தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாகத் தமிழக அரசு அறிவித்து, பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. மணோன்மணீயம் சுந்தரனாரின் `நீராருங்கடலுடுத்த..’ பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக முதல்முதலில் 1970-ல் தமிழக அரசு தேர்வு செய்தது.
தமிழ்த்தாய் வாழ்த்து
1970-களுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள் உள்ளிட்டவைகளில் இறை வணக்கப் பாடல்கள் பாடப்பட்டே தொடங்கப்படுவது வழக்கம். அண்ணா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஒரு பாடலைத் தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து, திருநெல்வேலி இந்துக் கல்லூரி முதல்வராக இருந்த மனோன்மணீயம் பெ. சுந்தரனார் எழுதிய `நீராருங்கடலுடுத்த..’ எனத் தொடங்கும் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகத் தேர்வு செய்தனர். 1891-ல் சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் நாடகத்தில் அவர் தமிழுக்காக எழுதியிருந்த வாழ்த்துப் பாடல் இது.
அதேநேரம், அந்தப் பாடலில் இருந்த,
`பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையாளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்துசிதையாவுன்’ என்ற ஐந்து வரிகள் நீக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஏற்கப்பட்டது.
தமிழ் மொழியை வாழ்த்தும் இப்பாடலில், `ஆரிய போல் உலக வழக்கழிந் தொழிந்து’ என்று வரும் வரியை, வாழ்த்துப் பாடலில் ஒப்புமையும் வேண்டாம் பிறிதொரு மொழி அழிந்ததை குறிக்கவும் வேண்டாம் என சில வரிகளை நீக்கி அந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாட வேண்டும் என்றது அப்போதைய தி.மு.க அரசு.
தமிழ்த்தாய் வாழ்த்து எதிர்ப்பும் ஆதரவும்
சென்னையில் 1970-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி நடைபெற்ற அரசு விழா ஒன்றில், இந்தப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார். இறைவணக்கப் பாடலுக்குப் பதிலாக நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இந்தப் பாடல் பாடப்பட வேண்டும் என்றும் அவர் அறிவித்ததை சிலர் ஏற்கவில்லை. கலைமகள்’ மாத இதழின் ஆசிரியர் கி.வா.ஜெகநாதன் உள்ளிட்டோர் அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்தனர். அதற்கு முன்பு வரை,வாதாபி கணபதே..’, கஜவதனா கருணாகரணா..’ உள்ளிட்ட விநாயகர் பாடல்களே இறைவணக்கப் பாடல்களாகப் பாடப்பட்டு வந்தன.
கடவுளும் தமிழ்த்தாயும் ஒன்றல்ல. அதற்குப் பதிலாக தாயுமானவர் எழுதிய `அங்கிங்கெனாதபடி..’ பாடலைப் பாடலாம்’ என்பது எதிர்ப்பாளர்களின் வாதமாக இருந்தது. ஆனால், மூத்த தமிழறிஞர்களான ம.பொ.சி, மு.வரதராசனார், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை உள்ளிட்ட அறிஞர்கள் தமிழக அரசின் முடிவை மனமுவந்து வரவேற்றனர். இதனால், தமிழக அரசின் முடிவுக்கு எழுந்த எதிர்ப்பு அடங்கியது.
1970-ம் ஆண்டு அரசாணை
அரசு விழாக்கள், உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தொடக்கத்திலேயே பாட வேண்டும் என தமிழக அரசு 1970 நவம்பர் 23-ம் தேதி அரசாணையாக வெளியிட்டது. அதன்பிறகு சுமார் 51 ஆண்டுகளாக இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. தமிழக அரசின் அப்போதைய இணைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் பெயரில் வெளியான உத்தரவில், `அரசின் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிலையங்களில் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து நிகழ்ச்சிகள் தொடங்கும்போதும் (முடியும்போது அல்ல) திரு.பி.சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் நாடகத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலே இறைவணக்கப் பாடலாகப் பாடப்பட வேண்டும். மேலும், அந்தப் பாடல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் பாடப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த அரசாணையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற எந்தவொரு வரியும் இடம்பெறவில்லை.
மாநிலப் பாடல்
இந்தநிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களை இசை வட்டுகளில் இசைப்பதைத் தவிர்த்து பயிற்சிப் பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாட வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!”
cyai1v