சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேப்பு… அ.தி.மு.க வரலாறு!

அ.தி.மு.க வரலாறு | திராவிடர் கழகத்திலேர்ந்து தி.மு.க பிரிந்தது 1949-ல். ஒரு 10-12 வருஷம் கழிச்சி 1961ல ஈ.வெ.கி சம்பத் அங்கிருந்து பிரிந்தார், அவர் பெரியளவில் சோபிக்கல. தி.மு.க பாத்த சம்பவத்திலேயே பெருசுன்னா அது 1972ல எம்ஜிஆர் செய்த சம்பவம்தான். எம்ஜிஆர் திமுகவுல இருந்து பிரிந்தபிறகு, 1977ல் நெடுஞ்செழியன் மதிமுக ஆரம்பித்தார். என்னாது மதிமுகவான்னு ஷாக் ஆகாதீங்க. திமுகவிலேர்ந்து பிரிந்த நாவலர், மக்கள் திமுகன்ற பேர்ல கட்சி ஆரம்பிச்சார்.

Jayalalithaa - MGR
Jayalalithaa – MGR

அ.தி.மு.க

இந்த இடத்துல நெடுஞ்செழியன் பத்தி ஒரு சுவாரசிய தகவல். திமுகவுல அண்ணாவுக்குப் பிறகு, கருணாநிதிக்குப் பிறகு, அதிமுகவுல எம்ஜிஆருக்குப் பிறகு, அப்புறம் ஜெயலலிதாவுக்குப் பிறகுன்னு இரண்டாம் இடத்துக்குன்னே செஞ்சு செதுக்கப்பட்டவர்தான் நாவலர். நெடுஞ்செழியனுக்குப் பிறகு கடைசியா திமுகவில் வைகோவால் பிளவு ஏற்பட்டது 1994ல். ஆக, இந்த 73 வருஷத்துல 4 தடவை அக்கட்சி பெரிய பிளவை சந்திச்சிருக்கு.

அதிமுக தொடங்கி 50 வருஷம் ஆகுற இந்த சூழல்ல, அந்த கட்சி இதுவரை எத்தனை தடவை பிளவுபட்டிருக்குன்னு வரிசையா பார்ப்போம். அதிமுகவில் முதல் பிளவை தொடங்கி வச்ச்வர் ST சோமசுந்தரம். எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்துகொண்டே எம்ஜிஆர்மேல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய தைரியம் எஸ்டிஎஸ்ஸுக்கு உண்டு. உடனே அவரை கட்சியை விட்டு நீக்கினார் எம்ஜிஆர். பதவி தோளில் கிடக்கும் துண்டு போன்றது என்று உதறிவிட்டு நமது கழகம் என்ற கட்சியை தொடங்கினார் sts, துண்டுன்னு சொன்ன உடன் ஞாபகத்துக்கு வருவது இன்னொரு தமாசு. மீண்டும் அதிமுகவில் சேர்ந்த சில வருடங்களில், ஜெயலலிதாவின் பிரசார வேனில் அதே துண்டை கொண்டு பேலன்ஸ் செய்துகொண்டு வேனில் தொங்கியபடி பாதுகாப்புக்குப் போனது அரசியல் சோகம்.

அ.தி.மு.க-வின் வரலாற்றில் மிகமுக்கிய பிளவு ஏற்பட்டது எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகுதான். ஜானகி அணி, ஜெ அணின்னு கட்சி ரெண்டா உடைஞ்சது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால ஜெ அணி சேவல் சின்னத்துலயும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் நின்னு தேர்தல்ல தோத்தாங்க. ரெண்டு அணிக்கும் தோல்வின்னாலும், ஜானகி அணி படுதோல்வி அடைஞ்சதால அவங்க அரசியல் துறவறம் போய்ட்டாங்க.

Jayalalithaa - MGR
Jayalalithaa – MGR

அ.தி.மு.க வரலாறு

ஜெயலலிதா தலைமையில அதிமுக கட்டுகோப்பா இருந்தது. ஆனாலும் அந்நேரத்துல அங்கேர்ந்து மூணு பேரு பிரிஞ்சு தனிக்கட்சி ஆரம்பிச்சாங்க. இன்னைக்கி திமுக ஆட்சியில வருவாய்த்துறை அமைச்சரா கெத்துகாட்டுற கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஒருகாலத்தில் ஜெயலலிதா குட்புக்கில் இருந்தவர்தான். ஜெ அணி எம் எல் ஏக்களை குதிரைபேரத்துல இருந்து காப்பாத்த, அன்னைக்கி நடந்த கூவத்தூர் எபிசோடை தலைமையேத்து நடத்தி வச்சதே கேகேஎஸ்எஸ்ஆர்தான். ஜெயலலிதாவுக்கும் விசுவாசிகளுக்கும்தான் ஆகாதே. கட்சியேல்ர்ந்து ஒதுக்கப்பட்டார். அதனால அ.பு.த.த.மு.க. அதாவது அண்ணா புரட்சி தலைவர் தமிழக முன்னேற்ற கழகத்தை ஆரம்பிச்சி, பின்னர் திமுகவில் ஐக்கியமானார். இன்னைக்கி செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு இருக்குற பெயரோட இன்ஸ்பிரேஷனே கேகேஎஸ்எஸ்ஆரோட கட்சி பேருதான்னா பாருங்க.

தன்னுடைய 27ஆவது வயதில் எம்எல்ஏவான திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவின் குட்புக்கிலிருந்து பேட்புக்கிங்கிற்கு தடம் பெயர்ந்தர்தான். எனவே, அவர் பங்குக்கு எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கி, பின்னர் பாஜகவில் கரைந்து தற்போது காங்கிரஸில் ஐக்கியமாகி இருக்கிறார். அடுத்ததாக வரிசையில் இடம்பெறுபவர் ஆர் எம் வீரப்பன். ரஜினியின் அரசியல் எண்ட்ரியை எதிர்பார்த்து அதிகம் ஏமாந்தது RMV தான். பாட்ஷா பட தயாரிப்பாளராக இருந்து ரஜினிக்காக எம்ஜிஆருடன் சேர்ந்து வளர்த்தெடுத்த அ.தி.மு.க-வைவிட்டே விலகி எம்.ஜி.ஆர் கழகம் தொடங்கினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்சி தொடங்கப்படும், தேதி பின்னர் அறிவிக்கப்படும்னு ரஜினி சொன்ன செய்தியைக் கேட்டு, இது மட்டும் இன்னும் மாறவே இல்லன்னு RMV விட்டேத்தியாக சிரித்திருப்பார். பாவம், கால் நூற்றாண்டு வலி இருக்கத்தானே செய்யும்.

Jayalalithaa
Jayalalithaa

ஒருவழியா pre climax-க்கு வந்துட்டோம்ங்க. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்ற மாதிரி அணி வச்சிருந்தவங்கெல்லாம் தனிக் கட்சியா மாறிட்டாங்க. ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்குறார். கூவத்தூர் களைகட்டுகிறது. சசிகலாவால் முன்னிலைப்படுத்தபடுகிறார் இபிஎஸ். இபிஎஸ் தலையெடுத்து, சசி டிடிவியையே ஓரங்கட்டுகிறார். இபிஎஸ் ஓபிஎஸ் அணி ஒருவழியாக இணைகிறது அல்லது இணைக்கப்படுகிறது. அந்தப்பக்கம், டிடிவி தினகரன் தனி அமமுக தொடங்குகிறார். நான் மட்டும் என்ன தொக்கா என நினைத்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், அண்ணா திராவிடர் கழகம்னு ஒரு கட்சி தொடங்குறார். ஓபிஎஸ் – இபிஎஸ் இரட்டை தலைமையிலான அதிமுக, சசிகலா வெர்ஷன் அதிமுக, டிடிவியின் அமமுக, திவாகரனின் அ.தி.க. என ஒருபக்கம் சீரியசாக கட்சிகள் காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருந்தப்பதான், இந்தப்பக்கம் செம காமெடியான காட்சிகளும் நடந்தன.

Also Read – சென்னை மேயர் பிரியா.. பாஸா? தமாஸா?

ஜெயலலிதா உயிரோட இருந்தவரைக்கும் மாவட்ட செய்திகள்லகூட தென்படாத தீபாவும் தீபக்கும், அதன்பின் தலைப்புச் செய்திகள்ல வர ஆரம்பிச்சாங்க., எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைன்னு ஒண்ணை தீபா தொடங்கினார். தன்னுடைய கணவர் மாதவனைவிடவும் அதிகம் தீபா நம்பியது அவரது கார் ஓட்டுநர் ராஜாவைத்தான். இதனால் வெகுண்டெழுந்த மாதவன், எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம்னு தனியா கட்சித் தொடங்கினார். தனியான்னா, லிட்டரலா அவர் மட்டுமே தனியா தொடங்கினார். ராஜாவை கட்சியிலிருந்து விலக்குவதும், பின்னர் சேர்ப்பதுமாக சில நாட்கள் பிசியாக இருந்த தீபா இப்போது கட்சியிலிருந்து நீக்க ஆட்கள் இல்லாததால் திரும்பவும் ஓய்வு மோடில் இருக்கிறார்.

காங்கிரசுக்கே தண்ணி காட்டிய தி.மு.க-வே, எம்.ஜி.ஆர் மறைவு வரை ஆட்சி அமைப்பது பற்றி நினைச்சசுக்கூட பாக்க முடியல. ஒரே கட்சி இரண்டாவது தடவை ஆட்சியை தக்க வச்ச பெருமையும் அ.தி.மு.க-வுக்குதான். நாடாளுமன்றத்தில் மூணாவது பெரிய கட்சியாக இருந்தது, சொந்த கட்சியில மட்டும் இல்லாம கூட்டணி கட்சிகளையும் கூட பம்மி நிக்க வச்சதின்னு அதிமுகவோட வரலாறு சும்மா ஜிவ்வுன்னு இருக்கும். ஆனா அவ்ளோ உயரததுல இருந்த அந்த கட்சி இன்னிக்கி படுபாதாளததுல கிடக்கு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லைன்னு ஜெயலலிதாவை கம்பீரமா சொல்ல வச்ச இந்த கட்சியில தான், கண்ணுக்கு முன்னாடி நின்ன அத்தனை பேரும் ஒருத்தரை மாத்தி ஒருத்தர் காலை வாருன கொடுமையும் நடந்தது.

ராணுவ கட்டுக்கோப்போடு இருந்த கட்சியோட தலைமை இன்னிக்கி யாருகிட்ட இருக்குன்னு யாருக்கும் தெரியாது. எல்லாம் மேப்ல மேல இருக்குறவன் பாத்துக்குவான்னு எல்லாரும் வெய்ட்டிங். சரி, இவ்ளோநேரம் பொறுமையா கதைகேட்ட உங்ககிட்ட ஒரு கேள்வி. அதிமுகன்ற ஒரு மெகாகட்சியை இன்னிக்கி கண்ட்ரொல்ல யாரு வச்சிருக்காங்க, கரெக்ட்டா சொல்லுங்க பாப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top