சேலம், நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. 2021 நவம்பரில் அதிக மழைப்பொழிவு இருக்கப் போகிறதா… வானிலை ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
வடகிழக்குப் பருவமழை

ஆண்டுதோறும் அக்டோபர் 20-ல் தொடங்கி ஜனவரி இறுதிவரை பெய்யும் வடகிழக்குப் பருவமழையே தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவைக் கொடுக்கும். வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போகும்பட்சத்தில் கோடையில் குடிநீருக்கு அல்லாடும் நிலை ஏற்படும். இதனால், ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை தமிழகத்துக்கு மிக முக்கியமானது. ஆனால், 1985, 2015 போன்ற சில ஆண்டுகளில் பெரு வெள்ளத்தையும் வடகிழக்குப் பருவமழை கொண்டுவந்ததுண்டு.
நவம்பர் மழை

அக்டோபர் இறுதியில் தொடங்கினாலும் தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்தில் பரவலாக மழைப்பொழிவு பதிவாகும். தமிழகத்தில் குறிப்பாக நவம்பர் 6-ம் தேதி நள்ளிரவுக்கு மேல் அதிகாலைக்குள் பெய்த பலத்த மழை வெள்ளத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. ஒரே நாளில் 23 செ.மீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இரண்டாவதாக, நவம்பர் 14-ம் தேதி மாலை தொடங்கிய மழை தென் மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. இந்த மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பல இடங்களில் வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் மழை நீடித்துக் கொண்டிருக்கிறது. நவம்பர் 17, 18 தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. குறிப்பாக, நவம்பர் 18-ம் தேதி சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு நவம்பரில் அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையத் தரவுகளின்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் மாதம் முழுவதும் பதிவான மழை அளவு 1,000 மி.மீ என்ற அளவை கடந்த 200 ஆண்டுகளில் 4 முறை தாண்டியிருக்கிறது.
1985 நவம்பர் – 1,101 மி.மீ
1918 நவம்பர் – 1,088 மி.மீ
2005 நவம்பர் – 1,078 மி.மீ
2015 நவம்பர் – 1,049 மி.மீ

இதுவரை நவம்பர் மழைப்பொழிவைப் பொறுத்தவரை 1985-ம் ஆண்டு பதிவான 1,101 மி.மீ மழைப்பொழிவுதான் அதிகம். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரை, 11-ம் தேதி மதியம் 2 மணிவரையிலான கணக்கின்படி 700 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. நவம்பர் மாதத்தில் 19 நாட்கள் மீதமிருக்கும் நிலையில், இந்த ஆண்டும் சென்னையில் நவம்பர் மழைப்பொழிவு 1,000 மி.மீ-ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை இரண்டு காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், வடகிழக்குப் பருவமழை காலமான ஜனவரி வரையில் இன்னும் ஐந்து காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள்.