தமிழ்நாடு அணி

SMAT2021: Yellove ராசி; ஷாருக்கான் மேஜிக் – சையது முஷ்டாக் அலி கோப்பையைத் தக்கவைத்த தமிழ்நாடு!

சையது முஷ்டாக் அலி டி20 கோப்பையின் பரபரப்பான இறுதிப் போட்டியில் கர்நாடகாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.

சையது முஷ்டாக் அலி கோப்பை

உள்ளூர் அணிகளுக்கான சையது முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான தொடர் நாடு முழுவதும் நடைபெற்றது. அரையிறுதியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதிய இறுதிப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் சங்கர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கர்நாடக அணிக்கு தமிழக ஸ்பின்னர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

தமிழ்நாடு அணி
தமிழ்நாடு அணி

இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கர்நாடக வீரர் ரோஹன் கடமின் விக்கெட்டை இரண்டாவது ஓவரிலேயே வீழ்த்தினார் தமிழக வீரர் சாய் கிஷோர். ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் கருண் நாயரும், பவர் பிளேவின் கடைசி ஓவரின் முதல் பந்தில் கேப்டன் மணீஷ் பாண்டேவும் ஆட்டமிழந்தனர். இதனால், பவர் பிளே ஓவர்கள் முடியும் முன்னரே இன்ஃபார்ம் பேட்ஸ்மேன்கள் மூன்று பேரின் விக்கெட்டுகளை இழந்து 34/3 என்ற ஸ்கோருடன் கர்நாடகா தடுமாறியது. நான்காவது விக்கெட்டுக்குக் கைகோர்த்த ஷரத் – அபினவ் மனோகர் ஜோடி அணியை சரிவிலிருந்து ஓரளவு மீட்டது. இந்த ஜோடி 52 ரன்கள் சேர்த்தபோது, ஷரத் விக்கெட்டை சாய் கிஷோர் வீழ்த்தினார். அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த அபினவ் மனோகர், சந்தீப் வாரியர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். 15 ஓவர்கள் முடிவில் 96/4 என்ற ஸ்கோருடன் கர்நாடகா இருந்தது. கடைசி ஓவர்களில் பிரவீண் துபே, ஜெகதீஷ் சுஜித் ஜோடி அதிரடி காட்ட கர்நாடகா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மிடில் ஆர்டர் சோகம்

152 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய தமிழ்நாடு அணி நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கியது. பவர் பிளே ஓவர்கள் முடிவில் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் விக்கெட்டை இழந்து 44 ரன்கள் சேர்ந்திருந்தது. எட்டாவது ஓவரின் நான்காவது பந்தில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். இதையடுத்து விக்கெட் கீப்பர் ஜெகதீசன் – கேப்டன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவே, ரன் ரேட் குறைந்தது. 45 பந்துகளை சந்தித்த இந்த ஜோடி 44 ரன்களை மட்டுமே சேர்த்தது. மிடில் ஓவர்களில் ரன் குவிக்கத் தவறியதால், கடைசி 5 ஓவர்களில் தமிழகத்தின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரின் முதல் பந்தில் விஜய் சங்கர், அடுத்த பந்தில் ஜெகதீசன் வெளியேறினர். ஓவருக்கு 12 ரன்களுக்கு மேல் ரன் ரேட் தேவை என்ற நிலையில் களமிறங்கிய ஷாருக்கான், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

அசத்தல் ஷாருக்கான்

கடைசி 4 ஓவர்களில் 55 ரன்கள் தேவை என்ற சூழலில் தர்ஷன் வீசிய 17-வது ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 19 ரன்கள் கிடைத்தது. அடுத்ததாக 18-வது ஓவரை வீசிய பிரதீக் ஜெயின் சஞ்சய் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியதோடு 6 ரன்கள் மட்டுமே கொடுத்து நெருக்கடி கொடுத்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் என்ற சூழலில், 19-வது ஓவரில் ஷாருக்கானின் ஒரு சிக்ஸர், பைஸ் பவுண்டரி உள்பட 14 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் என்ற பரபரப்பான கட்டத்தை போட்டி எட்டியது. முதல் பந்தில் சாய் கிஷோர் பவுண்டரி அடிக்க, அடுத்த 4 பந்துகளில் 2 வொய்டு உள்பட 7 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், பிரதீக் ஜெயின் வீசிய கடைசிப் பந்தை லெக் சைடில் சிக்ஸருக்கு விரட்டி வெற்றி தேடித்தந்தார் ஷாருக்கான்.

இதன்மூலம், 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தமிழ்நாடு அணி சையது முஷ்டாக் அலி கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது. ஷாருக்கான் 15 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு இறுதிப் போட்டியில் கர்நாடகாவிடம் அடைந்த தோல்விக்குத் தமிழ்நாடு அணி பழிதீர்த்துக் கொண்டதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Yellove ராசி

2021 ஐபிஎல் தொடரை வென்ற தோனி தலைமையிலான சி.எஸ்.கே, டி20 உலகக் கோப்பையை வென்ற ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து, மஞ்சள் ஜெர்ஸியுடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி சையது முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்றிருப்பதாக ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

Also Read – SMAT: டி20 கிரிக்கெட்டில் முதல்முறை… 4 ஓவர்களில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காத அக்‌ஷய்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top