரெடி ஷூட்டிங் அனுப்பி வைக்கிறதுக்குள்ள தயாரிப்பாளருக்கு கண்ணுல தண்ணி எட்டிப் பார்த்திருக்கும். இதுக்கு நடுவுல ஷூட்டிங்ஸ்பாட்ல நடிகர்களுக்கு நேரும் டார்ச்சர் எல்லாம் கருட புராணத்துல கூட இருக்காது. தனக்கு திருப்தி வர்றவரைக்கும் ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கி எடுக்கணும்னு பாலா நினைப்பதுண்டு. பாலுமகேந்திரா பள்ளியில படிச்சவராச்சே. ஆனா அதற்கான விலை அதிகமாகிடும். அவ்வளவும் பண்ணினதுக்கு அப்புறம் படமா பாக்கும்போது, இந்த தாமதம் தேவைன்னு புரியும். ஆனா, கடைசியா வந்த படங்களுக்கு ரிசல்ட் எதிர்பார்த்த அளவு இல்ல.

Bala - Suriya
Bala – Suriya

வணங்கான் ஷூட்டிங் அப்போ, சூர்யாவை தூரத்துல இருந்து ஓடிவாங்கன்னு சொல்லி இருக்கார். சூர்யாவும் ஓடிவந்திருக்கார். எதோ சரியா வரல. திரும்ப ஓடுங்க சூர்யான்னு சொல்லிருக்கார். திரும்பவும் ஓடிருக்கார். திரும்ப திரும்ப ஓட சொல்லி இருக்கார். திரும்ப திரும்ப ஓடிருக்கார். கடைசியா ஷாட் ஓகே வெரிகுட் திரும்ப வாங்க சூர்யான்னு பாலா மைக்ல சொல்ல, சூர்யா வரல. ஓடினார் ஓடினார் ஷூட்டிங் ஸ்பாட்டைவிட்டே ஓடினார் சூர்யான்னு அப்புறம்தான் தெரிஞ்சுருக்கு, வழக்கம்போல இந்த பிரிவு குறித்தும் விளக்கம் அளித்து பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கார் பாலா. சூர்யா தரப்பும் மண்ணு ஒட்டலேன்னு அறிக்கைவிட்டுருக்காங்க. அதுக்குப் பின்னாடி எத்தனை சங்கடங்கள் இருந்திருக்கும்.

பாலாவோட இருண்மையான பக்கங்களை அடுக்கிக்கிட்டுப் போறதால அவர்கிட்ட கிராஃப்ட் இல்லன்னோ சொல்லிடமுடியாது.. சேதுங்கற ஒரு படம் இல்லன்னா விக்ரம் இன்னிக்கி 400 கோடி பொன்னியின் செல்வனில் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்க முடியாது. சேது படத்துல நடிக்கவிருந்து வெளியேறிய நடிகர்கள் இன்னிக்கி எங்க இருக்காங்க, அதேநேரம் விக்ரம் எங்க இருக்காருங்கிறதை வச்சே பாலாவின் உயரத்தை அளக்கலாம். நந்தா, பிதாகமகன் படங்கள் பண்ணலேன்னாலும் சூர்யா இன்னிக்கி ஃபீல்ட்ல இருந்திருப்பார், ஆனா இவ்வளவு பெரிய உயரத்துல இல்ல. பாலா ஏணியா இருந்து மேல ஏத்திவிட்டவங்க இன்னிக்கி ரொம்ப உயரத்துல இருக்காங்க. நன்றிக்காக அவங்க பாலாவோட சேரணும்னு நினைச்சு வர்றாங்க. ஆனால் 15-20 வருஷத்துக்கு முந்தி பாத்த அதே அப்ரெண்டிசுங்களாவே பாலா அவங்களை பாக்குறதுதான் பிரச்னை.

Also Read – சாதி சாட்சியாக ஒரு மரணம்… ‘விட்னஸ்’ படம் எப்படி?!

கொரியன் பட டிவிடிக்களை எதிர்பார்க்காத இயக்குநர்களை தமிழ் சினிமாவில் விரல் விட்டு இல்ல, கண்ணு காதுவிட்டு எண்ணிடலாம். பாலா அதில் முக்கியமானவர். முதல் படத்துலயே தேசிய விருது வாங்குறதெல்லாம் வேற லெவல் இல்லையா? இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா, இது என்னோட கதைன்னு பாலாவோட எந்த கதைக்கும் யாரும் உரிமை கொண்டாடினது இல்ல. சொல்லப்படாத மாந்தர்களா பார்த்து பார்த்து கதை உருவாக்குறதும், கதையோடு சேர்ந்து பயணிக்கிற காமெடியும் பண்ண பாலாவைவிட்டா இதுவரைக்கும் வேற ஆள் இல்ல. பாலா திரும்பி வரணும். பழைய தேசிய விருது பாலாவா திரும்பி வரணும்.

2 thoughts on “இயக்குநர் பாலா திரும்பி வரணும்… பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்!”

  1. Hi! Do you know if they make any plugins to assist
    with Search Engine Optimization? I’m trying to get my website to rank for some targeted keywords but I’m not seeing
    very good gains. If you know of any please share. Many thanks!

    You can read similar text here: Warm blankets

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top